என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
    • நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு, ஏப். 26-

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை கீழ்பவானி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்கால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பல நூறு கிராமங்களுக்கு விவசாயம் மற்றும் குடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலை காங்கிரீட் கால்வாயாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த 2 வருடங்களாக மீண்டும் காங்கிரீட் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், காங்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் துறை அமைச்சரிடம் பல சுற்று பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வரும் மே மாதம் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் வாய்க்காலில் காங்கிரீட் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

    வாய்க்கால் தொடங்கும் முதல் மைல் பகுதியில் இருந்து வாய்க்காலின் இருபுறமும் உள்ள புதுப்பாளையம், புங்கம்பாடி, வெள்ளியம்பாளையம்,

    வள்ளியரச்சல், சுந்தரபுரி, வெள்ளியங்காடு, ஆவாரங்காட்டு வலசு, காளி வலசு, மருதுறை, 100-வது மைலில் உள்ள சிவியார்பாளையம்,

    திட்டுப்பாறை, சின்னக்கவுண்டன் வலசு, சிக்காம்பாளையம், பரஞ்சேர்வழி கிராமம், நத்தக்காட்டு வலசு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் காங்கிரீட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது. அதற்கு அடுத்தவாரம் வழக்கம்போல ஏலம் நடைபெறும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

    • ராட்டை சுற்றிபாளையம் காலனி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
    • தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை டவுன் பஞ்சாயத்து 13-வது வார்டுக்கு உட்பட்ட ராட்டை சுற்றிபாளையம் காலனி பகுதி மக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு வழங்கினர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    அவல்பூந்துறை டவுன் பஞ்சாயத்து 13-வது வார்டு பகுதி காலனியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கிறோம். இங்கு குடிநீர் வசதி இல்லாததால் 2 கி.மீ. சென்று எடுத்து வருகிறோம்.

    பல வீடுகளில் வயதானவர்களாக உள்ளதால் தண்ணீர் எடுத்து வர சிரமமாக உள்ளது. நல்ல தண்ணீர் பைப்லைன் வழங்க வேண்டும்.

    எங்கள் பகுதி வழியாக பிரதான குடிநீர் குழாய் செல்வதால் பொது குழாய் அமைத்து அல்லது தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.

    எங்கள் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் அரசு சலுகை பெற முடியவில்லை. பட்டா கோரி விண்ணப்பித்தால் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டா வகையில் உள்ளதாக கூறுகின்றனர்.

    எங்கள் பகுதிக்கு சாலை, கழிவு நீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும். மழை காலங்களில் சிரமப்படுகிறோம்.

    எங்கள் பகுதிக்கு தனியாக சமுதாய கூடம் அமைத்து கொடுத்தால், எங்களது குடும்ப நிகழ்வுகள், மக்களுக்கான பணிகளை வைத்து செயல்படுத்த வாய்ப்பாகும். எங்கள் சமுதாயத்துக்கு தனியாக மயானம் ஒதுக்கி, சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த விவசாயிகள் 3,700 தேங்காயை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் ஒரு காசுக்கும், அதிகபட்சமாக 25 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கு ஏலம் போனது. மொத்தம் 1, 655 கிலோ எடை உள்ள தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.

    • மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுபடி, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் ஜெயராம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொசுக்கள் எப்படி உருவாகின்றன என்றும், அவற்றின் வாழ்க்கை சுழற்சி முறை, கொசுக்கள் எவ்வாறு நோய் பரப்பிகளாக செயல்படுகின்றன என்றும்,

    அவைகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துதல்,

    தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மலேரியா மற்றும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களான தேங்காய் சிரட்டைகள், உடைந்த பானைகள்,பழைய டயர்கள், உடைந்த டப்பாக்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கொசு புழுக்களையும் பாட்டிலில் அடைத்து வைத்து பள்ளி மாணவர்களும் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பின்னர் அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் நகராட்சி அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    • மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம். தாளவாடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    நேற்று இரவு மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மொடக்குறிச்சியில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் சென்னிமலை, கொடிவேரி அணைப்பகுதி, நம்பியூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: மொடக்குறிச்சி-26, சென்னிமலை-18, கொடிவேரி அணை-3, நம்பியூர்-2.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது.
    • பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.57 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,422 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 600 கன அடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.86 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.57 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது.

    • பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது.
    • விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பெரிய ஏரியில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. இன்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மொத்தம் 120 நாட்களுக்கு 32 மில்லியன் கன அடி நீர் பாசனத்திற்கு திறந்து விடபடுகிறது.

