search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்- 35 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை

    • வெளிமாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.
    • தொகுதிக்குள் காரில் கட்டி வரும் அரசியல் கட்சியினரின் கொடிகளையும் போலீசார் அகற்றி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

    இதனையடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படம் மறைக்கப்பட்டன கல்வெட்டுகளும் துணியால் மூடி மறைக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டன. மேலும் சுவர் விளம்பரங்கள் பேனர்கள் அகற்றப்பட்டன.

    இடைத்தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்கும் வகையிலும், தடுக்கும் வகையிலும் ஏற்கனவே 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை வெளிமாநில வியாபாரி ஒருவரிடம் ரூ.1.17 லட்சம் பணம், நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.1.34 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் நிலை கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டது.

    இந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரவு, பகல் பாராமல் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கிய சோதனை சாவடியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தான் சென்னை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதியில் இருந்து வாகனங்கள் வருகின்றன.

    எனவே இந்த சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் போலீசார் உடன் இணைந்து முகாமிட்டு தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டுக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    அதனை வீடியோ மூலம் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் 11 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் முகாமிட்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதேப்போல் வெளிமாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.

    இதேப்போல் அதிமுக சார்பில் 120 பேர் கொண்ட தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் வெளி மாவட்ட நிர்வாகிகளும் முகாமிட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று முதல் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, ஜி.எச். ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், மூலப்பட்டறை, பவானி ரோடு என ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள முக்கியமான 35 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் வாகன சோதனைக்கு என்றே 256 போலீசார் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் உள்ளனர். இவர்கள் கார்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் கார்களில் வருபவர்களின் விவரம், முகவரி, தொலைபேசி எண்ணை பதிவு செய்து வருகின்றனர். இதனை தங்கள் செல்போன்களிலும் பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகளில் தனியாக 60 போலீசார் நியமிக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். ஒவ்வொரு சோதனை சாவடியிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2 நிரந்தர சோதனை சாவடிகள் உள்ளன. அதுபோக தேர்தலுக்காக கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர், பவானி ரோடு, பெருந்துறை ரோடு போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தொகுதிக்குள் காரில் கட்டி வரும் அரசியல் கட்சியினரின் கொடிகளையும் போலீசார் அகற்றி வருகின்றனர்.

    Next Story
    ×