என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
    • காவிரி கரையோரம் உள்ள ஈரோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரி கரையோரம் உள்ள ஈரோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம், பவானி, பவானி கூடுதுறை, கொடுமுடி ஆகிய பகுதிகளை ஒட்டி காவிரி ஆறு பாய்கிறது. தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இந்த பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் வழக்கமாக ஏராளமான வாலிபர்கள் குளித்து மகிழ்வார்கள். தற்போது அதிக அளவில் தண்ணீர் வருவதால் யாரையும் காவிரி ஆற்றில் இறங்க விடாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்க்கொண்டு வருகின்றனர்.

    தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து பவானி கூடுதுறைக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதம் முழுவதும் புது மண தம்பதிகள் புனித நீராட வருவார்கள். இந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் வருவதால் படித்துறை அனைத்தும் மூழ்கி விட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் படித்துறைக்கு செல்லும் நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் காவிரி கரையோரத்தை பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும்.
    • அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். இதில் அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.58 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்னும் 2 நாட்களில் 100 அடியை எட்டி விடும்.

    இதனால் அணையில் இருந்து எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பவானி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் இறங்கி துணி துவைக்கவும், குளிக்கவும் கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    தொடர்ந்து அணையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆடிமாத தொடக்கத்திலேயே பவானிசாகர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் குறித்த விவரம் ஆராய்ந்த போது அதில் 13 பேரின் நகைகள் போலியானது என தெரிய வந்தது.
    • வங்கியில் அடமானத்துக்கு வைக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் நாளை முழுவதுமாக சோதனை செய்யப்படும்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அவல்பூந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து புதிதாக நகை மதிப்பீட்டாளராக ஒருவர் பணிக்கு வந்தார். அவர் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை சோதனை செய்தார்.

    அப்போது அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் 13 பேரின் நகை போலி என தெரிய வந்தது. இந்த போலி நகை மூலம் ரூ.25 லட்சத்துக்கு மேல் கடனாக பெற்றுள்ளதும் தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக அந்த 13 பேரும் வங்கிக்கு அழைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் நாங்கள் போலி நகைகளை அடமானம் வைக்கவில்லை. நகை மதிப்பீட்டாளராக இருந்த பிரகாஷ் அவசர தேவைக்காக அவரது நகையை கொடுத்து வங்கியில் அடமானம் வைத்து தருமாறு கேட்டுக் கொண்டதால் அடமானம் வைத்ததாக தெரிவித்தனர்.

    இதனால் வங்கியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது குறித்து தகவல் பரவியதும் வங்கியில் நகை அடமானம் வைத்த 50-க்கும் மேற்பட்டோர் வங்கியை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

    தங்களது நகைகளும் போலி நகையாக மாறி இருக்குமோ என்ற அச்சத்தில் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை வங்கியில் உள்ள மற்ற நகைகள் முழுவதுமாக சோதனை செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    சம்பந்தப்பட்ட வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் குறித்த விவரம் ஆராய்ந்த போது அதில் 13 பேரின் நகைகள் போலியானது என தெரிய வந்தது. இந்த போலி நகைகள் மூலம் ரூ.25 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது அவர்கள் நகை மதிப்பீட்டாளராக இருந்த பிரகாஷ் சொல்லி தான் அவருடைய நகையை அடமானத்துக்கு வைத்தோம் என்று கூறியுள்ளனர்.

    தற்போது பிரகாஷ் உயிரோடு இல்லை அவர் இறந்து விட்டார். அவர்கள் கூறியது உண்மைதானா? அப்படியே அவர்கள் கூறியது உண்மை என்றால் நகையை அடமானம் வைப்பதற்காக இவர்களுக்கு அவர் பணம் ஏதும் கொடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விசாரணை முடிவில் உண்மையான நிலவரம் தெரியவரும்.

    இதேப்போல் வங்கியில் அடமானத்துக்கு வைக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் நாளை முழுவதுமாக சோதனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தனி ப்பிரிவு போலீசார் மற்றும் சித்தோடு போலீசார் காலிங்க ராயன்பாளையம் கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் 3 வாலிபர்கள் இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் (24), காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம். வீதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மெய்யப்பன் (19) மற்றும் சித்தார், குப்பிச்சிபாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் (24) என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

    மேலும் அந்த வீட்டில் சிறு சிறு பொட்டலங்களாக 300 கிராம் எடையுள்ள 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பொட்ட லங்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியான காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி 3 பேர் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரோட்டில் அடமானம் வைத்த வாலிபர் நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • தற்கொலை செய்ய முடிவெடுத்த வாலிபர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி சவுந்தர்யா (30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி 2 பேரும் தறிப்பட்டையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து பணத்தை செலவழித்து உள்ளார்.

