என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஈரோடு கலைமகள் பள்ளியில் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 4,126 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
கொரோனா பரவலை குறைக்கும் வகையில் 15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இன்று தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்திலும் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 23,77,315 மக்கள் வசிக்கின்றனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9,100 பேர் உள்ளனர். இதுவரை 15 லட்சத்து 88 ஆயிரத்து 357 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
இரண்டாம் தவணை தடுப்பூசியை 11 லட்சத்து 31 ஆயிரத்து 802 பேர் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 126 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளி 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். சுகாதாரபணிகள் இணைஇயக்குனர் சோமசுந்தரம், நகர் நல அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் முதல் தடுப்பூசியை 87.8 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 67.56 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர்.
தடுப்பூசிகள் அதிகம் செலுத்தி கொண்டதில் ஈரோடு மாவட்டமும் ஒன்று. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் செலுத்திக் கொள்ளவேண்டும். 15 வயது முதல் 18 வயது வரை சிறுவர்களுக்கு இன்று முதற்கட்டமாக 92 பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்காக 452 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 60 வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. இன்னும் 5 நாட்களுக்குள் 15 முதல் 18 வயதுடைய அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 3,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






