என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார்கோவிலில் தொடர் மழை- 50 கிராமங்களை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் தவிப்பு
ஸ்ரீமுஷ்ணம்:
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதைபோல் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான டி.நெடுஞ்சேரி, கருணாகர நல்லூர், நெய்வாசல், திருநாரையூர், புடையூர், டி.குடிகாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராமங்கள் அனைத்தும் தற்போது தீவுபோல் காட்சியளிக்கிறது.
இதனால் அங்குள்ள 5,000 மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் செல்கிறது. இதனால் நெய்வாசல், குச்சியூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளன.
காட்டுமன்னார்கோவில் இந்திராநகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதி யடைந்தனர். அவர்கள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் ஒன்றுதிரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரவேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடிகால் வாய்க் கால்களை துர்வாராததால்தான் தற்போது மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக எங்களது வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மின்சாரமும் இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வாங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. உணவின்றி எங்கள் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும். மழைநீர் வடிந்துசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், தற்போது கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையேற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர் மழையின் காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் மழைவெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அந்த பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் சேத மடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






