என் மலர்tooltip icon

    ஈரோடு

    மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் லாரி மோதியதால் ஈரோடு - கரூர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்டுபுதூரில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சிதம்பரத்தில் இருந்து கணபதிபாளையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

    அப்போது பாலத்தின் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோதி நின்றது. இதனால் லாரி தொடர்ந்து செல்ல முடியவில்லை.

    இதனால் ஈரோடு - கரூர் செல்லும் கனரக வாகனம் மற்றும் பஸ் ஆகியவை மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. ரெயில்வே நுழைவு பாலத்தில் மோதி நின்ற லாரியை மீட்கும் பணியில் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    பிரதமர் மோடி பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து ஈரோட்டில் இன்று ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
     ஈரோடு:

    பிரதமர் மோடி பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து ஈரோட்டில் இன்று ரெயில்  மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றார். அப்போது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக  பஞ்சாப் காங்கிரஸ் அரசு செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இதை கண்டிக்கும் வகையில் பஞ்சாப் காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்யக்கோரி இன்று ஈரோட்டில் இந்து மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை இந்து மக்கள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமையில்   நிர்வாகிகள் பலர் ஈரோடு காளைமாடு சிலை அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தை நோக்கி கோஷ மிட்டபடி சென்றனர். 

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார் ரெயில் நிலையம்  பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையம் உள்ளே நுழைய முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் இந்து மக்கள் கட்சியினர் சென்னிமலை ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்கள் பஞ்சாப் முதல்-அமைச்சர்,  ராகுல் காந்தி புகைப்படத்தை கிழித்து எறிந்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சூரம்பட்டி போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி  அழைத்து சென்றனர்.
    உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என ஏன் பொய் பேசுகிறீர்கள் என்று தம்பதியை எச்சரித்த போலீசார் முழு ஊரடங்கு என்பதால் காரில் பயணிக்க அனுமதி இல்லை என காரை திருப்பி அனுப்பினர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இதன் காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் காய்கறி, பால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    மற்ற சரக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து கைக்குழந்தையுடன் தம்பதியினர் வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் திருப்பூருக்கு மருத்துவமனைக்கு செல்வதாக கூறினர். அப்போது போலீசார் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் குழந்தையை மருத்துவமனையில் காண்பிப்பதற்காக அனுமதி வாங்கப்பட்டுள்ளதா? அதற்கு உரிய மருத்துவ சீட்டு ஆவணம் ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

    அப்போது அந்த தம்பதியினர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து உண்மையாகவே குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையா என போலீசார் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கவே காரில் வந்த தம்பதியினர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்ததாக தெரிவித்தனர்.

    உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என ஏன் பொய் பேசுகிறீர்கள் என அவர்களை எச்சரித்த போலீசார் முழு ஊரடங்கு என்பதால் காரில் பயணிக்க அனுமதி இல்லை என காரை திருப்பி அனுப்பினர்.


    சென்னிமலை யூனியன் ஆபீசில் தைப்பூச தேரோட்ட திருவிழா குறித்து கருத்து கேட்பு கூட்டம் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது
    சென்னிமலை: 

    சென்னிமலை யூனியன் ஆபீசில் தைப்பூச தேரோட்ட திருவிழா குறித்து கருத்து கேட்பு கூட்டம் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது

    சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்போது சென்னிமலை நகரில் தேரோட்டம் மற்றும் விழாக்கள் 15 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும். 

    ஆனால், தற்பொழுது கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

    இந்நிலையில் சென்னி மலையில் தைப்பூச தேரோட்ட விழா நடை பெறுமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.

    இந்நிலையில் சென்னிமலை யூனியன் ஆபீசில் தைப்பூச தேரோட்ட திருவிழா குறித்து கருத்து கேட்பு கூட்டம் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.  

    இக்கூட்டத்தில் சென்னி மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், சென்னிமலை யூனியன் சேர்மன் காயத்ரி இளங்கோ, துணை சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்.,செல்வம், இன்ஸ்பெக்டர் சரவணன், வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    கோவில் மண்டப கட்டளைதாரர்கள் தரப்பில் பூந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், வெள்ளோடு, பூந்துறை, நசியனூர், எழுமாத்தூர் ஆகிய நான்கு நாட்டு மண்டப கட்டளை மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மண்டப கட்டளை நிர்வாகிகள், திருவிழா உபயதாரர்கள், நன்கொடையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், கோவிலில் செயல்படும் பல்வேறு கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

    அப்போது ஆண்டு தோறும் நடைபெறும் விழாவைப் போல இவ்வாண்டும் தைப்பூச தேரோட்ட திருவிழா நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், அவர்களது கருத்துகளை கேட்டு பதிவு செய்தனர். 

