என் மலர்
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ளது தாசம்பாளையம் கிராமம். இக்கிராம பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இன்று காலை 7 மணி அளவில் புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் மற்றும் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் உங்கள் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). லாரி டிரைவர். மனோஜ் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அடிக்கடி அந்த மாணவியை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மனோஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெருந்துறையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, அங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் தலைமையில் போலீசார் பெருந்துறை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு தனியார் அரிசி ஆலையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அரிசி ஆலை உரிமையாளர் உள்பட 7 பேர் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததும், இந்த அரிசியை வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் தெற்கு வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 32), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பத்ரஹள்ளி பூச்சூரை சேர்ந்த பாலுவின் மகன் அஜித்குமார் (25), பென்னாகரம் செல்லம்பூண்டி தாசனூரை சேர்ந்த செல்வராஜ் (40), அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (40), பெருந்துறை அருகே வாவிக்கடை பிச்சாண்டம்பாளையம் கணபதிநகரை சேர்ந்த சென்னியப்பன் (39) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 417 மூட்டைகளில் இருந்த 20 ஆயிரத்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 5 பேரும் ஈரோடு 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர், பவானியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஜவுளிக் கடைகள், தொழில் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவையும் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை கடன் வாங்கி வைத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலத்திலும் விற்பனை அதிகமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட வியாபாரம் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். இதற்காக பருத்தித் துணிகள் சிறுவர் சிறுமியர் பேன்சி ரக துணிகள், காட்டன் புடவைகள், காட்டன் உடைகள் என பல லட்சம் ரூபாய் அளவுக்கு துணிகளைக் கொள்முதல் செய்து கடையில் வைத்து இருந்தனர்.
ஆனால் முழு ஊரடங்கால் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 700 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் நேற்று ஒரு நாள் ரூ. 7 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதைப்போல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் கடைகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் பதிவு பெற்ற 9,100 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சில்லரை விற்பனையில் ரூ.10 கோடியும், மொத்த விற்பனையில் ரூ .10 கோடியும் என ரூ.20 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர நூற்றுக்கணக்கான சாலையோர கடைகள் அடைக்கப்பட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 103 ஆக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 131 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக தினசரி பாதிப்பு 149 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 63 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 578 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






