என் மலர்
ஈரோடு
- விவசாயிகள் பொதுபணித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் காரணமாக பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்தது.
ஈரோடு:
ஈரோடு கோண வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு இன்று கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து செயற்பொறியாளர் கண்ணனிடம் மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அரசாணை எண் 276-ன் படி அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஆயக்கட்டில் இல்லாத சிலரால் இந்த பணிகள் முடக்கப்பட்டது.
சீரமைப்பு பணிகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் (2022 - 2023) மட்டும் 4 முறை கால்வாயில் உடைப்புகள் ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் இடை நிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.
சீரமைப்பு பாசன பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் 276-ன் படி கால்வாய் சீரமைப்பு பணிகளை வரும் மே 1-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தெளிவாக ஆணையிட்டது.
மேலும் கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் போட்ட வழக்கில் சீரமைப்பு பணிகளை செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் ஊழியர்களுக்கும், எந்திரங்களுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒரு ஆணையையும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
எனவே வரும் 1-ந் தேதி எவ்வித காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொதுபணித்துறை அலுவலகம் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறும்போது, வரும் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லை யென்றால் 5-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.
விவசாயிகளின் இந்த திடீர் காத்திருப்பு போராட்டம் காரணமாக ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்தது.
- ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.
மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.
அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது.
- பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.
பவானி:
பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) காலை சங்கமேஸ்வரர் சன்னதியில் கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது. இதை தொடர்ந்து நாளை மாலை பஞ்சமூர்த்தி கேடயம் புறப்பாடு நடக்கிறது.
இதை தொடர்ந்து வரும் 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து அபிஷேக ஆராதனையும், அன்று இரவு சேஷ வாகனம் மற்றும் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி காலை அபிஷேக ஆராதனை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடக்கிறது.
விழாவையொட்டி வரும் 30-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும், மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு மற்றும் 63 நாயன்மார்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி அபிஷேக ஆராதனை மற்றும் சாமி புறப்பாடும் நடக்கிறது.
இதை தொடர்ந்து வரும் 3-ந் தேதி காலை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை சங்கமேஸ்வரர் புறப்பாடும், 4-ந் தேதி காலை வேத நாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை மகா அபிஷேகமும் நடக்கிறது.
வரும் 5-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும் அன்று மாலை பரி வேட்டை சாமி புறப்பாடு, 6-ந் தேதி காலை தீர்த்தவாரியும், அன்று மாலை பிஷாண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதைதொடர்ந்து வரும் 7-ந் தேதி காலை நடராஜர் அபிஷேக ஆராதனை புறப்பாடும், அன்று மாலை மஞ்சள் நீர் விழாவும், சாமி புறப்பாடும், அவரோஹணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- குளத்தில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தது.
- மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்டது கனிராவுத்தர் குளம். ஈரோடு-சத்தி ரோட்டில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளம் பல்வேறு அமைப்பு களால் தூர் வாரப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்ப ட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டி ருந்துள்ளனர்.
அப்போது குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், நேற்று இந்த குளத்தில் சிலர் நிறைய மீன்களைப் பிடித்து சென்றனர். இன்று காலையில் அதே இடத்தில் தற்போது மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதற்கான காரணம் என்னவென்று தெரிய வில்லை என்றனர்.
திடீரென குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தை யும் ஏற்படுத்தி உள்ளது. மீன்கள் இறந்ததுக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- டாரஸ் லாரி துரைசாமி மீது திடீரென மோதியது.
- மருத்துவமனையில் டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சென்னிமலை:
காங்கேயம் யூனியன் திட்டம்பாளையத்தினை சேர்ந்தவர் துரைசாமி (61). இவர் திட்டம்பாளையத்தில் இருந்து காங்கேயம் - சென்னிமலை ரோட்டில் சென்னிமலை நோக்கி மொபட்டில் வந்தார்.
பசுவபட்டி பிரிவு அருகே ரோட்டை கடந்தபோது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அவரது மகன் நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் லாரியை ஓட்டி வந்த பவானி, வரதநல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொட ங்கியது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்ட த்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொட ங்கியது. அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷே கமும், வாஸ்து சாந்தியும் நடைபெ ற்றன.
23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும் மகா தீபாரா தனையும் நடைபெற்றன. நேற்று 2-ம் கால யாக பூஜையும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று 4-ம் காலயாக பூஜையும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நாளை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளன. பகல் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது.
மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் அருகில் அமைக்கப்ப ட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
- தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு 9 பேருக்கு பதிவாகி வந்துள்ளது.
- இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டிய ல்படி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு 9 பேருக்கு பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்க ப்பட்டுள்ள வர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குண மடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 016 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் வரை மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் கொரோனா பாதிக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 57-ஐ எட்டியது.
நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருந்துறை, ஏப். 25-
கோபிசெட்டிபாளையம் வருகை தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அ மைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில்
முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாள ருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினருமான ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,
பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வ ராஜ் மற்றும் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- பூவிழியன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.
- போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள புதுத்துறை பகுதியை சேர்ந்தவர் பூவிழியன் (21). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள டையிங் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பூவிழியன் வேலைக்கு வரவில்லை. நிறுவனத்தின் தங்கும் விடுதியிலும் இல்லை என அவரது தாயார் சித்ராவுக்கு (50) டையிங் நிறுவனத்தில் இருந்து போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெருந்துறை போலீசில் பூவிழியனை காணவில்லை எனகூறி புகார் தெரிவித்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந்துறை சேனிடோரியம் அருகில் உள்ள இணைப்பு சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பூவிழியன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பூவிழியனின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பாலாலய பூஜை நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டு பழமை வாய்ந்த கரிவரத ராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்ச்சியாக விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பாலாலய பூஜை நடந்தது.
இதை தொடர்ந்து கருத்திருமராய பெருமாள். கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வேணுகோபால சுவாமி உடனமர் ராதா ருக்மணிக்கு அத்தி மரத்தினால் ஆன உருவ சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டது.
இதையடுத்து தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
கோவில் திருப்பணிகள் முடிந்து இன்னும் ஒரு ஆண்டில் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பா பிஷேகம் நடைபெறும் என திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.
- அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை அலுவ லக கூட்ட ரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில்,
அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி முன்னேற்ற நிலை குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூ ட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி கள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்க டவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தி லிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடி யில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் ரூ.1,652 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரூ.1,756.88 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்க ப்ப ட்டுள்ளது. தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது.
இந்ததிட்டத்தில் குழாயின் மொத்த நீளம் 1065.30 கி.மீ . பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலைய ங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன் பாளை யம், திருவாச்சி, போ லநாயக்கன் பாளையம், எம்மாம் பூண்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் கட்டு மான பணிகள் முடிவடை ந்துள்ளது.
குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது.
தற்சமயம் சுமார் 797.17 கி.மீ. அளவு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின் மாற்றிகள், பம்புகள், மின் மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
மின் கம்பங்கள் அமை க்கும் பணி மற்றும் பூமிக்கடி யில் மின்சார தொடர மைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.
குளம், குட்டைகளில் கடையின் மேலாண்மை அமைப்பு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1,044 எண்கள் பொருத்த ப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு இது வரை ரூ .1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொ ள்ளப்பட்டு ள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலைய ங்கள் மற்றும் பிரதான குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக்கு ழாய்கள் மற்றும் 1,045 குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள மேலாண்மை அமைப்பு கருவிகளில் சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது.
அனைத்து சோதனை ஓட்டப்பணிகள் முடிக்கப்ப ட்டு மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரை வாக முடித்திட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) நாரணவ்ரே மனிஷ் ராவ், செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு- அவிநாசி திட்டம்),
உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி, உதவி செயற் பொறியாளர்கள் சங்கர் ஆனந்த், வெங்கடாஜலம், விஜயகுமார், திட்ட அலுவலர் பாலாஜி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அந்தியூர் போலீஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
- அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதி பகுதியில் பெண் வீடு புகுந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர்பேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பூபதி (40) வாகன உதிரி பாக கடையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு பூபதி மற்றும் அவரது மனைவி ஷாலினி, தாயார் ரத்தினம், மகன் ஆதிக் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு பெண் ஏணியை பூபதி வீட்டின் சுவற்றின் மேலே வைத்து ஏறி வீட்டுக்குள் குதித்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து அந்த பெண் வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது பூபதியின் தாயார் ரத்தினம் வீட்டில் விளக்கு எரிவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் எழுந்து சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அங்கு ஒரு பெண் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது நண்பர்கள் உதவியுடன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்தியூர் மீனவர் வீதியை சேர்ந்த சுமதி (40) என்பதும், அவர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். இதை தொடர்ந்து இந்த திருட்டில் சுமதி மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள்.
இன்று அதிகாலை அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதி பகுதியில் பெண் வீடு புகுந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






