என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திர ங்கள் அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும்,

    474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கணினி வழியில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்

    ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் வழங்கினார்.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
    • செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கிழக்கு கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் நதியா கோவித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

    பின்னர், செந்தில்குமாரின் பெற்றோர் சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் செந்தில்குமாரின் பெற்றோர் தங்களது குழந்தையை எடுத்து கொஞ்சக்கூடாது என நதியா கூறியுள்ளார். இதனால் சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவித்துக்கொண்டு கவுந்தப்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். செந்தில்குமார் பல முறை போனில் பேசி நதியாவை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் நதியா வரமறுத்துவிட்டார்.

    இந்த நிலையில் நேரில் சென்று நதியாவை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக செந்தில்குமார் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கவுந்தப்பாடி சென்றுள்ளார்.

    ஆனால் அன்று மதியம் அவர்களது உறவினர் ஒருவர் செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில்குமாரின் பெற்றோர் சென்று அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள முள் புதர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொடுமுடி, சாலைப்புதூரை சேர்ந்த மகேஷ்வரன் (33), பெரியசாமி (37), நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49), தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்த நவமணி (53), இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (44) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பர்கூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பர்கூர் அருகே உள்ள துருசனம் பாளையத்தில் கெஞ்சேகவுடர் என்பவரது வீட்டின் முன் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (27), மாதேவன் (37), சிவலிங்கம் (28), தேவராஜ் (30), பரமேஸ் (30), நாகராஜ் (35), தேவராஜ் (28) ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.4,900 ஆகியவற்றையும் பர்கூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் விளா முண்டி வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் இருந்து யானை கள் உள்பட பல வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள பவானிசாகர் நீர் தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கிறது.

    மேலும் வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதிகளில் யானை மற்றும் சிறுத்தைகள் புகுந்து வரு கிறது.

    இதே போல் விளாமுண்டி வனப்பகுதி அருகே கல் குவாரி மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் கண் காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விளா முண்டி பகுதியில் இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதை கேட்டு பொதுமக்கள் வன விலங்கு ஏதாவது வந்து உள்ளதா? என அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அங்கு வேலை செய்பவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கல்குவாரி அடுத்த கிராம பகுதியில் ஒரு சிறுத்தை நுழைந்து அங்கு காவலுக்கு இருந்த நாயை துரத்தியது. இதையடுத்து அந்த நாய் சிறுத்தையிடம் சிக்காமல் தப்பி சென்று உயிர் தப்பியது பதிவாகி இருந்தது.

    மேலும் நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து அவர்கள் விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் பவானிசாகர் வனசரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை குழுவினர் கண்காணிப்பு காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று விட்டதா? அல்லது அந்த பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, விளா முண்டி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளி யேறி ஊருக்குள் வருவது கண்காணிப்பு கேமிரா காட்சியில் பதிவாகி உள்ளது.

    எனவே இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கல்குவாரி யில் வேலை செய்பவர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு தினமும் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பஸ்களும் பெரும் அளவில் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கால அட்டவணையை பின்பற்றா மல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவதாக தனியார் பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் வழக்கம்போல் சென்னிமலை பஸ் நிலை யத்துக்கு வந்தது. அந்த பஸ் கண்டக்டர் அங்கு பயணி களை ஏற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அதே நேர த்தில் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.

    இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தனியார் பஸ்சை வழிமறித்து ஏன் முன் கூட்டியே செல்கிறீர்கள் என டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ் டிரைவரிடம் நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் காலை, மாலையில் முன்கூட்டியே செல்கிறீர்கள் என்றும், உங்கள் பஸ்சின் கால அட்டவணையை கொடுங்கள் என்றும் கேட்டனர்.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 2 பஸ்களும் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    இதுபோன்ற நேர பிரச்சனை காரணமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் அடிக்கடி அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    • மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர்.
    • தலைமறைவாக இருக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவர் கடந்த 21-ந் தேதி காரில் கோவை நோக்கி சென்ற போது, பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில், மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல் காரை வழிமறித்து அவரை தாக்கி காரை கடத்தி சென்றது.

