என் மலர்tooltip icon

    கடலூர்

    பெண்ணாடம் அருகே நள்ளிரவில் விடுதலை சிறுத்தை கட்சி பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது வெண்கரும்பூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் வாழ்த்து பேனர் வைத்திருந்தனர்.அதன் அருகே கட்சி கொடிக்கம்பமும் நட்டு கொடி ஏற்றப்பட்டது.

    இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் திடீரென விடுதலை சிறுத்தை பேனரை கிழித்து சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை இது பற்றிய தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே அங்கு பா.ம.க. வினர் வந்தனர். அவர்கள் பா.ம.க. கொடி கம்பம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் வைத்ததை அகற்றி விட்டு அதை வேறு இடத்தில் நட வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 கட்சியினரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதையொட்டி வெண்கரும்பூர் கிராமத்தில் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூரில் இன்று பட்டப்பகலில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 4 பெண்களிடம் மர்ம மனிதர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் ஜெகதாம்பாள் நகரை சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (வயது 75). இவர் இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த மர்ம மனிதன் ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தான்.

    அப்போது அந்த நகையை ஜெகதாம்பாள் பிடித்தார். இதனால் பாதி நகையை மட்டும் அறுத்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபருடன் ஏறிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதேபோல் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அகிலபிரியா (33), கடலூர் கப்பியம்பேட்டை சேர்ந்த சங்கீதா (25), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெரு சேர்ந்த ஜோதி (19) ஆகிய 3 பேரும் தனித்தனியாக அந்தந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து செல்லும் போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள் வந்து நகையை பறித்தனர்.

    ஆனால் இந்த நகை பறிப்பில் வண்டிபாளையத்தை சேர்ந்த அகில பிரியா நகையை மட்டும் பறித்து சென்றனர். இதில் சங்கீதா மற்றும் ஜோதி ஆகியோர் நகையை பிடித்து கொண்டதால் அவர்களிடம் இருந்து நகையை பறிக்க முடியவில்லை.

    இந்த நகை பறிப்பு சம்பவத்தில் மூதாட்டி ஜெகதாம்பாள் மற்றும் அகில பிரியா ஆகியோரிடம் இருந்து சுமார் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடலூரில் இன்று பட்டப்பகலில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 4 பெண்களிடம் மர்ம மனிதர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து கோவைக்கு மணல் கடத்திய 4 லாரிகளை மந்தாரக்குப்பம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக 7 டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் நாலு மணல் லாரிகள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    பின்னர் 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி கொண்டு கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 லாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் மணல் கடத்தல் தொடர்பான வேறு யாரேனும் இதில் தொடர்பு உள்ளார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் வழியாக மணல் கடத்தி கொண்டு வெளியூருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குடிநீர் குழாயில் புதிய மோட்டாரை பொருத்த கோரி அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது முடப்புளி கிராமம். இங்கு 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி பொதுமக்களின் வசதிக்காக முடப்புளி ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு அந்த ஆழ்துளை மோட்டார் பழுதானது. இதனால் புதிய ஆழ்துளை மோட்டார் அமைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீருக்காக அந்த பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். அவர்கள் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டது.

    கடந்த 15-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் இது பற்றி புகார் மனு கொடுக்க பொதுமக்கள் முடிவு செய்து சென்றனர். ஆனால் கூட்டம் முடிந்து விட்டது என்று அதிகாரிகள் கூறினார்கள். அதனால் அவர்களால் மனு கொடுக்க முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அப்போது அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வந்து விட்டனர்.

    ஆனால் இதுவரை குடிநீர் பிரச்சனை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் முடப்புளி கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

