search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவால் மரித்துப்போன மனிதாபிமானம்: பெற்ற தாயை வீட்டுக்குள் விட மறுத்த மகள்

    கொரோனாவால் மனிதாபிமானம் மரித்து போய்விட்டது என சொல்லும் அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயையே வீட்டுக்குள் விட மகள் மறுத்த சம்பவம் நடந்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த 60 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்களும் திருமணம் முடிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் மூதாட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அங்கிருந்து புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தன்னுடைய மகள் வீட்டுக்கு வந்து உள்ளார்.

    கோப்புப்படம்

    ஆனால் மூதாட்டியை மகள் வீட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. இதனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் கவலையுடன் உட்கார்ந்தார். கொரோனா பாதிக்கப்பட்டவர் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த யாரும் அவரின் அருகில் செல்லவில்லை. இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியை வீட்டுக்குள் அனுமதிக்கும்படி வேண்டி கேட்டுக்கொண்டார். எவ்வளவோ வேண்டி கேட்டும் மூதாட்டியின் மகள் மற்றும் குடும்பத்தினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    பின்னர் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ்காரர் ஒருவர் வந்து மூதாட்டியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் அவர்கள் வீட்டுக்குள் மூதாட்டியை அனுமதிக்கவில்லை. நீங்கள் இன்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு மட்டும் வீட்டின் முன் பகுதிக்குள் அனுமதியுங்கள். நாளை (அதாவது நேற்று) காலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறோம் என்றார். இதில் ஓரளவுக்கு மூதாட்டியின் குடும்பத்தினர் மனம் இறங்கி வந்தனர்.

    இதையடுத்து யாரும் தொட பயந்த மூதாட்டியை போலீஸ்காரர் செந்தில் கைத்தாங்கலாக தாங்கி பிடித்து வீட்டின் முன்புறத்தில் உள்ள போர்டிகோ பகுதிக்கு இரவு 9.30 மணி அளவில் அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு கயிற்று கட்டிலில் மூதாட்டியை படுக்க வைத்துவிட்டு காவல் பணி செய்ய செந்தில் சென்றுவிட்டார்.

    நேற்று காலை 9 மணி அளவில் மூதாட்டியின் வீட்டுக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. பின்னர் அந்த ஆம்புலன்சில் மூதாட்டியை நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    Next Story
    ×