என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
    • ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைகிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்ப்பது, கூலி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி மாவநத்தம் கிராமத்தில் மாரம்மா (40) , தடசலட்டி கிராமத்தில் கடந்த கவுரியம்மாள் (65), ரங்கன் (75), மாதி (85) என 4 பேர் வாந்தி பேதியால் திடீரென உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 5-ந் தேதி மாரே (67) என்பவரும், இட்டரை கிராமத்தில் கேலன் (60) என்பவர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கடந்த வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.

    தொடர்ந்து வயதானவர் உயிரிழந்தது மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று கிராமங்களில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆகியோர் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    மேலும் பஞ்சாயத்து மூலம் குளோரின் பவுடர்கள் போடப்பட்டுள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீரை பயன்படுத்துவதன் மூலமும், குட்டை நீரை குடிநீராக குடித்ததாலும், மேலும் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதாலும் இங்குள்ள வயதானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வாந்தி பேதி ஏற்பட்டு மேற்கண்ட நபர்கள் இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தடசலட்டி கிராமத்தை சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இட்டரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் சத்தியமங்கலம் தனியார் மருத்துவ மனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செல்போன் தொடர் சேவை கூட இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் மற்றவர்களை தொடர்பு கொள்ளாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த மலைகிராமத்தில் மருத்துவ குழு கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், 108 ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இலகுரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சென்று வருகிறது.
    • கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பரவலாக மழை செய்து வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சென்று வருகிறது.

    சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை வழியாக மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பரவலாக மழை செய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதை சாலையின் ஓரங்களில் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

    தற்போது பெய்துள்ள மழை காரணமாக சாலையின் ஒரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதையில் உள்ள சாலைகள் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டு குழிகளாக இருப்பதால் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் மிகுந்த சிரமத்தில் வர வேண்டிய நிலை உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    • கருணாநிதியின் பேனாவுடன் கூடிய மணிமண்டபமும் அமைத்துள்ளார்.

    ஈரோடு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநி தியின் 101-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாட ப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஓவியரும், கலை ஆசிரியருமான ஈரோடு இந்திரா நகர் மோசிக்கீரனார், 2- வது வீதியை சேர்ந்த சவுகத் அலி மகன் ஷானவாஸ் (வயது 29) பிரஸ் உதவியின்றி தனது நாக்கால் வெள்ளை சார்ட்டில் கருப்பு மையை பயன்படுத்தி 3 அடி நீளம், 2 அடி அகலத்தில் 20 நிமிடத்தில் கருணாநிதியின் படத்தை வரைந்து அசத்தி உள்ளார்.

    இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷானவாஸ் ஏற்கனவே, சலவை சோப்புகளை கொண்டு கருணாநிதியின் மணிமண்டபமும், கருணாநிதியின் பேனாவுடன் கூடிய மணிமண்டபமும் அமைத்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு தமிழ் வாழ்க என்ற வாசகங்கள் அடங்கிய ரப்பர் ஸ்டாம்பினை பயன்படுத்தி மஞ்சப்பையில் கருணாநிதியின் உருவப்படத்தை வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    ஷானவாஸ் ஓவிய திறமையை பாராட்டி கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி கலை வளர்மணி விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பச்சாம் பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை மகன்கள் ராஜேந்திரன், சிவகுமார். 2 பேரும் அண்ணன், தம்பிகள். இருவரும் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கூலி வேலைபார்த்து வருகின்றனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பருவாச்சியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அந்தியூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மற்றும் சிவகுமார் வீட்டில் இடி தாக்கியது. இதைத்தொடர்ந்து 2 பேர் வீடும் சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.

    வீடுகளிலும் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம், 5 பவுன் நகை, தொலைக் காட்சி பெட்டிகள், கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து கருகிவிட்டன. நல்ல வாய்ப்பாக இடி தாக்கிய போது 2 பேர் வீட்டிலும் ஆட்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ராஜேந்திரன், சிவகுமார் வீட்டை பார்த்து கதறி அழுதனர். அந்தியூர் தாசில்தார் கவியரசு, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், பச்சாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

    • மரத்தின் மீது டார்ச் லைட் அடித்து பார்த்தபோது யானை பலாப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பக்கத்து தோட்டத்துக்குள் யானை வந்துவிடக்கூடாது என்பதற்காக யானையை விரட்ட முயன்றார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த 2 மாதமாக கடும் வெப்பம் பதிவாகி வந்ததால் வனப்பகுதியில் வறட்சி நிலவியது. நீர்நிலைகள் வறண்டதால் வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் அம்மன் கோவில் அருகே உள்ள பலாப்பழம் மரத்தின் மீது தனது இரு கால்களை கீழ் வைத்தும், மற்றொரு இரு கால்களையும் மரத்தின் மீது வைத்து பலாப்பழங்களை பறித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது. அதன் அருகே விவசாய தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயி ஒருவர் யானை சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வந்து மரத்தின் மீது டார்ச் லைட் அடித்து பார்த்தபோது யானை பலாப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பக்கத்து தோட்டத்துக்குள் யானை வந்துவிடக்கூடாது என்பதற்காக யானையை விரட்ட முயன்றார். ஆனால் அந்த காட்டு யானை அந்தப் பகுதியை விட்டு அசையவில்லை. உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு விரட்டினர். இப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் நெய்தாலபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் மீண்டும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவானது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    வேர்வை, புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்பட்டனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மோர், இளநீர், கரும்பு பால் போன்றவற்றை மக்கள் விரும்பி பருகினர். இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் கொழுத்த தொடங்கியது. இதனால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அஞ்சி இருந்த நிலையில் திடீரென பரவலாக மழை பெய்து தொடங்கியது.

