என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள 300 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவித்தனர்.
தற்போது வடவலாற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளிங்கால் ஓடையில் இருந்து 296 கன அடி நீரும்,செங்கால் ஓடையில் இருந்து 355 கன அடி நீரும் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக உள்ளது.
ஏரியின் பாதுகாப்பு கருதி 627 கன அடிநீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் லேசாக மழை தூறி வருகிறது. மழையின் அளவு குறைந்து உள்ளதால் வீராணம் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருந்த மழை வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்து உள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மத்திய குழு அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் மற்றும் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக காரில் கடலூருக்கு புறப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் புயல், மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரவில் நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இன்று முற்பகலில் திருவாரூர், நன்னிலம் பகுதியிலும், பிற்பகலில் மயிலாடுதுறை, சீர்காழி பகுதியிலும் சேதப்பகுதிகளை பார்வையிட உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
பிரார்த்தனையில் பங்கேற்ற முதலமைச்சருக்கு தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் பற்றி கணக்கெடுத்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுக்கு அறிக்கை கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
ஒரே நேரத்தில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த போதிய நிதி தேவைப்படுகிறது. புரெவி புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும்.
கனமழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்; தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படும். வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 26-ந் தேதி மரக்காணம்-மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் வலுவிழந்து சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
சுழன்று வீசிய காற்றுக்கு கடலூர் மாவட்டத்தில் வாழை மரங்கள் உள்பட ஏராளமான பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். இதனை அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அன்றைய தினமே கடலூர் வந்தார். பின்னர் புயல் சேதங்களை ஆய்வு செய்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த புயலின் தாக்கம் மறையும் முன்பு அடுத்து புரெவி புயல் கடலூர் மக்களை புரட்டிப்போட்டது. வரலாறு காணாத அளவில் மழை பொழிந்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
ஒரே நாளில் மாவட்டத்தில் 44 செ.மீ. மழை பதிவானதால் வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள்ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தது. இந்த ஏரிகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தது.
அடைமழை காரணமாக 300 கிராமங்களை மழைவெள்ளம் சூழ்ந்தது. எனவே இந்த பகுதி முழுவதும் தீவுபோல் காட்சி அளித்தது. தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்ட பகுதியில் வெள்ளம் வடியவில்லை. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்த மழைக்கு மாவட்டத்தில் சுமார் 1¼ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதுதவிர வாழை, மணிலா, காய்கறி உள்ளிட்ட பயிர்களும் பாதிப்படைந்தது. இதனால் விவசாயிகள் நிலைகுலைந்துள்ளனர். புயல்சேதம் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
சேதம் குறித்த ஆய்வு அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வசம் சமர்ப்பித்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது முறையாக கடலூர் மாவட்டத்தில் புயல் சேதங்களை பார்வையிட இன்று வருகிறார்.
சென்னையில் இருந்து கார் மூலம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பின்னர் கடலூர் சுற்றுலா மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் முதல் கட்டமாக பெரியபட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு சிதம்பரம் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி இளமையாக்கினார் கோவில் குளம் அருகில் மழையால் உள்வாங்கிய சாலையை பார்வையிடுகிறார்.
இதையடுத்து சாலியதோப்பு பகுதிக்கு செல்லும் அவர் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர்களை பார்வையிட உள்ளார். அதனைத்தொடர்ந்து வல்லம்படுகை செல்லும் அவர் அங்கு மழைவெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குகிறார். இதனை முடித்து கொண்டு கார்மூலம் நாகை மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி பாதுகாப்புக்காக 1,300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்துள்ளதால், மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுரைப்படி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு 2-ந் தேதி முதலும், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு 7-ந் தேதி முதலும் வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கலை அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதேபோல் மருத்துவ படிப்பில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட்டது.
இதையொட்டி 9 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்பட தொடங்கியது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று காலை கனமழை பெய்த போதிலும், 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்ட ஆர்வத்தில் மாணவ- மாணவிகள் மழையை பொருட்படுத்தாமல் கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் அரசு வகுத்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி முக கவசம் அணிந்தபடி வந்தனர். அவர்களை கல்லூரி நுழைவுவாயிலில் நிறுத்தி சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வைத்து, பிறகு அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் சென்றனர்.
மேலும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கல்வி கற்கும் வகையில் ஒரு வகுப்பறைக்கு 20 முதல் 25 மாணவர்கள் வரை அமருவதற்கு ஏற்றபடி வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டபோதிலும் மாணவ- மாணவிகளின் வருகை குறைவாகவே இருந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தர்ம நல்லூர், ஆலிச்சிக்குடி, கார்குடல், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி கிராமங்களை சேர்ந்த குடும்பத்தினர் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சாத்துக்கூடல் உச்சிமேடு கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கிராமத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்த அப்பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர் இடுப்பளவு தண்ணீரில் சென்று உணவு, பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். மேலும் விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், இடுப்பளவு வெள்ளத்தில் தலையில் பால் பாக்கெட்டுகளை சுமந்தபடி சாத்துக்கூடல் உச்சிமேடு கிராமத்துக்கு கொண்டு சென்றார். இந்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வங்ககடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக நீடித்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக பலத்த மழை பெய்துவந்தது. நேற்று மழை சற்று குறைந்திருந்தது.
6-வது நாளான இன்று காலை மீண்டும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழை பெய்தது.
இதனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், நெல்லிக் குப்பம், வண்டிபாளையம், திருப்பாதிபுலலியூர், முதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஆறு போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் மழைவெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் பரபரப்பாக காணப்படும் கடலூர் சாலகள் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆறுகளின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு பலகிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து உள்பட பல்வேறு பயிர்கள் மழைவெள்ளத்தினாள் சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து 6-வது நாளாக கனமழை பெய்வதால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி உள்ளதால் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து தீவுகளாக காட்சியளிக்கிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதைபோல் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான டி.நெடுஞ்சேரி, கருணாகர நல்லூர், நெய்வாசல், திருநாரையூர், புடையூர், டி.குடிகாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராமங்கள் அனைத்தும் தற்போது தீவுபோல் காட்சியளிக்கிறது.
இதனால் அங்குள்ள 5,000 மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் செல்கிறது. இதனால் நெய்வாசல், குச்சியூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளன.
காட்டுமன்னார்கோவில் இந்திராநகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதி யடைந்தனர். அவர்கள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் ஒன்றுதிரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரவேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடிகால் வாய்க் கால்களை துர்வாராததால்தான் தற்போது மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக எங்களது வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மின்சாரமும் இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வாங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. உணவின்றி எங்கள் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும். மழைநீர் வடிந்துசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், தற்போது கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையேற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர் மழையின் காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் மழைவெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அந்த பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் சேத மடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுரபுன்னை காடுகளை கொண்ட சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்துக்கு நாள்தோறும் வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறை சார்பில் இயக்கப்படும் படகுகளில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை கண்டு ரசித்து செல்வார்கள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16-ந்தேதி பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் தமிழக அரசு சுற்றுலா தலங்களை திறக்க உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் நேற்று திறக்கப்பட்டது. இருப்பினும் புரெவி புயல் காரணமாக சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் சுற்றுலா மையத்துக்கு பயணிகள் வரவில்லை. இதனால் சுற்றுலா மையம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா மையம் மூடப்பட்டிருந்ததால் நீண்ட நாட்களாக படகு சவாரி இல்லாமல் வறுமையில் அவதிபட்ட படகு ஓட்டுனர் கள் நேற்று ஆர்வமுடன் வேலைக்கு வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த சுற்றுலா மையம் நேற்று திறக்கப்பட்டு, மழை காரணமாக பயணிகள் வராததால், படகு ஓட்டுனர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கால்நடைகளும் பலியாகி உள்ளன. 20 ஆயிரம் கோழிகள் செத்தன. தொடர்ந்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று 5-வது நாளாக மழை பெய்தது. இருப்பினும் காலை 10 மணி அளவில் திடீரென வெயில் அடிக்க தொடங்கியது. இந்த வெயில் 30 நிமிடம் கூட நீடிக்கவில்லை. அதற்குள் வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை விட்டு, விட்டு பெய்த வண்ணம் இருந்தது. இருப்பினும் கடந்த 4 நாட்களுக்கு பிறகு தான் சூரியனை பார்க்க முடிந்தது. தொடர் மழையால் ஏற்கனவே வீடுகளிலும், வீடுகளை சுற்றிலும் நிற்கும் தண்ணீர் வடியவில்லை. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர் மழையால் தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. இதற்கிடையில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆனாலும் ஏரி, அணைக்கட்டுகளை பாதுகாப்பதற்காக தண்ணீரின் இருப்பு அளவை அதிகாரிகள் குறைத்து வருகின்றனர். இதனால் ஏரி, அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரால் நகர, கிராமப்புறங்களிலும் மேலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதேபோல் குறிஞ்சிப்பாடி அருகே பெருமாள் ஏரி நிரம்பியதால், ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 6 ஆயிரத்து 257 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீராலும், தொடர் மழையாலும் கீழ்ப்பகுதியான கள்ளையங்குப்பம் ஊராட்சி திட்டு வெளி கிராமத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவாக மாறி உள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் அத்தியாவசிய தேவைக்காக தண்ணீரில் நீந்தி மெயின் ரோட்டுக்கு வருகின்றனர். கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், திட்டுவெளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தங்களது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொத்தவாச்சேரி கிராமம் வழியாக குறிஞ்சிப்பாடிக்கு வந்து சென்று வந்தனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொத்தவாச்சேரி-குண்டியமல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தற்போது குள்ளஞ்சாவடி வழியாக 25 கிலோ மீட்டர் சுற்றி குறிஞ்சிப்பாடி வந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்மழையால் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள த.பாளையம் ஊராட்சியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மணிலா, கரும்பு வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கரும்புகள் சாய்ந்து கிடக்கிறது. இதைபார்த்து கவலையடைந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வினாடிக்கு 1,500 கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதனால் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரும், மணவாய்க்கால் மழைத்தண்ணீரும் வீரநத்தம் என்ற பகுதியில் கலந்து செல்வதால் வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக வெள்ளியங்கால் ஓடை கரையோர கிராமங்களான 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மேலும் 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு வினாடிக்கு 64 கன அடி தண்ணீரும், லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 1,500 கன அடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மூலம் வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் திருநாரையூர் கிராமத்திற்கு செல்லும் தார் சாலையில் 4-வது நாளாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை சுற்றியுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பெய்த தொடர்மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அண்ணாமலை நகர்-முத்தையா நகர் பாலம் அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அண்ணாமலைநகர் பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தசாமி நகர், மாரியப்பா நகர், ஆட்டா நகர், புகையிலைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதுதவிர சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தில் இயங்கி வரும் சிதம்பரம் அரசு கால்நடை மருத்துவமனை, கிள்ளை-பிச்சாவரம் சாலையில் எடப்பாளையம் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை சுற்றி குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் கால்நடை மருத்துவமனைக்கு செல்லமுடியாமலும், அங்கன்வாடி மையம் திறக்கப்படாமலும் உள்ளது.