    அடுத்த சில மணி நேரத்தில் சித்தோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் மீட்கப்பட்டது. காரில் ரூ.2 கோடி பணம் இருந்ததாகவும், மர்ம கும்பல் அதனை கொள்ளையடித்து சென்றதாகவும் விகாஸ் சித்தோடு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சித்தோடு போலீசார் இதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி., பவானி டி.எஸ்.பி. தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சித்தோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் 6 வாலிபர்கள் இருந்தனர்.

    காரில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும் சோதனை நடத்தியதில் வீச்சரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளன.

    மேலும் ரொக்கப்பணம் ரூ.20,000 இருந்தது. இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயன், சந்தோஷ், டைடாஸ், விபூல் என்கிற சந்தோஷ், முஜிப் ரஹ்மான், முஜூபூர் ரஹ்மான் ஆகியோர் என்பதும். இவர்கள் கடந்த 21-ந் தேதி பவானி லட்சுமி நகர் அருகே விகாஸ் காரை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதேபோலவே மற்றொரு கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு சென்றபோது போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். 6 பேரையும் கைது செய்ததுடன் அவர்கள் வந்த வாகனத்தையும், ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரின் சோதனையை கண்டதும் இந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர். இந்த 5 பேர் கும்பலுக்கும் ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தக் கொள்ளை கும்பல் இதே போல் பலரிடம் கைவரிசை காட்டி இருக்ககூடும் என கருதப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 2-வது நாளாக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ராமச்சந்திரன் மற்றும் கணேசமூர்த்தி எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். பொதுக் கூட்டங்கள் நடத்துவதை விட இது சிறந்த வழியாகும். முதலமைச்சர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அதனை கூறி வாக்கு சேகரிப்போம். வரும் 3-ந் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி பரப்பளவில் சிறிய தொகுதியாகும்.
    • அரசியல் கட்சியினரின் கார்கள் சாலைகளில் அணிவகுத்து வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சியினர் ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி பரப்பளவில் சிறிய தொகுதியாகும். இந்த தொகுதி மாநகராட்சி பகுதியில் மட்டுமே வருவதால் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொகுதிக்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.

    இதனால் அரசியல் கட்சியினரின் கார்கள் சாலைகளில் அணிவகுத்து வருகின்றன. மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு குறுகிய சாலைகள் மற்றும் வளைவுகளில் கார்கள் அதிகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    தினமும் காலை, மாலை நேரங்களில் ஜி.எச். ரவுண்டானா, பஸ்நிலையம், கடைவீதி, பன்னீர்செல்வம் பார்க், காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், கொல்லம் பாளைம் ரெயில்வே நுழைவு பாலம், கருங்கல் பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன் சத்திரம், பெருந்துறை ரோடு, பி.பி.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    • வெளிமாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.
    • தொகுதிக்குள் காரில் கட்டி வரும் அரசியல் கட்சியினரின் கொடிகளையும் போலீசார் அகற்றி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

    இதனையடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படம் மறைக்கப்பட்டன கல்வெட்டுகளும் துணியால் மூடி மறைக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டன. மேலும் சுவர் விளம்பரங்கள் பேனர்கள் அகற்றப்பட்டன.

    இடைத்தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்கும் வகையிலும், தடுக்கும் வகையிலும் ஏற்கனவே 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை வெளிமாநில வியாபாரி ஒருவரிடம் ரூ.1.17 லட்சம் பணம், நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.1.34 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் நிலை கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டது.

    இந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரவு, பகல் பாராமல் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கிய சோதனை சாவடியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தான் சென்னை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதியில் இருந்து வாகனங்கள் வருகின்றன.

    எனவே இந்த சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் போலீசார் உடன் இணைந்து முகாமிட்டு தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டுக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    அதனை வீடியோ மூலம் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் 11 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் முகாமிட்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதேப்போல் வெளிமாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.

