என் மலர்
செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
சிதம்பரம்:
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளையும் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. கோவிலில் சிவ காம சுந்தரி சமேத நடராஜ பெருமாள் வீற்றிருக்கும் சித்சபை பிரகாரத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவிலில் இருந்து மழைநீர் வெளியேறும் சுரங்க பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் தான் கோவிலுக்குள் மழைநீர் குளம் போல் தேங்கியது என கூறப்படுகிறது. நடராஜர் கோவில் உட்புற வளாகத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமயிலான அதிகாரிகள் நடராஜர் கோவிலுக்கு விரைந்து சென்றனர். கோவிலில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றும் பணியை துரிதபடுத்தினர். அதன் பின்னர் கோவிலில் தேங்கி நின்ற மழைநீரை மின்மோட்டார்கள் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர்.
இதை தொடர்ந்து பக்தர்கள் வழக்கம் போல் கோவிலுக்கு வரலாம் என கோவில் தீட்சீதர்கள் தெரிவித்தனர். நடராஜர் கோவிலில் மழைநீர் வடிந்து செல்லும் சுரங்கபாதையில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்யும் பணியும் நடந்து வருகிறது.