    இதன் காரணமாக பெரிய ஏரியின் ஆயக்கட்டு பகுதிகளான பச்சாம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

    இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், உதவி பொறியாளர் தமிழ் பாரத், பச்சாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரன் பானுமதி, துணைத்தலைவர் பூபதி, விவசாய சங்கத்தலைவர் கண்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.

    திறந்த விடப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது. அப்போது ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதில் தகவல் தொழில் நுட்ப அணி ஈரோடு வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷேகமும், வாஸ்து சாந்தியும் நடைபெற்றன. 23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    24-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 5-ம் காலயாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

    முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு சிறப்பித்தார்.

    மேலும் கோபி, பாரியூர், நாயக்கன் காடு, வெள்ளாளபாளையம், கூகலூர், அழுக்குளி, குருமந்தூர், சவன்டபூர், வலையபாளையம், காசிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது.

    • ரேஷன் கடையில் இருப்பு பரிசோதனை அதிகாரி நர்மதா ஆய்வு செய்தார்.
    • 147 பாக்கெட் பாமாயில் இருப்பில் குறைந்துள்ளது.

    சென்னிமலை, ஏப். 26-

    சென்னிமலை டவுன் அப்பாய்செட்டி வீதியில் அம்மாபாளையம் பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.

    இந்த வங்கியின் சார்பாக சென்னிமலை டவுன் பசுவபட்டி, ராமலிங்கபுரம், எக்கட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் சென்னிமலை டவுன் அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் விற்பனையாளராக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இந்த ரேஷன் கடையில் சம்பவத்தன்று இருப்புகளை சரிபார்க்க இருப்பு பரிசோதனை அதிகாரி நர்மதா நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் இருப்புக்களை ஆய்வு செய்த போது 147 பாக்கெட் பாமாயில் இருப்பில் குறைந்துள்ளது.

    அப்போது பாமாயில் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு வழங்காமல் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அம்மாபாளையம் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சந்திரன் என்ற விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் இது குறித்து துணைப்பதிவாளர் தலைமையில் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் முழுமையான இருப்பு பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால், பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 345 கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் நேற்று காலை பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நம்பர்கள் அரிவாளால் லூர்து பிரான்சிசை வெட்டினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

    இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் அந்தந்த தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஈரோடு வட்ட தலைவர் ஜான் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் கார்த்தி, மாவட்ட துணை தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

    மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால், பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதேபோல் அந்தியூர், தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் தாசில்தார் அலுவலகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 345 கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். முன்னதாக படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் கார்த்திக்-ஜோதி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • மகளை காதல் திருமணம் செய்த வாலிபரை பெற்றோர் கொலை செய்ய முயன்ற சம்பவம் தாளவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி திகனாரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் விக்னேஷ் கார்த்திக் (29). இதே பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். அவரது மனைவி துளசியம்மா. இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார்.

    விக்னேஷ் கார்த்திக்கும், ஜோதியும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுபற்றி தெரிய வந்ததும் ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் கார்த்திக்-ஜோதி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து விக்னேஷ் கார்த்திக் ஜோதியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதுபற்றி தெரிய வந்ததும் ஜோதியின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.

    திருமணம் முடிந்த பின்பு விக்னேஷ் கார்த்திக் கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் திகனாரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதுபற்றி தெரிய வந்ததும் ஜோதியின் தந்தை பால்ராஜ் தாயார் துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் விக்னேஷ கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    அதன்படி அவர்கள் 3 பேரும் விக்னேஷ் கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் மனைவி மற்றும் பெற்றோருடன் விக்னேஷ் கார்த்திக் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது வீட்டுக்குள் திடீரென புகுந்த துளசியம்மா தான் கொண்டு வந்த மிளகாய் பொடியை விக்னேஷ் கார்த்திக் முகத்தில் வீசினார். அந்த நேரத்தில் பால்ராஜ் அரிவாளால் விக்னேஷ் கார்த்திக்கை வெட்டினார். இதில் விக்னேஷ் கார்த்திக்குக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.

    மனைவி, பெற்றோர் முன்னிலையில் விக்னேஷ் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் பால்ராஜ், துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த விக்னேஷ் கார்த்திக்கை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தங்களது எதிர்ப்பையும் மீறி மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், துளசியம்மா ஆகியோர் விக்னேஷ் கார்த்திக்கை கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பால்ராஜ் உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கர்நாடகாவுக்கு விரைந்துள்ளனர்.

    மகளை காதல் திருமணம் செய்த வாலிபரை பெற்றோர் கொலை செய்ய முயன்ற சம்பவம் தாளவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×