என் மலர்
ஈரோடு

டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜீவா. இவர்களது மகன் ரகுநாத் (வயது 15), அந்தியூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணக்கம்பாளையம் கரும்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
சம்பவத்தன்று கருப்பாறை ஓடையில் துணி துவைக்க உறவினர்களுடன் சென்ற ரகுநாத் ஓடையில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைகண்டு உறவினர்கள் சத்தம் போட்டனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ரகுநாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரகுநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி புதிய பஸ் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான சாயத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த தொழிற்சாலையின் உள்ளே இருந்து சத்தம் வந்ததை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தொழிற்சாலையின் உரிமையாளர் கண்ணையனுக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி பவானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது மர்மநபர்கள் 2 பேர் உள்ளே இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் வெங்கடேசன் (42), பவானி காவிரி நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் குமார் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த மின்சார ஒயரை திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தை கடை மேடு பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 65). இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர் அருகே கொடிவேரி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
அவருடைய மனைவி ராஜாமணி. இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவியின் பிரிவு அய்யாசாமியை மிகவும் வாட்டியது. துயரத்துடனே காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அய்யாசாமி மனம் உடைந்தார். ஒரு கட்டத்தில் “இனி வாழ்வதை விட சாவதே மேல்” என்ற முடிவுக்கு வந்தார். இதனால் நேற்று முன்தினம் காலை விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அய்யாசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த அய்யாசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு கடந்த 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன், ஈங்கூர் சிப்காட் ரோடு, மேற்கு வீதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகள் சவுபர்ணிகா (17). இவர் ஈங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைனில் நடத்தப்பட்ட கணக்கு பாடத்தில் சவுபர்ணிகா மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார்.
இது குறித்து தாய் ருக்குமணி நல்லா படிக்க வேண்டும். அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சவுபர்ணிகா சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தினை (விஷம்) சாப்பிட்டார்.
இதனையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவி சவுர்பணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகர் என்றால் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை கொண்டதாக உள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு வருகிறார்கள்.
தற்போதைய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஈரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து ஆஸ்பத்திரிகளின் படுக்கைகளும் நிரம்பி உள்ளன.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 109 பேர் கோவிட் -19 பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவை என்ற கட்டாயம் இருந்தது.
ஆனால், சமீபகாலமாக காய்ச்சல் என்று அனுமதிக்கப்படுபவர்களும் மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி ஆக்சிஜன் வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவர்களின் சிரமம் கருதி ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளித்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளனர்.
இதுபோன்ற நிலை தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உள்ளது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பிரபலமான மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் எதிர்பாராத வகையில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடையே பதற்றத்தையும், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் விரைவாக ஆக்சிஜன் தயாரிக்கவும், மத்திய அரசிடம் இருந்து தேவையான ஆக்சிஜனை பெறவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல் மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு தேவை என்றால் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகளை நோயாளிகள் தேர்ந்து எடுக்க வேண்டும். மருந்து மாத்திரையில் குணப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, உண்மையிலேயே ஆக்சிஜன் தேவையானவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிடக்கூடாது என்றும் மருத்துவத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 8-ந் தேதி காலையில் வெளியானது. இந்த ஊரடங்கையொட்டி 8-ந் தேதியும், 9-ந் தேதியும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக 2 வாரங்களுக்கு மது கிடைக்காது என்பதால், டாஸ்மாக் கடைகளை நோக்கி மது பிரியர்கள் படை எடுத்தார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி சென்றார்கள். மேலும், பலர் மது பாட்டில்களை அள்ளிச்சென்றதையும் காணமுடிந்தது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் ரூ.16 கோடியே 76 லட்சத்துக்கு மது விற்பனையானது. நேற்று முன்தினமும் மது விற்பனை ஜோராக நடந்தது. பலர் பெரிய பைகளை கொண்டு வந்து அதிக மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
2-வது நாளான நேற்று முன்தினமும் ஒரே நாளில் ரூ.15 கோடியே 70 லட்சத்து 8 ஆயிரத்து 650-க்கு மதுவிற்பனையாகி உள்ளது. எனவே 2 நாட்களில் சுமார் ரூ.32 கோடிக்கு மது விற்பனையானது.
கொடுமுடி அருகே வெற்றிக்கோனார் பாளையத்தில் தேங்காய் நார்மில் உள்ளது. இதன் உரிமையாளர் கம்மங்காட்டு களத்தை சேர்ந்த சோமசுந்தரம் (64) ஆவார். இவரது நார் மில்லினை காங்கயம் அருகே ஆலாம்பாடியை சேர்ந்த செந்தில் (35) என்பவர் கடந்த 2 வருடங்களாக லீசுக்கு ஓட்டி வருகிறார். இந்த மில்லில் வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்த 7 பேர் உள்பட 15 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் மதியம் சுமார் 1.30 மணியளவில் நார்மில்லினை ஒட்டி உள்ள மற்றொரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். திடீரென நார்மில்லில் நார் கொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக கொடுமுடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ வேகமாக நார் இருந்த பகுதி முழுவதும் பரவியது. தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் கரும்புகையுடன் கூடிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. புகையை பார்த்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.
மேலும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். 2 தீயணைப்புத் துறை வீரர்களும் 6 மணி வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.