    இதேப்போல் அதிமுக சார்பில் 120 பேர் கொண்ட தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் வெளி மாவட்ட நிர்வாகிகளும் முகாமிட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று முதல் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, ஜி.எச். ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், மூலப்பட்டறை, பவானி ரோடு என ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள முக்கியமான 35 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் வாகன சோதனைக்கு என்றே 256 போலீசார் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் உள்ளனர். இவர்கள் கார்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் கார்களில் வருபவர்களின் விவரம், முகவரி, தொலைபேசி எண்ணை பதிவு செய்து வருகின்றனர். இதனை தங்கள் செல்போன்களிலும் பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகளில் தனியாக 60 போலீசார் நியமிக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். ஒவ்வொரு சோதனை சாவடியிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2 நிரந்தர சோதனை சாவடிகள் உள்ளன. அதுபோக தேர்தலுக்காக கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர், பவானி ரோடு, பெருந்துறை ரோடு போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தொகுதிக்குள் காரில் கட்டி வரும் அரசியல் கட்சியினரின் கொடிகளையும் போலீசார் அகற்றி வருகின்றனர்.

    • வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர்களின் வாகனங்கள் 100 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விட்டு வர வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.

    வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வழங்க உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் செய்யப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யும் வரும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர்களின் வாகனங்கள் 100 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விட்டு வர வேண்டும். அரசியல் கட்சியினர் உடன் வரும்போது கோஷங்கள் எழுப்பக்கூடாது. வேட்பு மனுத்தாக்கல் விடுமுறை நாளான 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தாக்கல் செய்யலாம். பொது பிரிவினர் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு டெபாசிட் தொகையாக ரூ.5 ஆயிரம் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்திலிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தது.

    வேட்புமனுக்கள், முன்மொழிவு படிவம், தபால் கவர் உள்ளிட்ட வேட்பு மனு படிவதற்கான ஸ்டேஷனரி பொருட்கள் தேர்தல் ஆணையத்திலிருந்து நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பொருட்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் தேர்தல் பிரிவு அமைந்துள்ள மைய அலுவலகத்தின் 2-ம் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பான முறையில் அறையில் வைத்து பூட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் மற்றும் அவரது சார்பில் வருபவர்கள் தங்களது சுய விபரத்தை குறித்து பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேட்பு மனுத்தாக்கலையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • அரசியல் கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு வீடு தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் நடமாட்டமாகவே உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் பணியாற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஈரோட்டில் திரண்டு உள்ளனர்.

    அவர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியாற்ற ஈரோடுக்கு வந்து இருப்பதால் இங்கு உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் அரசியல் கட்சியினரின் கூட்டம் அலைமோதுகிறது.

    இதனால் 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இதே போல் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு வீடு தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீட்டின் வசதியை பொறுத்து மாத வாடகையாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும், பங்களா போல்இருந்தால் ரூ. 1 லட்சம் வரை வீட்டு உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

    தங்கும் விடுதி, ஓட்டல்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் தங்கியுள்ளனர். தொண்டர்கள் தங்க வாடகைக்கு வீடு தேடும் பணியில் உள்ளுர் கட்சிகாரர்கள் உதவியுடன் வெளியூர் அரசியல்வாதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் நடமாட்டமாகவே உள்ளது.

    ஈரோடு நகர பகுதியில் வீடு வாடகை அதிகமாக இருப்பதால் சிறிய சிறிய கட்சியினர் ஈரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள சோலார், திண்டல், கஸ்பாபேட்டை, ரங்கம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடுகளை தேடி வருகின்றனர்.

    • தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சியினர் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர்.
    • அ.தி.மு.க. சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இதேப்போல் தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சியினர் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். பா.ம.க, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட போவதில்லை என்று அறிவித்து விட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இன்னமும் தெரியவில்லை. அ.தி.மு.க. சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டிட்ட பெண் வேட்பாளர் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அதாவது அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது 7.65 சதவீதமாகும்.

    இதனால் தற்போது இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஈரோடு மரப்பாலத்தில் இன்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். கடந்த முறை போன்று பெண் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ×