என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பலாப்பழத்தை யானை ஒன்று தனது தும்பிக்கையால் பறிக்க முயற்சி செய்தது.
    • வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டி அடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட வனச்சரகத்தில் சிறுத்தை, புலி, யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கரும்பு லாரிகளை வழிமறிப்பதும், கரும்பு தோட்டம் மற்றும் மக்காச்சோள பயிர்களை விவசாயி தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் சமீபகாலமாக யானை பலாப்பழத்தோட்டங்களில் புகுந்து பலாப்பழத்தை ருசித்தும் வருகிறது.

    இந்த நிலையில் கடம்பூர் அடுத்த நடூர் கிராமத்தில் ராமர் என்பவரது தோட்டத்தில் உள்ள பலாப்பழ மரத்தில் உள்ள பலாப்பழத்தை யானை ஒன்று தனது தும்பிக்கையால் பறிக்க முயற்சி செய்தது.

    இது குறித்து ராமர் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடம்பூர் வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து அருகில் உள்ள மக்காச்சோள காட்டிற்குள் விரட்டி அடித்தனர்.

    இதில் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து யானையின் பின்புறம் பட்டாசு வெடித்தபடி சென்றதால் ஆத்திரமடைந்த காட்டு யானை பொது மக்களை திடீரென துரத்தியது.

    இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த ஒற்றையானை வன பகுதிக்குள் மீண்டும் சென்றது.

    தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வரும் ஒற்றை காட்டு யானையை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் எனவும் கூச்சலிட வேண்டாம் எனவும் கடம்பூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீதாலட்சுமி கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி கோம்புபள்ளம் செக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மனைவி கீதா லட்சுமி(49). ராமமூர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 மாதத்திற்கு முன் இறந்து விட்டார்.

    கணவர் இறந்ததில் இருந்து மனவேதனையுடன் இருந்த கீதாலட்சுமி வீட்டின் படுக்கை அறையில் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கோபி:

    கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த அரசு என்கிற ராமன் (19) மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோன்று பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த கவுதம் (20), அஜித்குமார்(21) ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    • பள்ளி வளாகத்துக்குள் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
    • இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது குறிச்சி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள பள்ளி வளாகத்திற்குள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி கட்டிடங்களும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை யிலான உயர்நிலைப் பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி கட்டிடங்களும் உள்ளன.

    இங்கு தொடக்கப்பள்ளி யில் சுமார் 85 மாணவ, மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகளும், உண்டு உறைவிட பள்ளியில் சுமார் 80 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி வளாகத்துக்குள் கடந்த சில நாட்களாக பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. தொடக்கப்பள்ளி சத்துணவு கூடம் பராமரிப்பு பணி முடிக்கப்பட்ட நிலை யில் வெளியில் அமைக்க ப்பட்டிருந்த மெர்குரி லைட் மற்றும் டியூப் லைட் ஆகியவற்றை சில சமூக விரோதிகள் கழட்டி எடுத்து சென்று விட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு வகு ப்பறைகளில் மின்விசிறி, டியூப் லைட், மேசை, ஷேர் ஆகிவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துச் சென்றுள்ளனர். அதே போல் ஆணுறைகள், சசுதாட்ட சீட்டுக்கட்டுகள் போன்றவையும் பள்ளி வளாகத்திற்குள் சிதறி கிடக்கின்றது.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் தளத்தில் உள்ள 10-ம் வகுப்பு வகுப்பறையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று மேசையை சுற்றி சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை அப்படியே விட்டு சென்ற சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அம்மாபேட்டை போலீ சார் விசாரணை செய்து வந்த நிலையில் தொடர்ந்து மீண்டும் சில நாட்களாக அருவருக்கத்தக்க சமூக விரோத செயல்கள் பள்ளி வளாகத்திற்குள் செய்து வருவது அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படு த்தியுள்ளது.

    மேலும் பள்ளி வளாக த்திற்குள் நடைபெறும் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே போலீசார் இரவு நேரங்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் பள்ளிக்குள் வளாகத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பள்ளிக்கு இரவு காவலரை பணியமர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

    • ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூறப்பட்டது.

    கோபி:

    தமிழக அரசு பொறு ப்பேற்றதும் மகளிருக்கான மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க ப்போவதாக அறிவித்தது. இந்த உரிமைத்தொகையை ரேசன் கடை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த படிவங்கள் உரிய முறையில் உண்மையான பயனாளி களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    அதன டிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடை பணியா ளர்களுக்கும் இது தொட ர்பாக ஆலோசனையும், பயிற்சியும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கோபி கோட்டத்தில் உள்ள கோபி, நம்பியூர், சத்திய மங்கலம், தாளவாடி, அந்தி யூர் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் முழுநேர மற்றும் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் 670 ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப திவாளர் ராஜ்குமார் தலைமையில் கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நர்மதா முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி வகுப்பில் பொது விநியோக திட்ட பதிவாளர் கந்தசாமி, கூட்டு றவு சார்பதிவாளரும், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனருமான சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி வகுப்பில், கோபி, அந்தியூர், நம்பியூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானி ஆகிய 6 தாலுகாவில் உள்ள 680 ரேசன் கடைகளில் பணியாற்றும் 468 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் படிவங்களை வழங்குதல், நாள் தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் 160 பேருக்கு மட்டும் படிவம் வழங்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூற ப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோபி குடிமை பொருள் தாசில்தார் கார்த்திக், கோபி வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை போலீசார் எச்சரித்தனர் .

