என் மலர்
திண்டுக்கல்
- நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல், செம்பட்டி, மைக்கேல் பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்ல பகலில் போதிய பஸ் வசதி இல்லை.
- பகல் நேரத்தில் கூடுதல் பஸ்களும், இரவு 10 மணிவரை பஸ்களும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழகத்திலேயே 2-வது பெரிய பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகிலேயே வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. நிலக்கோட்டையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
இங்கு பறிக்கப்படும் பூக்கள் நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், வடமாநிலங்களுக்கும், சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் பல்வேறு ஊர்களில் இருந்தும் நிலக்கோட்டை சந்தைக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். திண்டுக்கல், செம்பட்டி, மைக்கேல்பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்ல பகலில் போதிய பஸ் வசதி இல்லை.
இரவு 7 மணிக்குமேல் திண்டுக்கல் செல்ல பஸ்களே இல்லை. இதனால் வியாபாரிகள் வத்தலக்குண்டு, கொடைரோடு போன்ற ஊர்களுக்கு சென்று அங்கிருந்து வேறுபஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீண்அலைச்சலும், காலவிரயமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
தங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி பஸ் செலவுக்கே சென்றுவிடுவதாக வியாபாரிகள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல பகல் நேரத்தில் கூடுதல் பஸ்களும், இரவு 10 மணிவரை பஸ்களும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.
- டைமிங் பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
பழனி:
பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துச்செல்வது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 2 தனியார் பஸ்கள் காலை 7.45 மணிக்கு இயக்கப்பட்டன. பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் திண்டுக்கல்-பழனி சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று 2 பஸ்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் 2 பஸ்களின் ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர்களுக்கு ஒரே நேரத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்கியுள்ளது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினரான சிறுமியை மின்வாரிய அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
- புகாரின்பேரில் மின்வாரிய அதிகாரியை போக்சோ சட்டத்தின் கீழ் செய்து சிறையில் அடைத்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி.காலனியை சேர்ந்தவர் கந்தசாமி(59). இவர் நிலக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மகள் உறவு கொண்ட உறவினர் சிறுமி தங்கியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு சிறுமியை கந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கந்தசாமி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து அவரை கைது செய்து நிலக்கோட்டைமாஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் கந்தசாமி சிறையில் அடைக்கப்பட்டார். மகள் உறவுகொண்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்:
கார்த்திகை மாதத்தில் 30 நாட்களும் பெரும்பாலான வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். திருக்கார்த்திகை நாளில் அனைத்து கோவில்களிலும் லட்சதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றுமுதல் 3 நாட்கள் வீடுகள் மற்றும் கோவி ல்களில் விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்படும். அதனைமுன்னிட்டு திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொழிலில் ஈடுபட்:டு வரும் கஜேந்திரன் என்பவர் கூறுகையில், கார்த்திகை விழாவை முன்னிட்டு களிமண்ணால் ஆன விளக்குகள் தயாரித்து வருகிறோம். இந்த வருடம் புது வரவாக அன்னவிளக்கு அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது. முறத்தில் அன்னலட்சுமி விளக்கு வைத்து தயாரித்துள்ளோம்.
இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர வழக்கமாக தயாரிக்கப்படும் கார்த்திகை விளக்குகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 முதல் ரூ.500 வரை விலையில் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. பஞ்சமுக விநாயகர், மயில்விளக்கு, கஜமுக விளக்கு, தொகுப்பு விளக்கு, தாமரைவிளக்கு உள்ளிட்ட விளக்குகளும் தயாரித்து வருகிறோம்.
திண்டுக்கல் மட்டுமின்றி சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விளக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. 3 இன்ச் முதல் 2 அடி வரை உயரம் கொண்ட விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இடையில் பெய்த மழை காரணமாக விளக்குகள் தயாரிக்கும பணி சற்று தாமதமானது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால் விளக்குகளை உலர வைக்க ஏதுவாக உள்ளது.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் விளக்குகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
- மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த விவசாயியை சராமரியாக அரிவாளால் வெட்டினார்.
- சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது45). விவசாயி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த சின்னை யாவை சராமரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு குடல் சரிந்து கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்ட அவர் மேல் சிகிச்சை க்காக மதுரை அரசுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சின்னையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நத்தம் போலீசார் அரிவாளால் வெட்டிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தாடிக்கொம்பு சவுந்தர ராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை செயல்பட உள்ளது.
- பக்தர்களின்கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையை முன்னிட்டு அவர்களுக்கு அன்னதானமும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட உள்ளது.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தர ராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை செயல்பட உள்ளது.
