search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X
    23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    பெருமாள் ஏரி நிரம்பியது - 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி நிரம்பியதையடுத்து 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் ‘நிவர்’ புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.

    இன்று காலையிலும் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 218 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 78 ஏரிகள் முழு கொள்ளவை அடைந்துள்ளன. மற்ற 140 ஏரிகளும் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி உள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 6½ அடி. தற்போது ஏரிக்கு 9,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

    தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியின் உத்தரவின் பேரில் பெருமாள் ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 9,800 கன அடி தண்ணீரை அப்படியே வெளியேற்ற உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து பெருமாள் ஏரியில் இருந்து 9,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீரால் ஏரியை சுற்றியுள்ள ஆதிநாராயணபுரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம், அகரம், பூண்டியாங்குப்பம், பெரியப்பட்டு, பூவாலை உள்ளிட்ட 23 கிராமங்களுக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதேபோல் வெள்ளப் பாதிப்பால் தவிக்கும் பொதுமக்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×