என் மலர்
ஈரோடு
- காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பது தெரிய வந்தது.
- பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.1.74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11.20 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையம் அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.
அந்த காரை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்திய போது ரூ.1.74 லட்சம் பணம் இருந்தது.
இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குமரவேல் (39) என்பது தெரிய வந்தது. மேலும் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.1.74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அவரிடம் அறிவுறுத்தி உள்ளனர்.
- சென்னிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு 'நிலாச்சோறு' திருவிழா தொடங்கியது.
- தை மாதம் முழு நிலவு நாளில் ஊரிலுள்ள குழந்தைகள் பெண்கள் ஒன்று கூடி உணவு உண்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
சென்னிமலை:
தமிழகத்தில் தை மாதத்தில் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பறிக்கும் திருவிழா, ஜல்லிக்கட்டு திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதில் மற்றொரு விழா 'நிலாச்சோறு' திருவிழா. இத்திருவிழா ஒவ்வெரு ஆண்டும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுற்றுப்புற கிராம பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு 'நிலாச்சோறு' திருவிழா தொடங்கியது. விழா தொடந்து 5 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவின் 5-ம் நாள் இரவு பவுர்ணமி இரவில் விடிய விடிய விழா நடப்பது தனிச்சிறப்பு.
பெண்கள் மாட்டு சாணத்தால் மெழுகி அதில் வண்ணக்கோலமிட்டு பிள்ளையார் பிடித்து வைத்து அவரவர் வீடுகளில் இருந்து கொண்டு வந்துள்ள உணவு பதார்த்தங்களை வைத்து பூஜை செய்து விட்டு நிலாச்சோறு ஊட்டுவர்.
பூஜை செய்த பலகாரங்கள் உணவுகளை சாப்பிட்டு விட்டு உக்கை என கூறி களி மண் கொண்டு ஒரு சதுர வடிவமாக செய்து அதற்கு பூ அலங்காரம் செய்து வைத்து அதை சுற்றி பெண்கள் பாட்டுப்பாடி கும்மி கொட்டுவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளால் திருவிழா களைகட்டும்.
தை மாதம் முழு நிலவு நாளில் ஊரிலுள்ள குழந்தைகள் பெண்கள் ஒன்று கூடி உணவு உண்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். மாறிவரும் இன்றைய சூழலில் இன்னும் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு மட்டுமல்ல மக்களின் கூட்டு வாழ்க்கையை அதன் உயரிய பெருமைகளைப் பாதுகாத்து நிற்கிறது. இந்த நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள கலைத்திறனை வெளிப்படுத்துகின்றனர்.
ஆண்களும் முன் வந்து கும்மியடிப்பார்கள். குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டு கிராமங்களில் 5 நாளும் நிலவு வெளிச்சத்தில் நடக்கும் இந்த விழாவில் பெண் கள் பல்வேறு நிகழ்வுகளை பாடல்கள் மூலம் பதிவு செய்வர். விழா நாளை மறுநாள் (4-ந் தேதி) இரவு நிறைவு பெறுகிறது.
- கோவை சரக டி.ஜ.ஜி விஜயகுமார் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
- வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஈரோடு:
திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்காக ஈரோடு அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில் கோவை சரக டி.ஜ.ஜி விஜயகுமார் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி உள்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
- அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க, ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 10-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வினோதமான முறையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். இதில் முதல் நாளில் 4 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற 6 பேர் மனுக்கள் முறையாக பூர்த்தி செய்யாததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்றும் சுயேச்சைகள், சில அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். 2-வது நாளில் 6 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 நாட்களில் மட்டும் 10 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாளை முக்கிய கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதனால் நாளை ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 3 பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதனையடுத்து தேர்தல் பிரசார களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
- வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
- இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம், கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் (46). இவர், கரூர் மெய்ன்ரோட்டில் உள்ள சோலார்பகுதியில், பாஸ்ட் புட் கடை ஒன்றின் அருகே நேற்று நின்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு நபர் அவரிடம், வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து, உமா மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு லாட்டரி விற்பனை செய்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் சோலார் புதூர், பாலுசாமி நகரைச் சேர்ந்த சண்முகராஜா ( 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
- அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், தாளவாடி – ஆசனூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை பின்புறம், கர்நாடக மாநில மதுவை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அங்கு சென்ற தாளவாடி போலீசார்,அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், ஆசனூர், ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்த சோமு (40) என்பது தெரியவந்தது. இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.
- ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில் சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சீனியன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (44). இவரது மனைவி சகிலா பானு. இவர்களது மகன் சாகுல் அமீது (12). அமீர் அப்பாஸும், அவரது மனைவி சகிலா பானுவும் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்ற னர்.
பின்னர் அவர்கள் மீண்டும் காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிட ப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகத் தட்டிப் பார்த்தும் கதவு திறக்காததால், தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.
அப்போது தான் வழக்கமாக விளையாடும், சேலையால் கட்டப்பட்ட ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில், சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவனை மீட்டு, மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாடி த்துடிப்பு குறைந்து வருவ தாக டாக்டர்கள் கூறி யுள்ளனர்.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் சாகுல் அமீதை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டில் தனியாக இருந்த சிறுமி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதி யை சேர்ந்த வயது 17 சிறுமி ஒருவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் செல்போனில் இன்ஸ்ட்ரா கிராம் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவரது பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி ஒரு அறையில் பேன் கொக்கியால் தனது தாயாரின் சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.
இதை கண்ட அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரகாஷ் மது குடித்து விட்டு ரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
- இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 55). இவர் பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையயடுத்து அந்த பகுதியில் தனது தாயாருடன் தங்கி வந்தார். மேலும் இவ ருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும் கூற ப்படுகிறது.
இந்த நிலையில் பிரகாஷ் பு.புளியம்பட்டி- பவானி சாகர் ரோட்டில் மது குடித்து விட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து மேல் கிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்பட உள்ளது.
- இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக இன்று முதல் 14-ந் தேதி வரை வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடத்தப்பட உள்ளது.
சிறிய குஞ்சுகள் முதல் பெரிய கோழிகள் வரை அனைத்து கோழி இனங்களையும் பாதிக்கும் முக்கியமான நச்சுயிரி தொற்று நோயான வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கெட் நோய் வெயில் காலங்களில் அதிக அளவில் பரவி 100 சதவீதம் வரை கோழிகளில் இறப்பு ஏற்படுத்த கூடியதாகும்.
இந்நோய் கண்ட கோழிகள் வெள்ளைக்கழிச்சல், குறுகிக்கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும். நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும், கழுத்தை திருகி கொண்டும் இருக்கும். இந்நோய் பரவிய பின் மருத்துவம் செய்து குணப்படுத்துவது கடினம்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் இத்தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியினை செலுத்தி கோழிகளில் ஏற்படும் இறப்பினை தவிர்ப்பதன் மூலம் கோழிவளர்ப்பில் அதிகலாபம் பெறலாம்.
இந்த அரியவாய்ப்பினை அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.
- தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.
ஈரோடு:
தொழில் முனைவோர் மத்திய அரசு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக 2021-22-ம் ஆண்டு முதல் தேசிய கால்நடை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி கோழி வளர்ப்பு, செம்மறி யாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் இலக்காகும்.
கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கு மூலதனத்தில் 50 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.
பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையும், தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்கு தனி நபர், சுய உதவி குழுவினர், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புபினர், விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கத்தினர் தகுதியா னவர்கள்.
திட்டத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திட்ட அங்கங்களில் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் https://nlm.udyamimitra.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்கள், ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 654 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 654 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 26 ரூபாய் 76 காசுக்கும், அதிகபட்ச விலையாக 30 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2 ஆயிரத்து 881 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.78 ஆயிரத்து 344-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.






