என் மலர்tooltip icon

    ஈரோடு

    வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பெருந்துறை வாரச்சந்தை நாளை ஊரடங்கு காரணமாக இன்றே தொடங்கியது.
    பெருந்துறை:

    வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பெருந்துறை வாரச்சந்தை நாளை ஊரடங்கு காரணமாக இன்றே தொடங்கியது.

    பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வாரசந்தையானது வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 

    தமிழகஅரசு கொரேனாதொற்று அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்து உள்ளது.

    இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வாரசந்தையை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக  இன்று சனிக்கிழமை செயல்பட மாற்றி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் கருமாண்டி செல்லிபாளையம் வாரச்சந்தையானது இன்று சனிக்கிழமை செயல்படதொடங்கியது.

    இந்நிலையில் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து,  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பேரூராட்சி பணியாளர்கள் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சந்தைப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.
    ஈரோட்டில் இன்று 518மையங்களில் கொரோனா தடுப்பூசிமுகாம் நடந்தது. ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 518மையங்களில் கொரோனா தடுப்பூசிமுகாம் நடந்தது. ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இதுவரை 17 கட்டமாக மாபெரும் தடுப்பூசிமுகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 
     
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 தவணைத் தடுப்பூசியும் சேர்த்து மொத்தம் 27 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று 18-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. 

    ஈரோடு மாவட்டத்தில் 518 மையங்களில் இன்று காலை 9 மணிக்கு  1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் தொடங்கப்பட்டது.

    மாநகர பகுதியில் 50 இடங்களிலும் நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 2072 பணியா ளர்களும், 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசிமுகாம் நடைபெற்று வருகிறது. 

    இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


    நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    சத்தியமங்கலம்:

    நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 101.82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 878 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

    தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய்க்கு 700 கன அடியும், குடிநீர் தேவைக்கு ஆற்றில் 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடியும் என மொத்தம் 3100 கன அடி தண்ணீர் வெறியேற்றப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை வேகம் எடுத்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் தாக்கியது.

    இதேபோல் முன்கள பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் அதிக அளவில் பலியாகினர். 2-ம் அலையில் ஒரே நாளில் 1,776 பேருக்கு கொரோனா தொற்று என உச்சம் தொட்டது. அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

    கடந்த அக்டோபர் 1-ந்தேதி அன்று 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் அன்றைய தினம் சிகிச்சையில் இருந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    அக்டோபர் 2-ந்தேதி முதல் 100-க்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்து 95 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து தினமும் குறைந்து வந்த தொற்று டிசம்பர் 31-ந் தேதி அன்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக குறைந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து வந்தது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 103-ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் 3 மாதத்துக்குப்பின்பு தொற்று மீண்டும் 100-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 711 பேர் இறந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் இதுவரை தினமும் 4500 முதல் 5000 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரிசோதனை 6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    பொதுமக்கள் பெரும்பாலும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. குறிப்பாக முககவசம் அணியும் பழக்கம் குறைந்து உள்ளது. கடைகளில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பெரும்பாலும் முக கவசம் அணிவது இல்லை.

    பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
    இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு :

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் உருமாறிய ஒமைக்காரன் தொற்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

    மேலும் இரவு நேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவு மக்கள் கூடுவார்கள்.

    இதை தவிர்க்கும் வகையில் நாளை சுற்றுலா தலங்களுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடுவார்கள். மேலும் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் பரிகாரங்கள் செய்ய தமிழகம் ழுமுவதும் இருந்து மக்கள் அதிகளவு வருவார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையொட்டி கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பகுதியில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுகாவுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள்.

    நாளை முழு ஊரடங்கையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை பவானிசாகர் பூங்காவுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி அணை பூங்கா நுழைவு வாயில் அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கோபி அடுத்த கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், கண்டு ரசிப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். மேலும் சனி, ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு கொட்டி வந்ததால் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடிவேரி தடுப்பணையில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அதிளவில் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர்.

    இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி கொடிவேரி தடுப்பணையில் மக்கள் குளிக்கவும், கண்டு கழிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் குளிக்கவும், சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் செயல்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கின் போது வ.உ.சி. காய்கறி மார்க்கெட் இயங்காது

    ஈரோடு:

    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் செயல்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

    ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக  கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

    இங்கே 730-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும். 100-க்கும் மேற்பட்ட பழ கடைகளும் இயங்கி வருகின்றன. இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அத்துடன் ஒமைக்ரான் தொற்றும் அதிகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. 

    அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்  போது  கடைகள் வணிக நிறுவனங்கள் அடைக்கப் பட்டிருக்கும்.

    ஆனால் அதேநேரம் அத்தியாவசிய பொருட்க ளான பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது ஈரோடு வ.உ.சி பகுதியில் இங்கும் நேதாஜி காய்கறி மார்க்கெட் அன்று ஒரு நாள் முழுவதும் இயங்காது என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் மற்ற காய்கறி மார்க்கெட்டுகளும் இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
    இரவு நேர ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
    ஈரோடு:

    இரவு நேர ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழகஅரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
     
    தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு  வந்தது.

    இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு ஜி.ஹெச்.ரவுண்டானா, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை, பஸ் நிலையம், கருங்கல் பாளையம், ஸ்வஸ்திக் கார்னர், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள  மேம்பாலம் போன்ற பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

    ஆனால் அதேநேரம் அத்தியாவசிய வாகனங்களான பால், காய்கறி, மருந்து, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சேவை மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள்  திறக்கப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தடையை மீறி ஒரு சில வாகன ஓட்டிகள் வெளியே சுற்றி வந்தனர்.