    இக்கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில் கலந்துகொண்ட பல்வேறு மண்டபக் கட்டளை தாரர்கள், உபயதாரர்கள் உட்பட பல்வேறு தரப்பின் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பிய பின் அரசு உத்தரவை பின்பற்றி மாவட்ட கலெக்டர் இது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    எனவே தேரோட்ட விழா நடைபெறுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும். இந்த கருத்து கேட்பு கூட்டத்தால் நாளை சென்னிமலையில் நடைபெற இருந்த உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் விலக்கிக் கொள்வதாக முருக பக்தர்கள் அறிவித்துள்ளனர்.
    வருவாய் துறையில் இருந்து வருவதாக கூறி முதியவரிடமிருந்து நங்க மோதிரத்தை பறித்து சென்ற வாலிபர் குறித்து போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    வருவாய் துறையில் இருந்து வருவதாக கூறி முதியவரிடமிருந்து நங்க மோதிரத்தை பறித்து சென்ற வாலிபர் குறித்து போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலத்தூர்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 66). இவர் நேற்று மதியம் 3 மணியளவில் திண்டலிருந்து ஆனைக்கல் பாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக சென்று கொண்டிருந்தார்.  

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த  ஒரு வாலிபர் திடீரென குழந்தைவேல்  வாகனத்தை வழிமறித்து நிறுத்தினார். குழந்தைவேலிடம்  தான் வருவாய் துறையில் இருந்து வருவதாகவும் உங்களிடம் தங்க நகை போட்டுக் கொள்ள லைசென்ஸ் இருக்கிறதா? என கேட்டுள்ளார்.

    பின்னர் இப்படி தங்க நகைகளை வெளியே போட்டு வரக்கூடாது. வழிப்பறி அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே மோதிரத்தை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி குழந்தைவேல் தனது கையில் இருந்த 4 பவுன் மோதிரத்தை கழற்றி பாக்கெட்டில் போட முற்பட்டபோது அந்த நபர்  அதை பிடிங்கி கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைவேலு திருடன்... திருடன் என கத்தினார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பி சென்றுவிட்டார். 

    இதுகுறித்து குழந்தைவேல் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சுப்பிரமணி வயது (70). தனது மனைவியுடன் நேற்று ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார் அப்போது லக்காபுரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் உங்களிடம் தங்க நகை போட்டுக் கொள்ள லைசென்ஸ் இருக்கிறதா? என கேட்டுள்ளார்.

    நகையை வெளியே போட்டு செல்ல வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனையடுத்து அரை பவுன் மோதிரத்தை பாக்கெட்டுக்குள் வைக்கும்போது அந்த நபர் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
    ஈரோடு மாவட்டத்தில் தமிழகஅரசின் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக பங்கேற்று திறந்து வைக்கிறார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழகஅரசின் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக பங்கேற்று திறந்து வைக்கிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதில் முடிவுற்ற பணிகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இதில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் மூலம் கட்டப்பட்ட தேர்தல் அலுவலக கட்டிடம் மற்றும் சில பள்ளி கட்டிடங்களை காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    மேலும் சோலாரில் புதிய பஸ் நிலையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

    இதைத் தொடர்ந்து தாலிக்கு தங்கம் உள்பட பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.  இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். 

    முதல்-அமைச்சரால் தொடங்க வேண்டிய பணிகள், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய திட்ட பயன்கள் குறித்து இறுதி செய்தனர்.

    மேலும் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய பணிகள், பயனாளிகள் பட்டியல், கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ள நிலையில் அவர்களை அழைத்து வந்து, அழைத்து செல்வது குறித்து முடிவு செய்தனர். 

    இதன்படி, ஈரோடு பரிமளம்மஹால், குருசாமிகவுண்டர் மண்டபம் உள்பட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பயனாளிகளை தங்கவைத்து திட்டபயன்கள் வழங்க திட்டமிடப்பட்டது.
    முழுஊரடங்கில் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
    ஈரோடு:

    முழுஊரடங்கில் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    முழுஊரடங்கையொட்டி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

    கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, பவானி லட்சுமி புரம் சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனைசாவடி என 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மட்டும் கடும் சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

    இதேப்போல் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு வருபவர்கள் வாகனங்களும் திருமண அழைப்புதலுடன் வந்ததால்  அனுமதிக்கப்பட்டன. 

    இதுதவிர தேவையின்றி வெளிய சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஜி.எச். ரவுண்டானா, காளைமாடு சிலை, ஸ்வஸ்திக் கார்னர் போன்ற முக்கியமான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். சில வாகன ஓட்டிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

    மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மேம்பா லங்களை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். முக்கியமான கடைவீதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    இதேபோல்  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    பவானி அருகே குடும்ப தகராறில் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சித்தோடு:

    பவானி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பவானி அருகே உள்ள ஆர். என். புதூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (30). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை.
     
