என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்தவர் மதிவாணன்(65). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் வேலைபார்க்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை குடித்து செலவழித்து வந்துள்ளார்.

    அதிகளவு மதுபோதையில் பாறைக்குளம் பகுதியில் கிடந்த மதிவாணன் இறந்துவிட்டார். அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதில் சிதைந்து காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.
    • திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி சாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 14ந் தேதி டெல்லியை சேர்ந்த ரோகித்ராய் (வயது22), கமல்ராய் (22), மெகந்தர்ராய் (30), அஜய்ராய் (23), மேக்ராஜ் (60) ஆகிய 5 பேர் திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மேஜிக் செய்து காட்ட அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் அளித்தனர்.

    ஆனால் இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர்கள் கல்வி அலுவலக வெளியில் இருந்த அறிவிப்பு பலகையில் நாசுருதீன் கையெழுத்தை ஸ்கேன் செய்து பள்ளிகளில் மேஜிக் செய்ய அனுமதி வழங்கப்ப டுவதாக போலியான சுற்றறிக்கையை தயார் செய்தனர். மேலும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து மேஜிக் ஆசாமிகளை பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுமதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல முயற்சித்தனர்.
    • இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் படிப்பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், படிப்பாதையில் சூடம் ஏற்றக் கூடாது, கோவில் வளாகத்தில் டிரம்செட் அடிக்க கூடாது, கைலி அணிந்து வர கூடாது போன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுமதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். இதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    • திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
    • மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கிராத்தை சேர்ந்த 18 வயது மாணவிக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சேர்ந்த ஆதித்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறி இருவரும் பேசி வந்துள்ளனர். திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதித்யா மாணவியை மிரட்டி என்னை காதலிக்காவிட்டால் 2 பேரும் எடுத்துக்கொாண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் பேசியும் கேட்காத ஆதித்யா தனது நண்பர்களுடன் 2 பைக்கில் மாணவியின் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு அவரது வீட்டை விசாரித்துக் கொண்டிருந்தபோது மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்துவரும்படி கூறினர்.

    பெற்றோர் வந்ததும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • பிரசாதத்துடன் கூடிய கட்டளை தொகை ரூ.1800-ம், பிரசாதமில்லாத கட்டளை தொகை ரூ.300-ம் வசூலிக்கப்படுகிறது.
    • தற்போது கட்டளை தொகை ரூ.5 ஆயிரமாகவும், பிரசாதமில்லாத கட்டளை தொகை ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பொது, கட்டண தரிசன வழிகளில் சென்று தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் கோவிலில் 6 கால பூஜைகளின்போது முருகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரத்தை கண்டு தரிசனம் செய்ய காலபூஜை கட்டளை முறை உள்ளது. இதற்காக பக்தர்களிடம் தொகை வசூலிக்கப்படுகிறது.

    இந்த முறையில் மாலை, பரிவட்டம், பஞ்சாமிர்தம், புளியோதரை உள்ளிட்ட பிரசாதத்துடன் கூடிய கட்டளைக்கு சாதாரண நாட்களில் ரூ.900-ம், மாத சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ரூ.1800-ம் வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல் பிரசாதம் இல்லாத கட்டளை தொகையாக சாதாரண நாட்களில் ரூ.150-ம், விசேஷ நாட்களில் ரூ.300-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் புதிய தரிசன முறை, தரிசன கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக 'இடைநிறுத்த தரிசன முறை' அமல்படுத்துதல், 'தங்கரத புறப்பாடு' கட்டணத்தை உயர்த்துதல் தொடர்பாக பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் விசேஷ நாட்களில் காலபூஜை தற்காலிக கட்டளை தொகையை உயர்த்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது பிரசாதத்துடன் கூடிய கட்டளை தொகை ரூ.1800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், பிரசாதமில்லாத கட்டளை தொகை ரூ.300-ல் இருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாத சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட ஒரு ஆண்டுக்கு 52 விசேஷ நாட்களில் காலபூஜை தற்காலிக கட்டளை தொகை உயர்த்தப்பட உள்ளது என்றார்.

