என் மலர்
ஈரோடு
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியும், தனியாக அறை எடுத்து தங்கியும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக பெருந்துறை சிப்காட் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செங்கல் சூளை, டையிங், பிளீச்சிங் தொழிற்சாலை, பேக்கரி கடைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்தமாக எலக்ட்ரானிக் கடைகளும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கும், இன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் மீண்டும் முழு நேர ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்திலும், கொரோனா தினசரி பாதிப்பு காரணமாகவும் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
ஈரோடு வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்வதற்காக பெட்டி, படுக்கைகளுடன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
இரவு முழுவதும் விடிய, விடிய பனி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ரெயில் நிலையத்திலேயே காத்திருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு கிளம்பிச் சென்றனர்.
இன்று 2-வது நாளாகவும் காலையில் ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பஸ்கள் இயக்கப்படாததால் அவசர தேவைக்காக வெளியூர் செல்பவர்களும் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்திருந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பாரத். இவரது மனைவி ஷீலா. ஐ.டி. கம்பெனி ஊழியர்கள். இவர்கள் 2 பேரும் கேரள மாநிலம் கொச்சினில் ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்தனர்.
இதற்காக பாரத், ஷீலா ஆகியோர் தனியார் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி புறப்பட்டனர். ஹெலிகாப்டரை கேப்டன்கள் ஜஸ்பால், அங்கித் சிங் ஆகியோர் இயக்கி வந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர்புதூர் என்ற பகுதியில் இன்று காலை 11.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டு இருந்தது.
அப்போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை. இதையடுத்து பைலட்கள் பத்திரமாக அத்தியூர்புதூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே தரை இறக்கினர்.
வானில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே இறங்கியதால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து பார்வையிட்டனர்.
பின்னர் ஹெலிகாப்டரை ஓட்டி வந்த பைலட்கள் இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஹெலிகாப்டரை ஓட்டி வந்த பைலட்களிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.
பின்னர் அவர்களை ஒரு இடத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். பனி மூட்டம் விலகியதும் மீண்டும் அவர்கள் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
சரியான நேரத்தில் பைலட்டுகள் ஹெலி காப்டரை பத்திரமாக தரை இறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் 270 தினசரி கடைகள் உள்ளன. திங்கள் முதல் செவ்வாய் இரவு வரை 700-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகள், இதனை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த பல்வேறு கடைகள் இயங்குகின்றன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல வெளி மாநில மொத்த, சில்லறை விற்பனை வியாபாரிகள் இங்கு வந்து பெட்ஷீட், துண்டு, லுங்கி, வேட்டிகள், பனியன், நைட்டி, குழந்தைகளுக்கான ஆடை, விதவிதமான வீட்டு பயன்பாட்டு துணிகள் என ஏராளமானவை குறைந்த விலையில் மொத்தமாக, சில்லரையாக விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன் இங்கு மொத்த, சில்லறை ஜவுளி விற்பனை அதிகம் நடக்கும். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று முன்தினம் முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்ததால், இங்குள்ள வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-
ஓணம், தீபாவளி, கிறஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை போல, பொங்கல் பண்டிகைக்காக கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமாக பெட்ஷீட், லுங்கி, துண்டு, நைட்டி உள்ளிட்ட ஆடைகள், குளிர்கால ஆடைகள் வாங்கி செல்வார்கள்.
கடந்த ஒரு வாரமாக இந்த விற்பனை நடந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மொத்த விற்பனைக்கு ஆர்டர் கொடுத்தவர்கள், முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ரத்து செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, பொங்கலுக்கு பின்னர் தான் முழு ஊரடங்கு விதித்தனர். பெருந்தொகைக்கான விற்பனை நடந்தது. ஆனால் இந்தாண்டு தற்போதே கட்டுப்பாடு விதித்ததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






