என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா அதிகரிப்பால் சொந்த ஊருக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியும், தனியாக அறை எடுத்து தங்கியும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியும், தனியாக அறை எடுத்து தங்கியும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    குறிப்பாக பெருந்துறை சிப்காட் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செங்கல் சூளை, டையிங், பிளீச்சிங் தொழிற்சாலை, பேக்கரி கடைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்தமாக எலக்ட்ரானிக் கடைகளும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கும், இன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் மீண்டும் முழு நேர ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்திலும், கொரோனா தினசரி பாதிப்பு காரணமாகவும் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்வதற்காக பெட்டி, படுக்கைகளுடன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    இரவு முழுவதும் விடிய, விடிய பனி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ரெயில் நிலையத்திலேயே காத்திருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு கிளம்பிச் சென்றனர்.

    இன்று 2-வது நாளாகவும் காலையில் ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பஸ்கள் இயக்கப்படாததால் அவசர தேவைக்காக வெளியூர் செல்பவர்களும் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்திருந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×