    பழனி முருகன் கோவிலில் தற்காலிக காலபூஜை கட்டளை தொகை உயர்த்தப்படுவதற்கு பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், பழனி முருகன் கோவிலில் அபிஷேக பூஜை பார்ப்பதற்கான (காலபூஜை) கட்டளை தொகை உயர்த்தப்பட உள்ளது. இது, ஏழைகளை கோவிலுக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்கான முன்னோட்டமாக உள்ளதா? என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து இலவச தரிசன முறையை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • தாய், மகள் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆபத்தான நிலையில் லெட்சுமணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 38). இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி (35). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு அருவி (12) என்ற மகளும், கேசவன் (8) என்ற மகனும் உள்ளனர். இவர்களுடன் ராசாத்தியின் தாய் வள்ளியம்மாள் (58) என்பவரும் வசித்து வந்துள்ளார். மாற்றுத் திறனாளியான வள்ளியம்மாள் தனது மகள் மற்றும் மருமகன் வேலைக்கு சென்ற பின்பு வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

    நேற்று இரவு லெட்சுமணன், ராசாத்தி, வள்ளியம்மாள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். குழந்தைகள் 2 பேரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் படிக்கச் சென்று விட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ராசாத்தியிடம் தகராறு செய்தார்.

    இதைப் பார்த்ததும் லெட்சுமணன் மற்றும் வள்ளியம்மாள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியால் சரமாரியாக அவர்கள் 3 பேரையும் குத்தினார்.

    இதில் ராசாத்தி மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் லெட்சுமணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட தாய், மகள் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இக்கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் கொலையாளியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இன்று காலையில் வெளியூருக்கு செல்ல திட்டமிட்ட கொலையாளியை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், இந்தக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் பாலாக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன் மகன் சத்தியபிரியன் (25) என தெரிய வந்துள்ளது.

    இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சத்தியபிரியனும் ராசாத்தியும் ஒரே இடத்தில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதனால் அடிக்கடி ராசாத்தியிடம் அவர் பேசி வந்துள்ளார். மேலும் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு தன்னுடனே வந்து விடுமாறும் நாம் இருவரும் வெளியூர் சென்று சந்தோஷமாக இருக்கலாம் என கூறி வந்துள்ளார். ஆனால் ராசாத்தி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் ராசாத்திக்கு அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ராசாத்தி வீட்டுக்கே வந்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனை தட்டிக் கேட்டதால் அவர்களை சரமாரியாக குத்தியுள்ளார். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
    • வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

    அதன் பின்னர் அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி தொடங்கினார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காக கடந்த 2014ம் ஆண்டு விருது பெற்றார்.

    அதன் பின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.

    2019-ம் ஆண்டில் தர்மபுரியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காகவும் விருது வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்லில் மாநகராட்சி ஆணையராக பதவியேற்ற மகேஸ்வரி ஆர்.எம்.காலனி 1-வது கிராஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் மருந்துகள் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வீட்டுக்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் வந்தனர். அவர்கள் மகேஸ்வரி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வேறு யாரும் அந்த குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது கொரோனா காலக்கட்டத்தில் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் உள்பட மகேஸ்வரியின் உறவினர் 5 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.
    • இரண்டாவது முறையாக மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் தற்போது ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமானது. பின்னர், மழை நின்றபின் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது, திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தற்போது நிறுத்திவைக்கப்பட்டது.

    அப்போது, முகமது கான் 10 ரன்களுடனும், அபிஷேக் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் பாதியில் சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

    இரண்டாவது முறையாக மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் தற்போது ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்படி, 129 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியுள்ளது. ஆட்டத்தில், ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் அஜிதேஷ் குருசுவாமி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

    இதில், அருண் கார்த்திக் முதல் பந்துலேயே அவுட்டானார். இவரை தொடர்ந்து அஜித்தேஷ் களமிறங்கினார்.

