என் மலர்
ஈரோடு
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்கு உட்பட்ட ஜீர்கள்ளி வனச்சரத்தில் ஏராளமான புலி, சிறுத்தை, மான், யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது.
இந்நிலையில் புலி, சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. குறிப்பாக அருள்வாடி, சொத்தன்புரம், குருபர குண்டி பகுதியில் கடந்த 1 வருடமாக ஆடு, நாய்களை வேட்டையாடி வந்தது.
இந்நிலையில் குருபரகுண்டி கல்குவாரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 10 நாட்கள் முன்பு கூண்டு வைத்தனர். இதனையடுத்து இன்று காலை வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கி இருந்தது தெரியவந்தது.
கூண்டில் சிக்கிய சிறுத்தை 4 வயதுள்ள ஆண் சிறுத்தை என்றும், பிடிபட்ட சிறுத்தை அதிகாரிகள் ஆலோசனைபடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 1 வருடமாக பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு போக்குகாட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஈரோடு பழைய ரெயில்வே நிலையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). இவர் சேலம் ரூரல் டி.எஸ்.பி. ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரெயில்வேயில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அதே குடியிருப்பு பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் 29 வயதான பெண் ஒருவர் ரெயில்வே போலீசில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லை.
பெண் போலீசிடம் செல்வன் நட்பாக பழகி வந்தார். சம்பவத்தன்று செல்வன் அந்த பெண் போலீஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், தவறாக நடக்க முயற்சி செய்தல், பெண் வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் செல்வன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் மலை குன்ற கிராம பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸ் குன்றி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது பரமேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்த கொண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பரமேஸ்வரிக்கு வாகனத்திலேயே பிரசவம் பார்த்தனர். இதில் பரமேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் - சேயும் கடம்பூர் அரசு துணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இக்கட்டான சூழ்நிலையில் சமயோசிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விஜய் மற்றும் வாகன ஓட்டுநர் அரப்புலி சாமி ஆகியோரை கிராம மக்கள் பாராட்டினர்.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் இன்னும் முழுவதுமாக முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. இது மற்ற வைரசை விட பரவும் தன்மை அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு ஏற்றது போல் ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
இதனால் மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து மாவட்ட கலெக்டர்களும், சுகாதாரத்துறையினரும் உஷார்படுத்தப்பட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் அவர்களுக்கு இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் பாதிப்பு இல்லை என முடிவு வந்தால் தான் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்கள் அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு வாரம் கழித்து மீண்டும் இரண்டாம் கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு இல்லை என்று முடிவு வருபவர்கள் மட்டுமே வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் நேற்று வரை 360 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இதில் 324 பேருக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும் 36 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.