    கிட்டத்தட்ட இரண்டு வாரமாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. வழக்கம் போல் காலை 8 மணி அளவில் வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் மீண்டும் அவதி அடைந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு நேற்று ஈரோடு மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. வீடுகளில் மீண்டும் புழுக்கம் நிலவுகிறது. சாலைகளில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது.
    • டந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம், 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). விவசாயி. இவர் மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    மாடுகளை வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவரது மாடு ஒன்று கிடாரி கன்றுக்குட்டி ஒன்றை ஈன்று இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை எழுந்த கிருஷ்ணசாமி கால்நடைகளை தீவனம் வைக்க வந்தார். அப்போது தொழுவத்தில் இருந்த பிறந்த 20 நாட்களே ஆன கிடாரி கன்றுக்குட்டியை மர்ம விலங்கு கடித்துக்கொன்றது தெரிய வந்தது.

    இதுபோல் அருகே கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது. கன்றுக்குட்டியின் பாதி உடலையும், கோழிகளின் பாதி உடலையும் அந்த மர்ம விலங்கு கடித்து தின்று உள்ளது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏதும் மர்ம விலங்கு கால் தடங்கல் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் கிருஷ்ணசாமி வீட்டுக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

    பின்னர் வனத்துறையினரின் தீவிர விசாரணையில் அந்த மர்ம விலங்கு நாய்கள் என தெரிய வந்தது. தற்போதும் மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி, கோழிகள் இறந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது. அப்படி வெளியேறும் யானைகள் ரோட்டை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது.

    இதனால் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிகளில் வெயில் காரணமாக கடும் வரட்சி நிலவியது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து கிடந்தது.

    அதே போல் வெயில் கொளுத்தியதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது. இதனால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி காணப்பட்டது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம், கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியே வந்தது.

    இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதே போல் தொடர்ந்து வனப்பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை தூறு கொண்டே உள்ளது.

    இதனால் தாளவாடி வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதே போல் தாளவாடி வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பச்சை பசேலென இருக்கிறது.

    தொடர் மழையால் தாளவாடி வனப்பகுதிகளில் உள்ள வன குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் வன விலங்குகளில் அங்கு உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் பெரும்பாலான யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது குறைந்தது. ஆனால் ஒரு சில யானைகள் மட்டுமே வனப்பகுதியை விட்டு வெளியேறினாலும் அவை அமைதியான முறையில் ரோட்டை கடந்து சென்று விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் தொல்லையின்றி சென்று வருகிறார்கள்.

    இதே போல் அநதியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகளிலும் யானைகள்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி வெளியேறி வந்தன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அந்த பகுதிகளில் குட்டைகளில் தண்ணீர் குடித்து வருகிறது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவது குறைந்து உள்ளது.

    • கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மலைப்பகுதி, பவானிசாகர் அணை பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

    கடந்த வாரம் 44 அடியில் இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரு வார தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 52.53 அடியாக உயர்ந்துள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணை நீர்மட்டம் பலத்த மழை காரணமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 37.40 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.39 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
    • சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், கரடி, சென்னாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு. இந்த சமயங்களில் சாலையில் சிறிது நேரம் நின்று சாலையோரம் உள்ள மூங்கில் தூரிகளை உடைத்து சுவைத்து விட்டு செல்லும்.

    கடந்த 4 நாட்களாக மேற்கு மலை தாளக்கரை பகுதி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையிலேயே நடந்து சென்றும், அந்த பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை சுவைத்தும் சாலையில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பகல் நேரத்தில் நடந்து உலா வருவதாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    மேலும் இந்த ஒற்றை யானையால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றும் வனப்பதிக்குள் யானை சென்ற பிறகு சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வனவிலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம். எனவே இருசக்கர வாகனத்திலும். 4 சக்கர வாகனத்திலும் செல்பவர்கள் வனப்பகுதிகளுக்குள் மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் செல்ல வேண்டும், மேலும் சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் நேற்று தடை விதித்திருந்தனர்.
    • நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாகும். இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.

    ஈரோட்டில் குற்றாலம் என்று கொடிவேரி தடுப்பணை அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு விற்கப்படும் மீன் வறுவல்களை சுற்றுலா பயணிகள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். தற்போது விடுமுறை நாள் என்பதால் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் கோபி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியது.

    இதனை தொடர்ந்து கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் நேற்று தடை விதித்திருந்தனர். இது தொடர்பாக நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் கொடிவேரி தடுப்பணையில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    • கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு குறைவாக வந்து கொண்டிருந்தது.
    • கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு குறைவாக வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நீலகிரி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றும் பவானிசாகர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,738 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் 5 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் பலத்த மழை காரணமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 37.10 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.29 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×