என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
முதியவரை ஏமாற்றி தங்க மோதிரத்தை பறித்து சென்ற வாலிபர்
வருவாய் துறையில் இருந்து வருவதாக கூறி முதியவரிடமிருந்து நங்க மோதிரத்தை பறித்து சென்ற வாலிபர் குறித்து போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
வருவாய் துறையில் இருந்து வருவதாக கூறி முதியவரிடமிருந்து நங்க மோதிரத்தை பறித்து சென்ற வாலிபர் குறித்து போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலத்தூர்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 66). இவர் நேற்று மதியம் 3 மணியளவில் திண்டலிருந்து ஆனைக்கல் பாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென குழந்தைவேல் வாகனத்தை வழிமறித்து நிறுத்தினார். குழந்தைவேலிடம் தான் வருவாய் துறையில் இருந்து வருவதாகவும் உங்களிடம் தங்க நகை போட்டுக் கொள்ள லைசென்ஸ் இருக்கிறதா? என கேட்டுள்ளார்.
பின்னர் இப்படி தங்க நகைகளை வெளியே போட்டு வரக்கூடாது. வழிப்பறி அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே மோதிரத்தை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி குழந்தைவேல் தனது கையில் இருந்த 4 பவுன் மோதிரத்தை கழற்றி பாக்கெட்டில் போட முற்பட்டபோது அந்த நபர் அதை பிடிங்கி கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைவேலு திருடன்... திருடன் என கத்தினார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து குழந்தைவேல் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சுப்பிரமணி வயது (70). தனது மனைவியுடன் நேற்று ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார் அப்போது லக்காபுரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் உங்களிடம் தங்க நகை போட்டுக் கொள்ள லைசென்ஸ் இருக்கிறதா? என கேட்டுள்ளார்.
நகையை வெளியே போட்டு செல்ல வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனையடுத்து அரை பவுன் மோதிரத்தை பாக்கெட்டுக்குள் வைக்கும்போது அந்த நபர் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
Next Story






