என் மலர்
கடலூர்
சிதம்பரம்:
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளையும் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. கோவிலில் சிவ காம சுந்தரி சமேத நடராஜ பெருமாள் வீற்றிருக்கும் சித்சபை பிரகாரத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவிலில் இருந்து மழைநீர் வெளியேறும் சுரங்க பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் தான் கோவிலுக்குள் மழைநீர் குளம் போல் தேங்கியது என கூறப்படுகிறது. நடராஜர் கோவில் உட்புற வளாகத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமயிலான அதிகாரிகள் நடராஜர் கோவிலுக்கு விரைந்து சென்றனர். கோவிலில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றும் பணியை துரிதபடுத்தினர். அதன் பின்னர் கோவிலில் தேங்கி நின்ற மழைநீரை மின்மோட்டார்கள் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர்.
இதை தொடர்ந்து பக்தர்கள் வழக்கம் போல் கோவிலுக்கு வரலாம் என கோவில் தீட்சீதர்கள் தெரிவித்தனர். நடராஜர் கோவிலில் மழைநீர் வடிந்து செல்லும் சுரங்கபாதையில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்யும் பணியும் நடந்து வருகிறது.
கடலூர்:
வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. புயல் வலுவிழந்தாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக சிதம்பரம் பகுதியில் ஒரே நாளில் 36 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட 87 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதுதவிர அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள மழைநீரும் கடைமடை பகுதியான சிதம்பரம் பகுதிக்கு வந்து சேர்ந்தது.
வீராணம் ஏரியில் 4,244 கனஅடி நீரும், பெருமாள் ஏரியில் 6,257 கனஅடி நீரும், வாலாஜா ஏரியில் 2,727 கனஅடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, கிள்ளை உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்தது.
இதனால் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவு போல ஆனது. அந்த பகுதி மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தத்தளித்தனர்.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர்களை 382 பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தண்ணீர் அப்படியே நிற்பதால் கடலூர் மாவட்டம் கடலாக காட்சி அளிக்கிறது.
பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் கடலூர்-சிதம்பரம் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட நகர் களில் மழை வெள்ளம் வடியவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் தவித்தபடி உள்ளனர். குறிப்பாக அண்ணாமலை நகர், தேவதாஸ் நகர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஆர்.வி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். இன்றும் 5-வது நாளாக கடலூர் நகர், பண்ருட்டி, கண்டரக் கோட்டை, காடாம்புலியூர் ஆகிய பகுதிகளில் மழை நீடித்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் வடிய வழியில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்தபடி உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் 2 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்தது. இதில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இது தவிர வாழை, மணிலா, கரும்பு, காய்கறி செடிகளும் பாதிப்படைந்துள்ளன.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. கன மழைக்கு 4 பேர் இறந்துள்ளனர். 778 வீடுகள் சேதமடைந்துள்ளன. என்றாலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதன்படி புதுச்சத்திரம் பகுதியில் உள்ள பரவனாற்றில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் அந்த பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை மூழ்கடித்து உள்ளது.
இதனை அறிந்த இறால் பண்ணை உரிமையாளர்களான சீர்காழியை சேர்ந்த இளங்கோவன் (வயது 50), இளமாறன் (24), காயல்பட்டு பகுதியை சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் காயல்பட்டு பகுதியில் உள்ள தங்களது இறால் பண்ணைக்கு சென்றனர்.
அங்குள்ள தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தபோது பரவனாற்று வெள்ளத்தில் சிக்கினர். கண்இமைக்கும் நேரத்தில் காட்டாற்று வெள்ளம் 3 பேரையும் அடித்து சென்றது. அவர்கள் உயிர் பிழைக்க அபயகுரலிட்டனர்.
தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரையும் படகு மூலம் மீட்டனர். அதன்பின்னரே அவர்கள் நிம்மதியடைந்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர் பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக செம்பேரி, தெத்தேரி பாதை சவுந்திர சோழபுரம், கோட்டைக்காடு தரைபாலம், பெண்ணாடம், கோனூர் தரைபாலம், தொளார், மோலூர் தரை பாலம், திட்டக்குடி, நெடுங்குளம் தரைபாலம், மங்களூர், அடரி தரைபாலம், தீவளூர், சாத்துக்கூடல் தரைபாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தரைபாலங்கள் மழை வெள்ளத்தில் முழ்கியது.
எனவே 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் மாற்றுபாதைகளான சுமார் 10 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் முழுவதும் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.
தற்போது உருவான புரெவி புயலால் கடந்த 3 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள கோவில் குளங்கள் நிரம்பி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களான பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, புதுப்பாளையம் ராஜகோபாலன்சுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், விருத்தகிரீஸ்வரர், புதுப்பேட்டை காசிவிசுவநாதர் உள்பட 85 கோவில்களில் குளங்கள் உள்ளன.
அதேபோல் நெல்லிக்குப்பம் பூலோகநாதர், குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன், வடலூர் சத்தியஞானசபை, சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் உள்பட 25 கோவில்களில் உள்ள குளங்கள் தற்போது முழுவதுமாக நிரம்பி உள்ளன.
மீதம் உள்ள 60 கோவில் குளங்கள் பகுதியளவு நிரம்பி உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்க கடலில் உருவான புரெவி புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது.
குறிப்பாக கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரே நாளில் 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. கனமழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள சிவகங்கை குளம் 43 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
கனமழையால் சிதம்பரம் நகர் பகுதியில் மட்டும் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் தவித்தனர். நேற்று இரவும் 2-வது நாளாக சிதம்பரம் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டியது.
ஒரேநாளில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் மழை தூறி கொண்டே உள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் ‘நிவர்’ புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.
இன்று காலையிலும் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 218 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 78 ஏரிகள் முழு கொள்ளவை அடைந்துள்ளன. மற்ற 140 ஏரிகளும் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 6½ அடி. தற்போது ஏரிக்கு 9,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியின் உத்தரவின் பேரில் பெருமாள் ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 9,800 கன அடி தண்ணீரை அப்படியே வெளியேற்ற உத்தர விட்டார்.
இதைத்தொடர்ந்து பெருமாள் ஏரியில் இருந்து 9,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீரால் ஏரியை சுற்றியுள்ள ஆதிநாராயணபுரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம், அகரம், பூண்டியாங்குப்பம், பெரியப்பட்டு, பூவாலை உள்ளிட்ட 23 கிராமங்களுக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதேபோல் வெள்ளப் பாதிப்பால் தவிக்கும் பொதுமக்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை பெய்த காரணத்தினால் கடலூர் நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.
குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம், கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், புதுப்பாளையம் ,திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், சுனாமி நகர், சான்றோர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், கடலூர் பாலூர் சாலை மற்றும் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளம் போல் காட்சி அளித்து முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் மழைநீர்சூழ்ந்து குளம் போல் காட்சி தருகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் நகராட்சியில் இன்று காலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ள அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில தினங்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.
வீராணம் ஏரிக்கு வடவாறு மற்றும் செங்கால்ஓடை வழியாக 4,205 கன அடி தண்ணீரும், அந்த பகுதியில் உள்ள மழைநீர் 1,467 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருக்கும் தண்ணீரை வி.என்.எஸ். மதகு வழியாக 2,100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கரைகளை மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் வீராணம் ஏரி பகுதியில் முகாமிட்டு ஏரியை கண்காணித்து வருகின்றனர். வீராணம் ஏரியை சுற்றி உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய் மூலம் 69 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.






