search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடலூர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 2 பேர் பலி - உடலை மாற்றி எடுத்துச்சென்று அடக்கம் செய்த உறவினர்கள்

    கடலூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 2 பேர் பலியானார்கள். இதில் உடலை மாற்றி எடுத்துச்சென்று உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். மேலும் உடலை மீண்டும் தோண்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் 60 வயது முதியவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை உறவினர்கள், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதற்கிடையே புதுப்பேட்டையை சேர்ந்த 51 வயது பத்திர எழுத்தர், கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. இருப்பினும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் உயிரிழந்தார்.

    இதையடுத்து கொரோனா வார்டில் பலியான 2 பேரின் உடல்களும், அரசு ஆஸ்பத்திரிஎதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புவனகிரியை சேர்ந்த முதியவரின் உடலை வாங்கிச் செல்வதற்காக நேற்று காலை அவரது உறவினர்கள், கடலூர் அரசு மருத்துவமனை பிணவறைக்கு வந்தனர்.

    அப்போது அங்கு கொரோனாவால் இறந்த 2 பேரின் உடல்களும் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புவனகிரியை சேர்ந்தவர்கள் அங்கிருந்த ஒருவரது உடலை அடையாளம் காட்டி, அடக்கம் செய்வதற்காக எடுத்து சென்றனர். பின்னர் அவர்கள் இஸ்லாமிய முறைப்படி அந்த உடலை அடக்கம் செய்தனர்.

    இந்த நிலையில் புதுப்பேட்டையை சேர்ந்த பத்திர எழுத்தரின் உடலை வாங்கிச்செல்வதற்காக அவரது உறவினர்கள் மதியம் வந்தனர். அப்போது பிணவறையில் இருந்த ஒரு உடலை, அது பத்திர எழுத்தரின் உடல்தான் என்று நினைத்து அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது, அது பத்திர எழுத்தரின் உடல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அந்த உடலுடன் மீண்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு வந்து, இறந்தவரின் உடல் மாறியது பற்றி தெரிவித்தனர்.

    அப்போது தான் புவனகிரியை சேர்ந்தவர்கள் முதியவரின் உடலுக்கு பதிலாக, புதுப்பேட்டையை சேர்ந்த பத்திர எழுத்தரின் உடலை மாற்றி எடுத்துச் சென்று அடக்கம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பத்திர எழுத்தரின் உறவினர்கள், அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறையினரிடம் வலியுறுத்தினர்.

    அதன் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள், புவனகிரி தாசில்தார் மற்றும் போலீசார் உதவியுடன் புவனகிரியை சேர்ந்த முதியவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் உடலை தோண்டி எடுக்க விட மாட்டோம் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், பத்திர எழுத்தருக்கு கொரோனா தொற்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறி முதியவரின் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.

    அதனை தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்ட பத்திர எழுத்தரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் முதியவரின் உறவினர்கள், கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பெற்றுச்சென்றனர்.

    பின்னர் மாலையில் 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா வார்டில் இறந்த 2 பேரின் உடல்களை உறவினர்கள் மாற்றி எடுத்துச்சென்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×