என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வீட்டில் இருந்த மணிமேகலை கணவருக்கு வழங்கப்பட்ட தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார்.
    • இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    கோபி அடுத்துள்ள பெரியகொடிவேரி, மதுரைவீரன் கோயில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மணிமேகலை(33). கடந்த 4 ஆண்டுகளாக கணவர் சக்திவேலுக்கு மனநிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் மனைவி மணிமேகலை மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த மணிமேகலை கணவருக்கு வழங்கப்பட்ட தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்திய–மங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிமேகலை இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
    • இதைத்தொடர்ந்து நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

    இந்த பணியை பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ. பண்ணாரி மற்றும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும் என தெரிவித்தனர். 

    • விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
    • விநாயகர் சிலைகளை அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கரைத்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரச்சலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    உரிய அனுமதி பெறாமல் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அரச்சலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், இந்து மக்கள் கட்சி சார்பில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட 9 சிலைகளை அகற்றினர்.

    பின்னர் விநாயகர் சிலைகளை அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கரைத்தனர். இதுகுறித்து தெரிய வந்ததும் அந்த பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று மாலை நடைபெறுகிறது.
    • ஆய்வு கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார்.

    ஈரோடு:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி எம்.பி. 3,750 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் வரும் 7-ந்தேதி பாதயாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் சென்றடைகிறார். தினமும் 7 மணி நேரம் பாதயாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

    அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் 400 பேர் உடன் செல்கின்றனர். கிட்டத்தட்ட 150 நாட்கள் தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி இறுதியில் காஷ்மீரில் தனது பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    வருகிற 7-ந் தேதி ராகுல் காந்தியின் பாதை யாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று மாலை நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். தங்கபாலு, திருநாவுக்கரசு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்து விவாதிக்கப்படுகிறது.

    • ஈரோடு ரெயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    வடமாநி லங்களில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில்ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்ற னர்.

    இதையடுத்து ஈரோடுரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் வெளி மாநில ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடுரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ஈரோடுரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது எஸ்.5 பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும்.

    அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்காளம், கோல்பாரா பகுதியை சேர்ந்த பவதுல்லா (23) என தெரிய வந்தது. அவர் அந்த கஞ்சாவை கேரளாவிற்கு விற்க சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பவதுல்லாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    பவானி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அதிக அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் 16 மதகு கண் வழியாக திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பவானி நகர பகுதியில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் வருவாய் துறையினர் மூலம் தங்க வைக்கப்பட்டனர்.

    இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் தண்ணீரின் அளவு குறை ந்தது. இதனைத்தொடர்ந்து கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

    கந்தன் பட்டறை பகுதியில் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர் சந்திரன் (31). இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மீனவர் ஆன இவர் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்த நிலையில் கோவைக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் அவரின் வீடு கடந்த வாரம் இடிந்து விழுந்தது.இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (45). இவரது மனைவி சாந்தி மற்றும் ஒரு மகன் ஒரு மகளுடன் தனது ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

    அவரின் ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தாங்கள் தற்பொழுது வீட்டை சுத்தமட்டும் செய்து வைத்துக் கொள்ளவும், ஒரு வாரம் கழித்து தண்ணீர் அளவு எப்படி உள்ளது என பார்த்த பின்னர் தாங்கள் தங்கள் வீட்டுக்கு குடியேற வலியுறுத்தி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • செம்புளிச்சாம்பாளையம் அருகே சென்றபோது கரட்டூர் பிரிவில் ஏறிய பெண்ணிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
    • மேலும் அந்த பெண்ணை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக சண்முகசுந்தரம் (48), கண்டக்டராக ராஜ்குமார் (50) வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மதியம் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஈரோடு நோக்கி பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ், கரட்டூர் பிரிவில் நின்றது, அங்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஏற்றிக்கொண்டு மீண்டும் பஸ் புறப்பட்டது.

    பின்னர் பஸ் செம்புளிச்சாம்பாளையம் அருகே சென்றபோது கரட்டூர் பிரிவில் ஏறிய பெண்ணிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அந்த பெண், நெஞ்சுவலியால் துடிக்க, இதை பார்த்த சக பயணிகள், டிரைவரிடம், தெரிவித்தனர்.

    பின்னர் டிரைவர் சண்முகசுந்தரம், 108 ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளார். அப்போது, அந்தியூரில் ஆம்புலன்ஸ் இல்லை என்றும், குருவரெட்டியூரில் தான் ஆம்புலன்ஸ் உள்ளது. அங்கிருந்து வர காலதாமதம் ஆகலாம் என கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து டிரைவர், பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டு, அந்த பெண்ணை பஸ்சின் கடைசி சீட்டில் படுக்க வைத்துவிட்டு மருத்துவ வல்லுநர்கள் உதவியுடன் முதலுதவி கொடுத்துவிட்டு பஸ்சை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கே அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார்.

    தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • பத்திரங்கள் பதிவு செய்தவற்குள் கணினியில் ஏற்பட்ட தடைகளினால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை.
    • இதனால் காலை முதல் மாலை வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கூட்டம் காணப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் சார் பதிவாளர் அலுவலகம் தாலுகா அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. நேற்று முகூர்த்த தினம் என்பதால் 40 பத்திரங்கள் கிரயம் செய்ய பத்திரப்பதிவு செய்திருந்தார்கள்.

    அதில் 4 பத்திரங்கள் மட்டும் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள பத்திரங்கள் பதிவு செய்தவற்குள் கணினியில் ஏற்பட்ட தடைகளினால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை.

    இதனால் காலை முதல் மாலை வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று நடைபெற இருந்த பத்திரப்பதிவுகள் அனைத்தும் இன்று நடைபெற உள்ளது கூறிப்பிடதக்கது.

    • புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியில் தலைவர் ஜனார்த்தணன் தலைமையில் நகராட்சி கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டம் தொடங்கியதும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியில் தலைவர் ஜனார்த்தணன் தலைமையில் நகராட்சி கூட்டம் நடை பெற்றது. இதில் துணை த்தலைவர் சிதம்பரம், நகராட்சி ஆணையாளர் சையது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர்.

    தி.மு.க கவுன்சிலர் முரளிகிருஷ்ணன் பேசும் போது:

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல சிரமமாக இருக்கிறது. ஆகவே தேங்கி நிற்கும் மழை நீரினை அருகில் இருக்கும் கழிவு நீர் சாக்கடைக்கு போகும்படி செய்து தர வேண்டும் என்றார்.அதற்கு நகராட்சி ஆணையாளர் சையது உசேன் குழி போட்டு குழாய் அமைத்து செய்து தரப்படும் என்றார்.

    தி.மு. க. கவுன்சிலர் பூரணராமச்சந்திரன் பேசும் போது: நிலுவையில் உள்ள அனைத்து வரி பணத்தை விரைவில் வசூலிக்க வேண்டும் இல்லை யென்றால் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்படும் என்றார்.

    காங்கிரஸ் கவுன்சிலர் வெங்கடாச்சலம் பேசும் போது, எனது வார்டுகளில் உள்ள கிணறுகளில் மரங்கள் வளர்ந்துள்ளன. அதை சுத்தம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

    காங்கிரஸ் கவுன்சிலர் துரைசாமி பேசும்போது, காந்திநகர் அருகே பள்ளத்தில் செடி, கொடிகள் முளைத்து மிகவும் அடர்த்தியாக உள்ளது. மழைநீர் செல்வதற்கு வழி இல்லை. பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் அப்பகுதியில் வசிக்கும் வீட்டினுள் வந்து விடுகிறது. இதனால் புதர்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தர வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் புவனேஸ்வரி பேசும் போது, குப்பைகளை எடுத்து ச்செல்லும் வண்டிகள் குறைவாக உள்ளது. ஆகவே கூடுதலாக இயக்கவேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய துணைத்தலைவர் சிதம்பரம் புளியம்பட்டி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளு க்காக தேவையான நடவடி க்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    புன்செய்ப் புளியம்பட்டி பகுதிகளில் 3-வது குடிநீர் திட்ட பணிக்காக ரூ.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    • ஈரோடு பகுதியில் 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க ஆண்டு பொது மகா சபை கூட்டம் வரும் 5-ந் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் பெருந்துறை, ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் ஈரோடு, கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க ஆண்டு பொது மகா சபை கூட்டம் வரும் 5-ந் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே அன்றைய தினம் மஞ்சள் ஏலம் நடைபெறாது. 6-ந் தேதி வழக்கப்போல ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரட்டுபள்ளம் அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று இரவு அணை தனது முழு கொள்ளளவான 33 கன அடியை எட்டியது.
    • இதனால் வரட்டுப்பள்ளம் அணை விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுபள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 33 கன அடி கொள்ளளவு கொண்ட அணை நடப்பாண்டு 4 முறை நிரம்பி வழிந்தது.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வரட்டுப்பள்ளம் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு தண்ணீர் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று இரவு அணை தனது முழு கொள்ளளவான 33 கன அடியை எட்டியது.

    தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு மதகுகள் வழியாக வெளியேறும் நீர் அந்தியூர் மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நடப்பாண்டு 5-வது முறையாக அணை நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் சுப்பையன் பாளையம் பிரிவு அருகில் அத்திக்கடவு -அவினாசி திட்ட பைப் லைன் செல்கிறது. அப்பகுதியில் தண்ணீர் திறந்து விடும் வால்வு உள்ள இடத்தில் சுமார் 3 அடி அகலத்தில் தொட்டி கட்டியுள்ளனர்.

    இந்த தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை 8.30 மணியளவில் திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் திங்களூர் நீல கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (48) என்பதும், நேற்று இரவு தண்ணீர் திறந்துவிடும் வால்வு அமைக்கப்பட்டுள்ள தொட்டி மீது அமர்ந்து மது அருந்திய போது போதையில் தவறி தொட்டிக்குள் தலை குப்புற கவிழ்ந்து விழுந்து தலையில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×