    முதல் நாள் என்பதால் அவர்களை பிடித்து எச்சரித்த  போலீசார் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதேப்போல் ஒரு சில பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேலும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அந்த கடை உரிமையாளர்களிடம் போலீசார் கடையை அடைக்க வலியுறுத்தினர். 

    இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், பவானிசாகர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ஈரோடு மாவட் டத்தில் தமிழக-கர்நாடக மாநில எல்லைகளான ஆசனூர், பர்கூர் சோதனை சாவடி மற்றும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், திருப்பூர், கரூர் மாவட்ட எல்லைகளில் உள்ள 12 சோதனைசாவடி என மொத்தம் 14 சோதனைசாவடிகளிலும் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன. தடை மீறி சுற்றிய வாகனங்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

     பவானி லட்சுமிநகர் பைபாஸ் பகுதியில் இரவில் சுற்றிய வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    பெருந்துறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து  நகை மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெருந்துறை அடுத்த  விஜயமங்கலம் பகலாயூர் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 41).  இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவினாசியில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டு விட்டு டிராக்டர் ஓட்டுவதற்காக வெளியூர் சென்று விட்டார்.

    இந்த நிலையில் யோகநாதன் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. 

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.   இது குறித்து யோகநாதன் தனது மனைவிக்கு போன்  மூலம் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் ஆரம், 5 பவுன் செயின், அரை பவுன் தோடு, 11 பவுன் தங்க காசுகள் என மொத்தம் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது  தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 31 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    ஈரோடு:

    கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளன. 

    கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை  என்பதால்  இன்று முதல் 3 நாட்கள் கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. இது தவிர சிறிய கோவில்கள் அறக்கட்டளை கோவில்கள் உள்ளன. 

    மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இன்று பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. 

    ஈரோடு மாநகரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன், கோட்டை பெருமாள், கருங்கல்பாளையம் மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன் போன்ற கோவில்களில் இன்று காலை பொதுமக்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.
     
    ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. 

    ஆனால் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தாலும் நூற்றுக்கணக்கான மக்கள் கோவில் வெளியே நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    இதேப்போல் சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், குருநாதர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பெருமாள்மலை கோவில், செல்லாண்டி அம்மன், தேவபுரம் கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பச்சைமலை பவளமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் போன்ற கோவில்கள் முன்பு இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நின்று பக்தர்கள் வழிப்பட்டு சென்றனர். பரிகாரம் செய்ய 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. புனித  நீராட வருபவர்கள் அய்யப்ப சேவா மண்டப படிதுறை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மொடக்குறிச்சி அருகே வடமாநில பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் ராச்சிபூர் மாவட்டம் தானியாபார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதிதாலேய் (வயது 26). இவரது தங்கை புஷ்பாதாலேய் (24). அக்கா தங்கை இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் தொட்டி பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் ஸ்ரீமதிதாலேய் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தங்கை அக்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீமதிதாலேய் தான் ஒருவரை காதலித்ததாகவும் அவர் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அக்காவை புஷ்பாதாலேய் சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீமதிதாலேய் வேலைக்கு விடுப்பு எடுத்து அறையில் தங்கி இருந்தார்.

    பின்னர் அவர் அவரது தங்கை மற்றும் அறையில் தங்கி இருந்தவர்கள் இரவில் தூங்க சென்று விட்டனர். அதிகாலையில் புஷ்பாதாலேய் எழுந்து பார்த்தபோது அக்கா ஸ்ரீமதிதாலேய் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீமதிதாலேய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கணவருடன் விவாகரத்தானதால் மனம் உடைந்த சட்ட கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மெகபூப் பாஷா. இவரது மகள் சாஹினா பீவி (வயது 30). இவர் கோவை அரசு சட்ட கல்லூரியில் பி.எல். இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கும் முகமது உவைஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாஹினா பீவி மற்றும் அவரது கணவர் முகமது உவைஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கடந்த 2018-ம் ஆண்டு சாஹினா பீவி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து உறுதியானது. இதனால் சாஹினா பீவி தன் மகனை எப்படி காப்பாற்றுவது என மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சாஹினா பீவி தேர்வுக்கு படிப்பதாக கூறி தனது வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது அவரை டீ குடிக்க அழைத்தனர். நீண்ட நேரம் அழைத்தும் அவர் கீழே இறங்கி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை மெகபூப் பாஷா சென்று பார்த்தார். அப்போது அவர் இருந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை திறந்து பார்த்தபோது சாஹினா பீவி தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாஹினா பீவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் இன்று பஸ்களில் சமூக இடைவெளியின்றி கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று பஸ்களில் சமூக இடைவெளியின்றி கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும்  அமலுக்கு வந்துள்ளன. முக்கியமாக பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
     
    இந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 பணிமனைகளில் இருந்து தினமும் 780-க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், உள்ளூருக்கும் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் பஸ்சில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. முககவசம் அணியாமல் வந்த பயணிகள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்படவில்லை. 

    ஆனால் அதே சமயம் பெரும்பாலான பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மாநகர் பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சமூக இடைவெளியும் காற்றில் பறந்தது.

    கல்லூரிகளுக்கு வரும் 20-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஈரோட்டில் பல்வேறு கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகஅளவில் பஸ்நிலையத்திற்கு வந்திருந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    குறிப்பிட்ட சில ஊர்களுக்கு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் அந்த பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவை, சேலம், கரூர், மதுரை போன்ற வெளிமாவட்டங்களில் இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் உட்கார்ந்து செல்லும்  வகையில் இயக்கப்பட்டன. நின்று செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    ×