    இந்நிலையில் கணேசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து நந்தினியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால், நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். சம்பவத்தன்று கணேசன் தனது மனைவியிடம் தனக்கு குழந்தை பெற்றுத்தர முடியவில்லை என கூறி அடித்து தகாத வார்த்தைகளால் பேசினார். 

    பின்னர் ஆத்திரத்தில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார்.

    அப்போது நந்தினி தடுக்க முயன்ற போது கை மற்றும் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் நந்தினி வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை, தம்பி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    இதனை கண்ட கணேசன் அரிவாளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். உடனே காயம் அடைந்த நந்தினியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர்ர. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணேசனை தேடி வருகின்றனர்.

    பண்ணாரி சோதனை சாவடியில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    பண்ணாரி சோதனை சாவடியில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைசாவடியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    குறிப்பாக கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கும், தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று தமிழகத்தில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பொது போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் அதேநேரம் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை கர்நாடக மாநிலத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகள் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தன.

    இதேப்போல் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றிவந்தன. ஒரேநேரத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் பண்ணாரி சோதனைசாவடி பகுதிக்கு வந்ததால் போலீசார் ஒவ்வொரு லாரிகளையும் சோதனை செய்து  அனுமதித்தனர். 

    இதனால்  பண்ணாரி சோதனைச்சாவடிபகுதியில் லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் லாரிகள் சென்றதால் போக்குவரத்து சீரானது.
    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.8.38 கோடிக்கு மது விற்பனையானது.
    ஈரோடு

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில்  ரூ.8.38 கோடிக்கு மது விற்பனையானது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

    இதன் காரணமாக இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இன்று முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. 

    ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. 

    தினமும் ரூ. 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது.

    பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் முன்னதாகவே மது பிரியர்கள் டாஸ்மாக் கடையில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிச் செல்வார்கள். இதனால் விசேஷ காலங்களில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். 

    இந்நிலையில் இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    குறிப்பாக  மாலையில் இருந்து இரவு வரை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

    குறிப்பாக ரம், விஸ்கி, பிராந்தி, பீர் வகைகளை குடிமகன்கள் இன்றைக்கும் சேர்த்து அதிக அளவில் அள்ளி சென்றனர். இதனால் வழக்கத்தை விட விற்பனை அமோகமாக இருந்தது. 

    அனைத்து டாஸ்மாக் கடையிலும் வழக்கத்தை விட மது வகைகள் கூடுதலாக கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தது. இரவில் டாஸ்மாக் கடை மூடும் வரை விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

    இன்று முழுஊரடங்கு என்பதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.8 கோடியே 38 லட்சத்துக்கு டாஸ்மார்க் விற்பனை ஆனதாக மாவட்ட  டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். இது சாதாரண நாட்களை விட கூடுதலாக ரூ.3 கோடி  அதிகமாகும்.

    சத்தியமங்கலத்தில் முககவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு போலீசார் அபராதம் வித்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் முககவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு போலீசார் அபராதம் வித்தனர்.

    கொரோனா பரவல் காரணமாக இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலையம், பழைய மார்க்கெட் பகுதி, வடக்குபேட்டை, கோட்டு வீராம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
     
    மேலும் சத்தியமங்கலம்- ஈரோடு ரோடு, பண்ணாரி ரோடு மற்றும் முக்கிய பகுதிகளில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு  ஜெயபாலன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் பகுதியில் போலீசார் அந்த வழியாக வந்தவர்களை பிடித்து விசா ரணை நடத்தினர். இதில் விதிமுறைகள் மீறி தேவையில்லாமல் சுற்றியவர்கள் மற்றும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரத்தில் முககவசம் அணியாத 200 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் கோபி பஸ்நிலையம், மார்க்கெட் பகுதி, ஈரோடுரோடு, மொடச்சூர் ரோடு, கவுந்தப்பாடி 4 ரோடு, சத்தியமங்கலம் ரோடு, பஸ் நிலையம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியில் சுற்றியவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    முழு ஊரடங்கையொட்டி பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்துடன் சேர்ந்து ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தமிழக அரசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

    அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.

    மாநகர் பகுதியில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர் செல்வம் பார்க் பகுதி, காளைமாடு சிலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம், பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சம்பத் நகர் பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள ஜவுளி சந்தை அடைக்கப்பட்டிருந்தன.

    ஆனால் அதே நேரம் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது அவர்களுக்கு பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. மாநகர் பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டன. பார்சலில் உணவு உணவு வழங்கப்பட்டன.

    இதேபோல் ஓட்டல்களிலும் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் சேவை வழங்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான பால் சேவைகள் வழக்கம் போல் நடைபெற்றன. ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கின.

    முழு ஊரடங்கையொட்டி பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் அங்கும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. இதே போல் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
    ×