search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.
    X
    ஈரோட்டில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.

    ஈரோட்டில் கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    ஈரோட்டில் கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே தேர்தலில் கூட்டணி வியூகம் அமைக்கும் பணிகள் அரசியல் கட்சியினரிடையே தொடங்கப்பட்டு உள்ளன. பிரபல கட்சிகளுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமையும் என்கிற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் கட்சிக்கொடிகள், தோரணங்கள் ஆங்காங்கே கட்டப்படுவது வழக்கம். குறிப்பாக தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்கும் இடங்களில் வழிநெடுகிலும் கட்சிக்கொடிகள் கட்டப்படுகின்றன. எனவே தேர்தல் பிரசாரத்தில் கட்சிக்கொடிகள் தேவை அதிகமாக இருப்பதால், அதை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜவுளி மாநகரமாக திகழும் ஈரோட்டில் கட்சிக்கொடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் கடைகளில் கட்சிக்கொடிகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து கட்சிக்கொடிகளை தயாரிக்கும் ஒருவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு கட்சிக்கொடிகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் சமயத்தில் அதிகமாக கட்சிக்கொடிகள் விற்பனை செய்யப்படும் என்பதால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கட்சிக்கொடிகளை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். தயாரிக்கப்பட்ட கட்சிக்கொடிகளை விற்பனைக்காக வைத்து உள்ளோம்.

    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிக்கொடிகள் அதிகமாக தயார் செய்வோம். இந்த கொடிகள்தான் அதிக அளவில் விற்பனையாகிறது. மேலும், பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிக்கொடிகளையும் தயாரிக்கிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் தேர்தல் பிரசாரம் இன்னும் சூடுபிடிக்க தொடங்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து ஆர்டர் குறைவாக காணப்படுகிறது. அதேசமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு பிரசாரம் தீவிரமாக இருக்கும். அப்போது கட்சிக்கொடிகள் அதிகமாக விற்பனையாகும். இதற்காக கட்சிக்கொடிகளை அதிகமாக தயாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×