என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் விவசாயிகள் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து ஒரு யானை வெளியேறி கார்த்திகேயன் (வயது30) என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது, வனவிலங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க அவர் தோட்டத்தை சுற்றி அமைத்து இருந்த மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக விவசாயி கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாநகர் பகுதியில் சம்பத்நகர், பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. இங்கு கூட்ட நெரிசலை தவிர்க்க குமலன் குட்டையில் தற்காலிக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டமும் அதிகரித்தது,
எனவே இந்த கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.
அதன்படி நேற்று முதல் அரசு மகளிர் பள்ளிக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்க தொடங்கியது. உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சந்தைக்குள் வரும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சாதாரண வெப்பநிலை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் கை சுத்தம் செய்யும் திரவம் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே சந்தைக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை உழவர் சந்தை அரசு பள்ளிக்கூட மைதானத்தில் இயங்கும்.
அதுவரை பெரியார் நகர், சம்பத் நகர் உழவர் சந்தைகள் இயங்காது. குமலன்குட்டையில் உழவர் சந்தை இனி செயல்படாது என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.
தாளவாடி கர்நாடக எல்லையில் உள்ள மலைக்கிராமம் ஆகும். இதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவைகள் நன்கு பழுத்து தற்போது பறிப்பதற்கு தயாராக உள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் யாரும் தக்காளியை வாங்க முன் வரவில்லை. இதனால் தக்காளிகளை பறித்து விவசாயிகள் குப்பையில் கொட்டும் அவலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து தாளவாடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
தக்காளி 3 மாத பயிராகும். இதில் நாற்று நட, களை எடுக்க, உரம், மருந்து தெளிக்க ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியை 8 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரிகள் யாரும் தக்காளியை கொள்முதல் செய்யாததால் பழுத்த தக்காளியை பறித்து அப்படியே குப்பையில் கொட்டி வருகிறோம். சிலர் தக்காளியை பறிக்காமல் அப்படியே செடியிலேயே விட்டு விடுகின்றனர். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து தற்போது நஷ்டம் அடைந்துள்ளோம். கடனால் அவதிப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி கடைகள் செயல்படுகிறதா? பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறார்களா? என போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.
இதேபோல் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்திரம், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த குமார் மற்றும் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரி பகுதி, பஸ் நிலையம், மார்க்கெட், பாரியூர் ரோடு, நஞ்ச கவுண்டன்பாளையம் பிரிவு உள்பட பல பகுதிகளில் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதிகளில் சிலர் சைக்கிளில் கேன்களில் டீ வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
அங்கு மக்கள் கூட்டமாக நின்று கொண்டு டீ குடித்தனர்.இதையடுத்து சைக்கிளில் கேன் வைத்து டீ விற்பனை செய்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி அறிவுரை கூறினர். மேலும் அவர்களிடம் இருந்து 13 டீ கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்ற கூடாது. சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் டீ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்கள் பலவேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதே போல் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அந்தியூர், பவானி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பவானி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது 46 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 10 படுக்கைகளில் மட்டுமே ஆக்சிஜன் வழங்கும் வசதி உள்ளது. மற்ற படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி இல்லை. ஆனால் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பலர் சுவாச பிரச்சனையால் அவதிபட்டனர்.
அவர்கள் ஆக்சிஜன் வசதி வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள் இருதய துடிப்பை கண்டறியும் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 2 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கினர். இதனால் நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்தனர்.
செவிலியர்களின் இந்த முயற்சியை மற்ற நோயாளிகள் பாராட்டினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி, அந்தியூர் ஐடியல் பள்ளி, கல்லூரிகளில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அனைத்தும் மருத்துவமனையும் நிரம்பி வழிகின்றன.
ஈரோடு மாநகர் பகுதியில் லேசன அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும், வீடுகளில் தனிமை படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு தற்போது 500 படுக்கைகளும் நிரம்பி விட்டதால் திண்டலில் உள்ள வேளாளர் என்ஜினீயர் கல்லூரியில் 250 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் ஈரோடு மாநகராட்சி மண்டபத்திலுள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு 5 வகையான பரிசோதனைகள் முடிக்கப்பட்டு அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இருந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அப்படி இல்லையென்றால் அவர்களை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள 500 படுக்கைகளும் நிரம்பி விட்டதால் திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 250 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 70 நோயாளிகள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி மண்டல துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன் மற்றும் போலீசார் இணைந்து அங்குள்ள முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பழைய காவல் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஒரு ஜவுளிக்கடை திறந்திருந்தது. மேலும் விற்பனையும் நடைபெற்று வந்தது.
அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடையின் உரிமையாளர் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பதும், அரசு விதிகளை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக உள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செய்யும் வகையிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளார். முதல் கட்டமாக மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமித்ததுடன், பொதுமக்களுக்கு அரசும் அதிகாரிகளும் உதவும் வகையில் கொரோனா ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் (வார் ரூம்) அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வார் ரூம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புதிதாக தொடங்கப்பட்டு உள்ள வார் ரூம் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்த அமைச்சர் சு.முத்துசாமி, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளின் அத்தியாவசிய சேவை குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன், மருந்து வகைகள், படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் போன்ற சந்தேகங்களுக்கு இந்த வார் ரூமை பொதுமக்கள் தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பரிவாக பேசி வழிகாட்ட வேண்டும். இது தொடர்பாகவே அழைப்புகள் வரும் என்பதால் கடினம் காட்டாமல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இங்கு ஒரு தாசில்தார், ஒரு டாக்டர், இரு மனநல நிபுணர்கள், அச்சுதம் அறக்கட்டளை சேவகர்கள் சுழற்சி முறையில் பணி செய்வார்கள்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 150 படுக்கைகள், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் உள்ளன. பெருந்துறை வளாகத்தில் 10 நாட்களில் கூடுதலாக 300 படுக்கைகளும், அடுத்தகட்டமாக மேலும் 300 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட உள்ளன.
தினமும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளின் படுக்கை வசதிகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர், காப்பீடு வசதி பெறுதல் போன்ற விவரம் இந்த மையத்துக்கு வழங்கப்படும்.
அதன் அடிப்படையில் நோயாளிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கலாம். கொரோனா பரிசோதனை, ஸ்கேன் செய்தல், இறந்தவரை தகனம் செய்தல் போன்ற தேவைக்காக யாராவது தொடர்பு கொண்டாலும், அவர்களது செல்போன் எண்களை பெற்று உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டபிறகு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
முன்னதாக வார் ரூம் அலுவலகத்தை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோமதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கின்போது டவுன் டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு பெருந்துறை ரோடு உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். அப்போது தேவையில்லாமல் இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
நேற்று ஒரேநாளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்ததாக 802 வழக்குகளும், முககவசம் உட்பட அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் வந்ததாக 226 வழக்குகளும் என மொத்தம் 1000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் 87 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னிமலை பகுதியில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய 12 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டு 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா வேனில் முககவசம், சமூக இடைவெளி இல்லாததால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.






