என் மலர்
செய்திகள்

கடலூரில் 5-வது நாளாக மழை: வடியாத வெள்ளத்தால் மக்கள் தவிப்பு
கடலூர்:
வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. புயல் வலுவிழந்தாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக சிதம்பரம் பகுதியில் ஒரே நாளில் 36 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட 87 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதுதவிர அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள மழைநீரும் கடைமடை பகுதியான சிதம்பரம் பகுதிக்கு வந்து சேர்ந்தது.
வீராணம் ஏரியில் 4,244 கனஅடி நீரும், பெருமாள் ஏரியில் 6,257 கனஅடி நீரும், வாலாஜா ஏரியில் 2,727 கனஅடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, கிள்ளை உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்தது.
இதனால் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவு போல ஆனது. அந்த பகுதி மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தத்தளித்தனர்.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர்களை 382 பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தண்ணீர் அப்படியே நிற்பதால் கடலூர் மாவட்டம் கடலாக காட்சி அளிக்கிறது.
பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் கடலூர்-சிதம்பரம் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட நகர் களில் மழை வெள்ளம் வடியவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் தவித்தபடி உள்ளனர். குறிப்பாக அண்ணாமலை நகர், தேவதாஸ் நகர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஆர்.வி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். இன்றும் 5-வது நாளாக கடலூர் நகர், பண்ருட்டி, கண்டரக் கோட்டை, காடாம்புலியூர் ஆகிய பகுதிகளில் மழை நீடித்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் வடிய வழியில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்தபடி உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் 2 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்தது. இதில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இது தவிர வாழை, மணிலா, கரும்பு, காய்கறி செடிகளும் பாதிப்படைந்துள்ளன.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. கன மழைக்கு 4 பேர் இறந்துள்ளனர். 778 வீடுகள் சேதமடைந்துள்ளன. என்றாலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.






