என் மலர்tooltip icon

    ஈரோடு

    இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு :

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் உருமாறிய ஒமைக்காரன் தொற்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

    மேலும் இரவு நேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவு மக்கள் கூடுவார்கள்.

    இதை தவிர்க்கும் வகையில் நாளை சுற்றுலா தலங்களுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடுவார்கள். மேலும் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் பரிகாரங்கள் செய்ய தமிழகம் ழுமுவதும் இருந்து மக்கள் அதிகளவு வருவார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையொட்டி கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பகுதியில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுகாவுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள்.

    நாளை முழு ஊரடங்கையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை பவானிசாகர் பூங்காவுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி அணை பூங்கா நுழைவு வாயில் அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கோபி அடுத்த கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், கண்டு ரசிப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். மேலும் சனி, ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு கொட்டி வந்ததால் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடிவேரி தடுப்பணையில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அதிளவில் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர்.

    இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி கொடிவேரி தடுப்பணையில் மக்கள் குளிக்கவும், கண்டு கழிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் குளிக்கவும், சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் செயல்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கின் போது வ.உ.சி. காய்கறி மார்க்கெட் இயங்காது

    ஈரோடு:

    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் செயல்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

    ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக  கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

    இங்கே 730-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும். 100-க்கும் மேற்பட்ட பழ கடைகளும் இயங்கி வருகின்றன. இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அத்துடன் ஒமைக்ரான் தொற்றும் அதிகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. 

    அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்  போது  கடைகள் வணிக நிறுவனங்கள் அடைக்கப் பட்டிருக்கும்.

    ஆனால் அதேநேரம் அத்தியாவசிய பொருட்க ளான பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது ஈரோடு வ.உ.சி பகுதியில் இங்கும் நேதாஜி காய்கறி மார்க்கெட் அன்று ஒரு நாள் முழுவதும் இயங்காது என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் மற்ற காய்கறி மார்க்கெட்டுகளும் இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
    இரவு நேர ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
    ஈரோடு:

    இரவு நேர ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழகஅரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
     
    தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு  வந்தது.

    இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு ஜி.ஹெச்.ரவுண்டானா, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை, பஸ் நிலையம், கருங்கல் பாளையம், ஸ்வஸ்திக் கார்னர், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள  மேம்பாலம் போன்ற பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

    ஆனால் அதேநேரம் அத்தியாவசிய வாகனங்களான பால், காய்கறி, மருந்து, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சேவை மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள்  திறக்கப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தடையை மீறி ஒரு சில வாகன ஓட்டிகள் வெளியே சுற்றி வந்தனர்.

    முதல் நாள் என்பதால் அவர்களை பிடித்து எச்சரித்த  போலீசார் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதேப்போல் ஒரு சில பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேலும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அந்த கடை உரிமையாளர்களிடம் போலீசார் கடையை அடைக்க வலியுறுத்தினர். 

    இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், பவானிசாகர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ஈரோடு மாவட் டத்தில் தமிழக-கர்நாடக மாநில எல்லைகளான ஆசனூர், பர்கூர் சோதனை சாவடி மற்றும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், திருப்பூர், கரூர் மாவட்ட எல்லைகளில் உள்ள 12 சோதனைசாவடி என மொத்தம் 14 சோதனைசாவடிகளிலும் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன. தடை மீறி சுற்றிய வாகனங்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

     பவானி லட்சுமிநகர் பைபாஸ் பகுதியில் இரவில் சுற்றிய வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    பெருந்துறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து  நகை மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெருந்துறை அடுத்த  விஜயமங்கலம் பகலாயூர் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 41).  இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவினாசியில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டு விட்டு டிராக்டர் ஓட்டுவதற்காக வெளியூர் சென்று விட்டார்.

    இந்த நிலையில் யோகநாதன் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. 

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.   இது குறித்து யோகநாதன் தனது மனைவிக்கு போன்  மூலம் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் ஆரம், 5 பவுன் செயின், அரை பவுன் தோடு, 11 பவுன் தங்க காசுகள் என மொத்தம் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது  தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 31 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    ஈரோடு:

    கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளன. 

    கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை  என்பதால்  இன்று முதல் 3 நாட்கள் கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. இது தவிர சிறிய கோவில்கள் அறக்கட்டளை கோவில்கள் உள்ளன. 

    மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இன்று பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. 

    ஈரோடு மாநகரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன், கோட்டை பெருமாள், கருங்கல்பாளையம் மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன் போன்ற கோவில்களில் இன்று காலை பொதுமக்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.
     
    ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. 

    ஆனால் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தாலும் நூற்றுக்கணக்கான மக்கள் கோவில் வெளியே நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    இதேப்போல் சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், குருநாதர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பெருமாள்மலை கோவில், செல்லாண்டி அம்மன், தேவபுரம் கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பச்சைமலை பவளமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் போன்ற கோவில்கள் முன்பு இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நின்று பக்தர்கள் வழிப்பட்டு சென்றனர். பரிகாரம் செய்ய 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. புனித  நீராட வருபவர்கள் அய்யப்ப சேவா மண்டப படிதுறை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மொடக்குறிச்சி அருகே வடமாநில பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் ராச்சிபூர் மாவட்டம் தானியாபார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதிதாலேய் (வயது 26). இவரது தங்கை புஷ்பாதாலேய் (24). அக்கா தங்கை இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் தொட்டி பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் ஸ்ரீமதிதாலேய் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தங்கை அக்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீமதிதாலேய் தான் ஒருவரை காதலித்ததாகவும் அவர் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அக்காவை புஷ்பாதாலேய் சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீமதிதாலேய் வேலைக்கு விடுப்பு எடுத்து அறையில் தங்கி இருந்தார்.

