search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை
    X

    பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனிதநீராட தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை

    • ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் கூடுதுறைக்கு வந்து புனத நீராடி தாலி மாற்றி கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
    • ஆடி மாத பிறப்பையொட்டி இன்று காலை கூடுதுறைக்கு பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் கூடுதுறைக்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பேர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து செல்கிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தாலி மாற்றி கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறையில் வெள்ளம் அதிகளவு செல்கிறது. பக்தர்கள் குளிக்கும் படிக்கட்டுகள் வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.

    இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதுறையில் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் தடுப்புகள் அமைத்து உள்ளனர். மேலும் ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் கூடுதுறைக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று காலை கூடுதுறைக்கு பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்களும் செய்வதறியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். குளிக்க தடை செய்யப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையொட்டி பக்தர்கள் பலர் கூடுதுறை கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    Next Story
    ×