என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் முன்பு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்த காட்சி.
கொரோனா தடையால் கோவில்கள் முன்பு நின்று வழிபட்ட பொதுமக்கள்
கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு:
கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளன.
கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இன்று முதல் 3 நாட்கள் கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. இது தவிர சிறிய கோவில்கள் அறக்கட்டளை கோவில்கள் உள்ளன.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இன்று பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.
ஈரோடு மாநகரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன், கோட்டை பெருமாள், கருங்கல்பாளையம் மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன் போன்ற கோவில்களில் இன்று காலை பொதுமக்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன.
ஆனால் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தாலும் நூற்றுக்கணக்கான மக்கள் கோவில் வெளியே நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
இதேப்போல் சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், குருநாதர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பெருமாள்மலை கோவில், செல்லாண்டி அம்மன், தேவபுரம் கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பச்சைமலை பவளமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் போன்ற கோவில்கள் முன்பு இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நின்று பக்தர்கள் வழிப்பட்டு சென்றனர். பரிகாரம் செய்ய 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. புனித நீராட வருபவர்கள் அய்யப்ப சேவா மண்டப படிதுறை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Next Story






