search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

    கடலூர் மாவட்டத்தில் இன்று காலை பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

    எனவே எப்போது மழை பெய்யும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, வடலூர், குள்ளஞ்சாவடி, வன்னியர்பாளையம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இன்று காலை கனமழை பெய்தது.

    பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், அண்ணாகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் இன்று காலை 6 மணி அளவில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கும்பகோணம் சாலை, சென்னைசாலை, காந்திரோடு, கடலூர் ரோடு, ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஓரளவு வெப்பம் குறைந்துள்ளது.

    வெப்பசலனம் காரணமாக இன்று அதிகாலை மழை பெய்ததாக வானிலை இலாகாவினர் தெரிவித்துள்ளனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×