search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    முழு கொள்ளளவை எட்டும் வீராணம் ஏரி

    வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கரைகளை மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த சில தினங்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    வீராணம் ஏரிக்கு வடவாறு மற்றும் செங்கால்ஓடை வழியாக 4,205 கன அடி தண்ணீரும், அந்த பகுதியில் உள்ள மழைநீர் 1,467 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருக்கும் தண்ணீரை வி.என்.எஸ். மதகு வழியாக 2,100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கரைகளை மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் வீராணம் ஏரி பகுதியில் முகாமிட்டு ஏரியை கண்காணித்து வருகின்றனர். வீராணம் ஏரியை சுற்றி உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய் மூலம் 69 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    Next Story
    ×