    இதனையடுத்து அடமானம் வைத்த நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே சரவணன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர். பின்னர் தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    அப்போது அவரது மகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    உடனே சவுந்தர்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 384 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
    • கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் விண்டெக்ஸ், குத்தகை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (61). இவரது வீடு, தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    தோட்டத்தில் 70 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. அதில் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணறு தடுப்பு சுவர் இல்லாத தரைமட்ட கிணறு ஆகும். இவர் தனது தோட்டத்தில் 8 மாத சினையுடன் கூடிய எருமை ஒன்று வளர்த்து வந்துள்ளார்.

    இந்த எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

    உடனடியாக கருப்புசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது எருமை மாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

    கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர். அதன்படி கிரேன் வரவழைக்கப்பட்டு எருமை மாட்டை பத்திரமாக மீட்டனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஈரோடு மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்தது.

    ஈரோடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கோவை பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மேலும் நீர் வாத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை இன்னும் ஒரு சில தினங்களில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்படும்.

    ஈரோடு மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்தது.

    இதில், மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

    ஈரோடு-2, தாளவாடி-1.2, பவானி-6, எலந்த குட்டை மேடு-3.2, அம்மா பேட்டை-2, கொடிவேரி-1, குண்டேரிப்பள்ளம்-4.4 என மாவட்டத்தில் 19.8 மில்லி மீட்டர் மழை பொழிந்தது.

    • ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     ஈரோடு:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

    ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது.

    இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர். இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

    • ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக இந்த வருடம் 7நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி தேர்வு நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக இந்த வருடம் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் அவல்பூந்துறையில் உள்ள லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 288 பேர், நந்தா கலை அறிவியல் கல்லூரியில் 864 பேர், திண்டலில் உள்ள கீதாஞ்சலி மேல்நிலைப்பள்ளி மையத்தில் 864.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை டெக் என்ஜினீயரிங் கல்லூரி மையத்தில் 504 பேர், நந்தா சென்ட்ரல் பள்ளி மையத்தில் 648 பேர், தி இந்தியன் பப்ளிக் பள்ளி மையத்தில் 864 பேர், கோபி கலை அறிவியல் கல்லூரி மையத்தில் 864 பேர் என மொத்தம் 7 மையங்களில் 4,896 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

    நீட் தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இருந்தாலும் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் முன்னதாகவே வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் யார் வந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    நீட் தேர்வு நடைபெறும் 7 மையங்களில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் 11.40 மணிக்கு பிறகு தங்களுடைய தேர்வு மையத்திற்குள் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கம்மல்கள், வளையல்கள் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. வாட்ச் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை. தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேர்வர்களுக்கு தேர்வு மையம் சார்பில் என் 95 முக கவசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக கவசம் அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் பான்கார்டு, ரேஷன் கார்டு, லைசென்ஸ் இவற்றுள் ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் ஒன்றை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்ப ட்டுள்ளனர்.

    கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும்.

    • ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் கூடுதுறைக்கு வந்து புனத நீராடி தாலி மாற்றி கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
    • ஆடி மாத பிறப்பையொட்டி இன்று காலை கூடுதுறைக்கு பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் கூடுதுறைக்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பேர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து செல்கிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தாலி மாற்றி கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறையில் வெள்ளம் அதிகளவு செல்கிறது. பக்தர்கள் குளிக்கும் படிக்கட்டுகள் வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.

    இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதுறையில் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் தடுப்புகள் அமைத்து உள்ளனர். மேலும் ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் கூடுதுறைக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று காலை கூடுதுறைக்கு பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்களும் செய்வதறியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். குளிக்க தடை செய்யப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையொட்டி பக்தர்கள் பலர் கூடுதுறை கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இன்று காலை 1 லட்சத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
    • பவானி கூடுதுறையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பவானி:

    கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை நேற்று நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதையடுத்து ஈரோடு உள்பட காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கரையோரங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இன்று காலை 1 லட்சத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. இந்த வெள்ளத்தை கருங்கல்பாளையம் பாலத்தில் பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வருவதால் பவானி புது பஸ் நிலையம் அருகே உள்ள பாலா கியாஸ் இறக்கம் என்ற பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அந்த பகுதியில் வசித்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் பவானி கூடுதுறையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×