என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள் 9 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் முன் களப்பணியாளர்கள், 6 ஆயிரம் சுகாதாரதுறை பணியாளர்கள், 9 ஆயிரம் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
ஈரோடு:
இந்தியாவில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து உள்ளதால் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு 273 நாட்கள் (9 மாதங்கள்) முடிந்தவர்களில் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் முன் களப்பணியாளர்கள், 6 ஆயிரம் சுகாதாரதுறை பணியாளர்கள், 9 ஆயிரம் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முன்கள பணியாளர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றில் எந்த தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார்களோ அதையே அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக போடப்பட்டது.
தடுப்பூசி போட வந்தவர்கள் செல்போன் மற்றும் ஆதார் அட்டையை காண்பித்தனர். கோவின் செயலியில் சரி பார்த்த பின்பு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது.
Next Story