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பகுதியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், காவல்துறை சார்பில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்ததோடு வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை போலீசார் எச்சரித்தனர் .

    இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் 9,622 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் க்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 444 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 9,622 ரூபாய்க்கு விற்பனையானது.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு,

    ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம்,

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி,

    முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மனுக்களை பொற்றுக்கொண்ட அவர் ஒரு பயனாளிக்கு உடனடியாக சைக்கிள் வழங்கினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மாதம் தோறும் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதனடிப்படையில் கோபி கோட்டாட்சியர் திவ்யபிரிய தர்ஷினி தலைமையில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வ ரன் முன்னிலையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோபி, நம்பியூர், பவானி, சத்தி, தாளவாடி, அந்தியூர் தாலுகாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு செல்போன், சைக்கிள், வீட்டு மனை பட்டா, மாற்று த்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், காது கேளாதோருக்கான கருவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினியிடம் அளித்தனர்.

    மனுக்களை பொற்றுக்கொண்ட அவர் ஒரு பயனாளிக்கு உடனடியாக சைக்கிள் வழங்கினார்.

    முகாமில் மாற்றுத்திற னாளிகள் மாவட்ட நல அலுவலர் கோதை செல்வி, சத்தி சமுகநலத்துறை தாசல்தார் மாரிமுத்து, நம்பியூர் சமூக நலத்துறை வட்டாட்சியர் துரைசாமி, தாளவாடி துணை தாசல்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன.

    ஈரோடு:

    ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6 வருடங்களாக கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று மாலையில் நடைபெற்றது.

    இதில் இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் 6 பேரும் பொது நபராக ஒரு வக்கிலும் என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    எனினும் இன்று 7-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன.

    கிட்டத்தட்ட ரூ.600 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு இன்று மீண்டும் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகமான முடிவு ஏற்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆசிப் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு மாதமாக தொட்டம்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சினில் வைத்து ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் தங்கி இருந்த கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆசிப் (36) என்பவரையும் அவருடன் தங்கி இருந்த அவரது நண்பரையும் நேற்று மதியம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக கேரளா மாநிலம் கொச்சினுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பரபரப்பான புதிய தகவல் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கேரளா மாநிலத்தில் சமீபகாலமாக ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இவ்வாறாக திருடப்பட்ட பணம் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கண்டுபிடித்தது.

    இதனை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏ.டி.எம் கார்டுகளை கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆசிப் (35) என்பவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 3 மாதமாக ஆசிப் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பவானிசாகர் போலீசார் உதவியுடன் தொட்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ஆசிப் மற்றும் அவருடன் தங்கி இருந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து கேரளா மாநிலம் கொச்சினுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    ஆசிப் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு மாதமாக தொட்டம்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஆனால் ஆசிப் கடந்த சில மாதங்களாகவே பவானிசாகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.

    ஆசிப் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசுவது கிடையாது. ஆசிப்பை பார்க்க அவ்வப்போது சிலர் வந்து சென்றுள்ளனர். ஆசிப்புக்கு பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து இருக்கலாம் என்ற அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

    தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சினில் வைத்து ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் அவர் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற உண்மையான தகவல் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.
    • அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும்.

    சென்னிமலை:

    கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. 'டெட்ராபேக்' என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சென்னிமலை கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் கூட்டாக அமைச்சர் சு.முத்துசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் அரசின் டாஸ்மார்க் கடைகள் மூலமாக விற்கப்படுகிறது. மதுபானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.

    பெரும்பாலும் இந்த கண்ணாடி பாட்டில்கள் 180 எம்.எல். அளவுள்ள சிறிய பாட்டிகளாகவே உள்ளன. மது அருந்துவோர் இந்த பாட்டில்களை பயன்படுத்திவிட்டு கண்ட கண்ட இடங்களில் போட்டு விடுகின்றனர்.

    குறிப்பாக பாசனக்கால்வாய் செல்லும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சிறு பாட்டில்கள் கொட்டி கிடப்பதை காணலாம். அதோடு வேளாண் விளை நிலங்களில் வேலை செய்யும் பலரும் இந்த பாட்டில்களை வயலில் பல்வேறு இடங்களில் அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

    இந்த பாட்டில்களை சேகரித்து ஒழுங்கு செய்ய இயலுவதில்லை. எனவே வயல் வேலைகளில் டிராக்டர் உழவு செய்யும் போது கண்ணாடி பாட்டில்கள் உடைந்து வேளாண் பணிகள் ஈடுபடுகின்றவர்களை கால்களை வெட்டி விடுகின்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் நெல் அறுவடையில் அறுவடை எந்திரங்கள் இந்த பாட்டில்களையும் நெல்லோடு சேகரித்து விடுகின்றன. அவை நொறுங்கி போய் அரிசியிலும் கூட கண்ணாடி துகள்கள் கலந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்வதால் பெரும்பாலும் கிராமப் புறத்தில் உள்ள வேளாண் விளை நிலங்களையும், கால்வாய்களையும் கடுமையாக பாதித்து வருகின்றது. எனவே அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.

    அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அட்டை பாட்டில்களின் மூலமாக மதுபானங்களை அடைத்து விற்பனை செய்தால் தற்போது கண்ணாடி பாட்டில்களினால் ஏற்பட்டு வரும் பெரும் சூழல் கேடு தவிர்க்கப்பட முடியும்.

    எனவே அரசு கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக அட்டை மூலம் செய்யப்பட்ட பாட்டில்களை 'டெட்ராபேக்' பயன்படுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

    ×