என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், சித்திரைப்பேட்டை, ராஜாபேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, கிள்ளை, நல்லவாடு உட்பட 49 கிராமங்கள் உள்ளது.
மீன்பிடி தொழிலை நம்பி 1 லட்சம் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் 2,000 பைபர் படகு, 1,500 கட்டுமர படகு, 500 விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கப்படும். இது கடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையிலும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு தொடர்ந்து மீன்கள் கிடைத்திடும் வகையிலும் மத்திய அரசால் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் 2 மாதங்கள் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தற்போது வங்ககடலில் ஏப்ரல் 16 முதல் ஜுன் 15-ந் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் எந்திரம் பொருத்தப்பட்ட 4 ஆயிரம் மீன்பிடி படகுகள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களும் கரை திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடை காலைம் தொடங்கியது. எனவே கடற்கரையில் சுமார் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது. இந்த தொழிலை நம்பி உள்ள ஐஸ் கம்பெனிகளும் முடங்கி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஆந்திரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்னை, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாவட்டத்துக்கு வந்த 12 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 95 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பண்ருட்டியை சேர்ந்தவர் 42 வயது நபர். இவர் கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புவனகிரியை சேர்ந்த 59 வயது முதியவரும், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 322 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் 18 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் 60 வயது முதியவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை உறவினர்கள், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதற்கிடையே புதுப்பேட்டையை சேர்ந்த 51 வயது பத்திர எழுத்தர், கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. இருப்பினும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து கொரோனா வார்டில் பலியான 2 பேரின் உடல்களும், அரசு ஆஸ்பத்திரிஎதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புவனகிரியை சேர்ந்த முதியவரின் உடலை வாங்கிச் செல்வதற்காக நேற்று காலை அவரது உறவினர்கள், கடலூர் அரசு மருத்துவமனை பிணவறைக்கு வந்தனர்.
அப்போது அங்கு கொரோனாவால் இறந்த 2 பேரின் உடல்களும் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புவனகிரியை சேர்ந்தவர்கள் அங்கிருந்த ஒருவரது உடலை அடையாளம் காட்டி, அடக்கம் செய்வதற்காக எடுத்து சென்றனர். பின்னர் அவர்கள் இஸ்லாமிய முறைப்படி அந்த உடலை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் புதுப்பேட்டையை சேர்ந்த பத்திர எழுத்தரின் உடலை வாங்கிச்செல்வதற்காக அவரது உறவினர்கள் மதியம் வந்தனர். அப்போது பிணவறையில் இருந்த ஒரு உடலை, அது பத்திர எழுத்தரின் உடல்தான் என்று நினைத்து அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது, அது பத்திர எழுத்தரின் உடல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அந்த உடலுடன் மீண்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு வந்து, இறந்தவரின் உடல் மாறியது பற்றி தெரிவித்தனர்.
அப்போது தான் புவனகிரியை சேர்ந்தவர்கள் முதியவரின் உடலுக்கு பதிலாக, புதுப்பேட்டையை சேர்ந்த பத்திர எழுத்தரின் உடலை மாற்றி எடுத்துச் சென்று அடக்கம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பத்திர எழுத்தரின் உறவினர்கள், அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறையினரிடம் வலியுறுத்தினர்.
அதன் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள், புவனகிரி தாசில்தார் மற்றும் போலீசார் உதவியுடன் புவனகிரியை சேர்ந்த முதியவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் உடலை தோண்டி எடுக்க விட மாட்டோம் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், பத்திர எழுத்தருக்கு கொரோனா தொற்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறி முதியவரின் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்ட பத்திர எழுத்தரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் முதியவரின் உறவினர்கள், கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பெற்றுச்சென்றனர்.
பின்னர் மாலையில் 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா வார்டில் இறந்த 2 பேரின் உடல்களை உறவினர்கள் மாற்றி எடுத்துச்சென்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
எனவே எப்போது மழை பெய்யும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, வடலூர், குள்ளஞ்சாவடி, வன்னியர்பாளையம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இன்று காலை கனமழை பெய்தது.
பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், அண்ணாகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் இன்று காலை 6 மணி அளவில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கும்பகோணம் சாலை, சென்னைசாலை, காந்திரோடு, கடலூர் ரோடு, ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஓரளவு வெப்பம் குறைந்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக இன்று அதிகாலை மழை பெய்ததாக வானிலை இலாகாவினர் தெரிவித்துள்ளனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி 18 கி.மீ. நீளமும், 8 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாகவும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமும், பருவமழை காலங்களில் பெய்யும் மழையாலும் நீர்வரத்து அதிகம் இருக்கும்.
இந்த ஏரி மூலம் 44,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு புயல், மழை காரணமாக ஏரி 4 முறை நிரம்பி வழிந்தது. தற்போது ஏரியில் தடுப்புகட்டை கட்டுவதற்காகவும், ஏரியை தூர்வார்வதற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்துள்ளது. தற்போது ஏரி வறண்டு காணப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி வறண்டுபோனதால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

கோடை வெயில் காரணமாக ஏரியின் உள்பகுதி வெடிப்புடன் காணப்படுகிறது. வீராணம் ஏரி வறண்டு போனதால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது மழை பெய்யும் என்று கிராம மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தன. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனை த்து கடற்கரை பகுதிகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் கடலூர் சில்வர் பீச்சில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித தடையும் விதிக்கவில்லை.
இதனால் நேற்று மாலை 4 மணி முதல் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சுக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் படையெடுத்தனர். பின்னர் அவர்கள் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளை மறந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடற்கரையில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். மேலும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். இதில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடலூர் சில்வர் பீச்சுக்கு வரும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்து, முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே கடற்கரைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றனர்.