இந்த கோவிலில் அறங்கா வலர்கள் பதவி ஏற்ற பின்பு கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் குப்பைகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணி காக்கப்படுகிறது.
பக்தர்களி ன்கோரிக்கை களை ஏற்றுஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையை முன்னிட்டு அவர்களுக்கு அன்னதானமும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளையும் அறங்காவலர் குழு சார்பாக சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதுபோன்று பக்தர்க ளின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் அதனை நிறைவேற்றி வரும் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் விக்னேஷ் பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசு தேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம், செயல் அலுவலர் மற்று ம்கோவில் பட்டாச்சாரி யார்கள், கோவில் பணி யாளர்கள் ஆகியோருக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து ரூ.72 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
எரியோடு:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின் பேரில் வடமதுரை, எரியோடு போலீசார் இதுகுறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று எரியோடு கோவிலூர் பகுதியில் பண்ணைக்குளம் என்ற இடத்தில் சேவல் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கோவிலூரை சேர்ந்த பெருமாள், திருமுருகன், குஜிலியம்பாறையை சேர்ந்த காளிமுத்து, நடராஜன், கோம்பையை சேர்ந்த தேவராஜ், தவசிமடையை சேர்ந்த தங்கபாண்டியன், மணப்பாறையை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரம் ரொக்கப்பணம், 2 சேவல்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதி பெறாமல் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஒட்டன்சத்திரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- குறைந்த லாபம் கிடைத்தபோதும் இதனை சில தொழிலாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
கார்த்திைக மாதத்தில் வரும் கார்த்திகை திருகார்த்திகை என கொண்டாடப்படுகிறது. அப்போது வீடுகளில் பல்வேறு அகல்விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடுவார்கள். காலமாற்றத்தால் மெழுகுவர்த்தி மற்றும் ரெடிமேடு விளக்குகளை பயன்படுத்த தொடங்கினர்.
இருந்தபோதும் சில கிராமப்பகுதிகளில் தற்போதும் அகல்விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி பொதுமக்கள் திருகார்த்திகையை கொண்டாடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை மாதத்தில் கார்மேக கூட்டங்கள் மழைபொழியும். காந்தல் மலர்கள் மலரும். இந்த மாதத்தில் கொண்டாடப்படும் திருக்கார்த்திகைக்கு தனிச்சிறப்பு உள்ளது. இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூர், சீரங்கவுண்டன்புதூர், நால்ரோடு, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 1000 விளக்குகள் ரூ.700-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இங்கிருந்து மூலனூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை,தாராபுரம், நத்தம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தினசரி 1000-க்கும் மேற்பட்ட விளக்குகளை தயாரித்து வருகின்றனர். தற்போது ரெடிமேடு மற்றும் மெழுகுவிளக்குகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அகல்விளக்குகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. குறைந்த லாபம் கிடைத்தபோதும் இதனை சில தொழிலாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மலைச்சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
பெரும்பாறை:
கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 23). இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மாலை கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார்.
பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு- கொடை க்கானல் மலைப்பாதையில் ஊத்து என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது அங்கு ள்ள வளைவில் திரும்பி யபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுதர்சன், அவரது நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக மலைப்பாதையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- போதை காளான் விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
- இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 2022 ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையி லான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்த கொடைக்கா னலை சேர்ந்த சந்தோஷ் (வயது32), ராஜபாண்டி (26), பெங்களூருவை சேர்ந்த அகஸ்டின் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போதைப் பொருள் விற்பனை தொடர்பாக வழக்குகள் இருந்தது. இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செங்கமல செல்வன் கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
கொடைக்கானலில் இதுபோன்று தொடர்ந்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கொடைக்கானல் போலீசார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில் நகர் மற்றும் மேல்மலை கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பலர் போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நிகிலேஷ் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
- கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் சுகந்தகுமார்(42). இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், நிகிலேஷ்(17) , பாலையா(15) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
நிகிலேஷ் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது தாய் கதவை திறந்து பார்த்தபோது தனது மகன் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது.
- அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பாப்பாத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது50). இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். 100-நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் மளமளவென தீ பற்றி எரிந்தது.
தீ கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்து வீடு முழுவதும் பரவியதால் அலறி அடித்து துடித்த பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறது போராடி தீயை அணைத்தார். இருந்தபோதும் இந்த தீ விபத்தில் வீட்டின் உடமைகள், பித்தளை, வெள்ளி குத்து விளக்குகள், தங்க ஆபரணங்கள் உட்பட விலையுயந்த பொருட்கள் மற்றும் சேமித்து வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதால் பாப்பாத்தி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தனக்கு அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.






