என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்
    X
    தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

    ஊரடங்கால் விற்பனை பாதிப்பு- தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

    ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் யாரும் தக்காளியை வாங்க முன் வரவில்லை. இதனால் தக்காளிகளை பறித்து விவசாயிகள் குப்பையில் கொட்டும் அவலம் நிலவி வருகிறது.
    தாளவாடி:

    தாளவாடி கர்நாடக எல்லையில் உள்ள மலைக்கிராமம் ஆகும். இதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்தப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவைகள் நன்கு பழுத்து தற்போது பறிப்பதற்கு தயாராக உள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் யாரும் தக்காளியை வாங்க முன் வரவில்லை. இதனால் தக்காளிகளை பறித்து விவசாயிகள் குப்பையில் கொட்டும் அவலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தாளவாடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    தக்காளி 3 மாத பயிராகும். இதில் நாற்று நட, களை எடுக்க, உரம், மருந்து தெளிக்க ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியை 8 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரிகள் யாரும் தக்காளியை கொள்முதல் செய்யாததால் பழுத்த தக்காளியை பறித்து அப்படியே குப்பையில் கொட்டி வருகிறோம். சிலர் தக்காளியை பறிக்காமல் அப்படியே செடியிலேயே விட்டு விடுகின்றனர். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து தற்போது நஷ்டம் அடைந்துள்ளோம். கடனால் அவதிப்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
    Next Story
    ×