    இதையறிந்த ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை திடீரென்று முடப்புளி கிராமத்துக்கு வந்தனர். அவர்கள் பழுதான பழைய ஆழ்துளை மோட்டாரை அகற்றி விட்டு அதற்குப்பதில் வேறு ஒரு பழைய மோட்டாரை பொருத்த முயன்றனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மோட்டார் பொருத்தும் பணியை தடுத்தனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த இடத்தில் பழைய மோட்டாரை பொருத்தாமல் புதிய மோட்டார்தான் பொருத்த வேண்டும் என்று கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மோட்டார் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதற்கு இன்றுக்குள் புதிய மோட்டார் அமைக்க வேண்டும். இல்லையென்றால் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மை நீர் ஆதாரமாக திகழ்கிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 784கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று குறைந்து 46.35 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 570 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் உள்ள 17 ‌ஷட்டர்களில் 3 ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இந்த ‌ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டன. இந்த தண்ணீர் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள கடலில் கலக்கும்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பரங்கிப்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக இருக்கிறது. எனவே வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விட்டால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், தண்ணீர் தன்மை மாறும் என்று பொதுமக்கள் கூறினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் வெள்ளாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றார். #VeeranamLake
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீரம்பூர் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் நடப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு யாரோ? மர்மமனிதர்கள் கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை கீழே இறக்கி அதனை தீ வைத்து எரித்துள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடி எரிக்கப்பட்டு கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து கீரம்பூர் பஸ்நிறுத்தத்துக்கு ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கொடியை எரித்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியல் போராட்டம் சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம்-வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொடியை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    நள்ளிரவு நேரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெய்வேலி அருகே முந்திரி தோப்பில் நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமத்தில் முந்திரி தோப்பு ஒன்று உள்ளது. இன்று காலை அந்த முந்திரி தோப்பின் வழியாக பொது மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

    இதில் சந்தேகம் அடைந்த பொது மக்கள் முந்திரி தோப்புக்குள் சென்று பார்த்து போது 35 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் ஊ.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

    அந்த பெண்ணின் முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டிருந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்து கிடந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த இளம் பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை அந்த பெண்ணின் முகம் சிதைக்கபட்டிருப்பதால் அடையாளம் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண் மாயம் என பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பெண்ணை யாரும் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. 70 கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று அதிகரித்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து காவிரி உபரி நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 27-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 922கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 784 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.95 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 47 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அது அதிகரித்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 4 கனஅடி அதிகமாகும்.

    ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.  #VeeranamLake
    சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூர் அனைத்து கூட்டமைப்பு போக்குவரத்து கழக நிர்வாகிகள் சார்பில் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பின்னர் போக்குவரத்து கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ. பாஸ்கர், பாட்டாளி தொழிற் சங்கம் ஜெய்சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி கருணாநிதி, ம.தி.மு.க. மணிமாறன், தே.மு.தி.க. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று 3-வது நாளாக 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். #kollidamriver

    ஸ்ரீமுஷ்ணம்:

    கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணையை காவிரி நீர் வந்தடைந்தது. அங்கிருந்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு வழியாக கொடியம் பாளையத்தில் வங்க கடலில் கலக்கிறது.

    இந்த நிலையில், கடலுக்குள் நீர் உள் வாங்காததால், வெள்ள நீர் எதிர்த்து பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்துள்ளது. அந்த நீர் கரையோரம் உள்ள கீழகுண்டலபாடி, திட்டுக் காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 7 கிராமங்களை நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இன்று 3-வது நாளாக 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு இன்னும் தண்ணீர் வடிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பெராம்பட்டு, திட்டுகாட்டிற்கும், இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அங்கு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்களது அவசர தேவைக்காக படகு மூலம் திட்டுக்காட்டூருக்கு சென்று வருகிறார்கள். படகில் அதிகபேர் செல்வதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சிதம்பரத்தை அடுத்துள்ள வல்லம்படுகை அருகே எருக்கன்காட்டு படுகையில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொள்ளிட கரையோர கிராமங்களில் உள்ள படுகை பகுதியில் பயிர் செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கு, வாழை, நெல், கத்திரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதற்கிடையே கர்நாடகா அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொள்ளிட கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளம் பாதித்த கிராமங்களை பாண்டியன் எம்.எல்.ஏ., சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் அமுதா ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் உங்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதிகள் செய்து தருகிறோம் எதற்கும் கவலைப்படவேண்டாம். 24 மணி நேரமும் தீயணைப் புதுறையினர் மீட்பு பணி யில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறினர்.

    வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 16 கனஅடி அதிகமாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து காவிரி உபரி நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 27-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1046 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 922 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.85 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 46.95 கனஅடியாக உயர்ந்து உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அது அதிகரித்து 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 16 கனஅடி அதிகமாகும்.

    ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #SchoolCollege #Holiday
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தேன் வயலில் உள்ள வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர் மழையால் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, முக்குருத்தி, பைக்காரா, கிளண்மார்கன் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டன. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் ஆற்றை கடந்து பவானிசாகர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.   #HeavyRain #SchoolCollege #Holiday
    ×