    பின்னர் அவர் அவரது தங்கை மற்றும் அறையில் தங்கி இருந்தவர்கள் இரவில் தூங்க சென்று விட்டனர். அதிகாலையில் புஷ்பாதாலேய் எழுந்து பார்த்தபோது அக்கா ஸ்ரீமதிதாலேய் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீமதிதாலேய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கணவருடன் விவாகரத்தானதால் மனம் உடைந்த சட்ட கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மெகபூப் பாஷா. இவரது மகள் சாஹினா பீவி (வயது 30). இவர் கோவை அரசு சட்ட கல்லூரியில் பி.எல். இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கும் முகமது உவைஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாஹினா பீவி மற்றும் அவரது கணவர் முகமது உவைஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கடந்த 2018-ம் ஆண்டு சாஹினா பீவி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து உறுதியானது. இதனால் சாஹினா பீவி தன் மகனை எப்படி காப்பாற்றுவது என மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சாஹினா பீவி தேர்வுக்கு படிப்பதாக கூறி தனது வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது அவரை டீ குடிக்க அழைத்தனர். நீண்ட நேரம் அழைத்தும் அவர் கீழே இறங்கி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை மெகபூப் பாஷா சென்று பார்த்தார். அப்போது அவர் இருந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை திறந்து பார்த்தபோது சாஹினா பீவி தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாஹினா பீவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் இன்று பஸ்களில் சமூக இடைவெளியின்றி கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று பஸ்களில் சமூக இடைவெளியின்றி கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும்  அமலுக்கு வந்துள்ளன. முக்கியமாக பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
     
    இந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 பணிமனைகளில் இருந்து தினமும் 780-க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், உள்ளூருக்கும் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் பஸ்சில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. முககவசம் அணியாமல் வந்த பயணிகள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்படவில்லை. 

    ஆனால் அதே சமயம் பெரும்பாலான பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மாநகர் பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சமூக இடைவெளியும் காற்றில் பறந்தது.

    கல்லூரிகளுக்கு வரும் 20-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஈரோட்டில் பல்வேறு கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகஅளவில் பஸ்நிலையத்திற்கு வந்திருந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    குறிப்பிட்ட சில ஊர்களுக்கு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் அந்த பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவை, சேலம், கரூர், மதுரை போன்ற வெளிமாவட்டங்களில் இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் உட்கார்ந்து செல்லும்  வகையில் இயக்கப்பட்டன. நின்று செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை  அடுத்து தமிழக அரசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
     
    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று  முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை  ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

    எனினும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இரவு நேர பஸ் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் பஸ் பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இதேபோல் அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், ஆஸ்பத்திரிகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

    மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிக ளுக்கு நேரடி வகுப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு வழக்கம் போல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ரெயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    இரவு நேர ஊரடங்கை மக்கள் மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இரவு நேர ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் 800--க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேர  ஊரடங்கை மீறி வெளியே சுற்றிபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை குறைந்தது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை குறைந்தது. 

    ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கமாகும்.

    இந்த மாட்டுச்சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள். 
     
    இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்தே சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும். 

    மேலும் மாடுகளை வாங்குவதற்காக வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது.
     
    அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தவாரம் அதிக அளவில் மாடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால் கொரோனா ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டது. 
     
    கடந்த வாரம் போல 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 70 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக மாட்டுசந்தை வியாபாரிகள் கூறினர்.
    பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர அடைக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
    ஈரோடு:

    பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர அடைக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். 

    ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட மூலப்பாளையம், ஜீவானந்தம் வீதி, ஸ்டாலின்வீதி, ராஜீவ்வீதி, சீனிவாசராவ்வீதி உள்ளிட்ட பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிக்காகவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிக்காகவும் ரோடுகள் தோண்டப்பட்டன. அதன் பின்னர் குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டன. அவை சரிவர மூடப்படாததால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    மேலும் ரோடுகள் புதர் மண்டியும் காணப்படுகிறது. இதன் காரணமாக பாம்பு, தேள் உள்ளிட்ட விஷபூச்சிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த ரோட்டை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். 

    ரோட்டை சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் மற்றும்  4-ம் மண்டல உதவி ஆணையாளர் வடிவுக்கரசி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் குழந்தை பிறந்த 20 நாளில் இளம்பெண் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ரோஜா நகரை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகள் மீரா (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபினேசன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் மீரா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நடத்தி அவரது தந்தை தணிகாசலம் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி மீராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அப்போது மீராவிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த மீரா நேற்று மாலை 5 மணியளவில் மூச்சு திணறல் ஏற்படுவதாக தனது தந்தை தணிகாசலத்திடம் கூறினார்.

    அதற்கு தணிகாசலம் மருத்துவமனைக்கு செல்லலாம் என மீராவை அழைத்துள்ளார். அதற்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு படுத்துக் கொண்டார்.

    பின்னர் இரவு 7 மணி அளவில் தணிகாசலமும் அவரது மனைவி செண்பகவள்ளியும் சென்று மகள் மீராவை பார்த்தனர். அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

    இதையடுத்து உடனடியாக மீராவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மீரா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தணிகாசலம் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை பிறந்து 20 நாட்களில் தாய் இறந்ததால் மருத்துவத்துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×