    ஸ்ரீ நிரஞ்சன் 14 ரன்களிலும், அஜித்தேஷ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ரித்திக் 18 ரன்களும், சோனு யாதவ் 8 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியாக, சுகேந்திரன் மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகியோர் தலா 11 மற்றும் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், நெல்லை அணி 15.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அபாரமாக வெற்றிப் பெற்றது.

    நெல்லை அணி 15.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி அசத்தலாக வெற்றிப் பெற்றது.

    • லீக் ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமானது.
    • சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

    இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமானது.

    பின்னர், மழை நின்றபின் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தற்போது நிறுத்திவைக்கப்பட்டது.

    அப்போது, முகமது கான் 10 ரன்களுடனும், அபிஷேக் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் பாதியில் சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

    இரண்டாவது முறையாக மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் தற்போது ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 129 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியுள்ளது.

    ஆட்டத்தில், ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் அஜிதேஷ் குருசுவாமி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு தரிசனத்துக்கான சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில், வருகிற 28-ந் தேதி காலை 9.35 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசிய போது கூறியதாவது:-

    கும்பாபிஷேகத்தன்று சாமி தரிசனத்துக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்க்க தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். மேலும் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

    கோவிலை சுற்றியுள்ள இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தரிசனத்துக்கான சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும்.

    பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். கோவில் அமைந்துள்ள இடத்தில் புறநகர் காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணிக்கு போலீசாரை நியமிக்க வேண்டும். பக்தர்கள் நடந்து வரும் நடைபாதைகளின் இருபுறமும் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும்.

    திருவிழா நடக்கும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு அதற்கென அமைக்கப்படும் ஏணி, சாரங்கள் உறுதியாக இருக்கிறதா? என்று பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முக்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அவற்றில் போதுமான அளவு மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போதுமான எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தீயணைப்பு துறையினர் தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். நகரில் அமைந்துள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
    • சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. திண்டுக்கல் டிராகன்ஸ் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. கோவை கிங்ஸ் 3 வெற்றி, 1 தோல்வி யுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ரன்ரேட் அடிப்படையில் திண்டுக்கல் முன்னிலையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், நெல்லை ராயல் கிங்ஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன. சேலம் ஸ்பார் டன்ஸ் 1 வெற்றி, 1 தோல்வி யுடனும், திருப்பூர் தமிழன்ஸ் 1 வெற்றி, 2 தோல்வியுடனும் தலா 2 புள்ளிகள் பெற்று உள்ளன.

    பால்சி திருச்சி 3 ஆட்டத்திலும், மதுரை பாந்தர்ஸ் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை. டி.என்.பி.எல். போட்டியின் 13-வது `லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. திருப்பூர் அணியுடன் 7 விக்கெட்டில் தோற்றது. அந்த அணி சேலத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் திருச்சியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • தங்கரத புறப்பாடு கட்டணத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு கட்டணம் உயர்த்துவது குறித்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.அதேபோல் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் உள்ளிட்ட வழிபாடு முறைகளிலும் கலந்துகொள்கின்றனர்.

    இதில் தங்கரத புறப்பாடு என்பது பழனி முருகன் கோவிலில் தினமும் மாலை 7 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அல்லது தங்கரத புறப்பாட்டில் கலந்துகொள்ளும் நாளன்று மாலை 5 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்யலாம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் குத்துவிளக்கு, முருகன் படம், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், பித்தளை விளக்கு, தேங்காய், பழம், லட்டு, பழனி தல வரலாறு, எவர்சில்வர் குடம் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கோவில் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள திட்டம் தயாரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே தற்போதைய விலைவாசி உயர்வுகளை கருத்தில் கொண்டு தங்கரத புறப்பாடு கட்டணத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    இதில் பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். 15-ந்தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் இடைநிறுத்த கட்டண சேவை தொடங்குவது குறித்து பக்தர்களிடம் கருத்து ஆலோசனை கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கட்டண உயர்வுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கரத புறப்பாடு 9 நிலைகளில் இருந்து 15 நிலைகளாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்கதேரை இழுக்கும் நேரம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் கட்டணத்தை ரூ.3ஆயிரமாக உயர்த்துவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×