என் மலர்
கடலூர்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகம் எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அ.தி.மு.க. பிரமுகர் அவரது மனைவி சரளா (வயது 44). இவர் அங்குள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுக்கு முன்பு சேகர் இறந்து போனார். எனவே சரளா தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல சரளா வேலைக்கு சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று மாலை வேலை முடிந்து சரளா வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து சரளா புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் சென்று கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
வெளி மாவட்ட, மாநிலம், நாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க கடலூர் மாவட்ட எல்லையில் 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமை, கொரோனா பாதித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கிடையில் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருவோரை கண்காணித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம். அதன்படி மாவட்ட எல்லை பகுதிகளில் 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து வருவோரை கண்காணித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு 70, 80 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தி உள்ளோம். இதன் மூலம் 60 சதவீதம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா நோயாளிகளுக்காக மாவட்டத்தில் 4 ஆயிரத்து 185 படுக்கை வசதிகள் உள்ளது. இதை 8 ஆயிரமாக அதிகரித்து உள்ளோம்.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டு வருகிறோம். தற்போது வரை 8 ஆயிரம் தடுப்பூசி இருப்பு உள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசி பெறப்பட்டு பொதுமக்களுக்கு போடப்படும்.
முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களிடம் ரூ.200 அபராதம் விதித்து உள்ளோம். அதன்படி நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 800 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் இது வரை மொத்தம் ரூ.24 லட்சத்து 61 ஆயிரத்து 100 அபராதம் வசூலித்து உள்ளோம். ஆகவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதை போக்க ஆட்டோ மூலம், உள்ளூர் கேபிள் டி.வி. மூலமாகவும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
இதையடுத்து மாவட்ட எல்லையில் 12 இடங்களில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி வழியாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்த வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பணியில் வருவாய்த்துறையினர், போலீசாரும் இணைந்து ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் கேரளாவில் இருந்து நல்லூர் வந்த ஒருவர், அந்தமானில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், ஆந்திராவில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், பெங்களூருவில் இருந்து கடலூர் வந்த ஒருவர், ராஜஸ்தான், சென்னை, வேலூரில் இருந்து பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி வந்த 5 பேருக்கும், சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 32 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 61 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 775 பேர் குணமடைந்து வீடு திரும்பி நிலையில், நேற்று 120 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 298 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதன் விவரம் வருமாறு:-
அண்ணாகிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பாதித்த 713 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 347 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 277 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இதனால் வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒரே தெருக்களில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையிலும், வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் செல்வதை தடுக்கும் வகையிலும் கட்டுப்பாட்டு பகுதியில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 8 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அண்ணாகிராமம் அடுத்த பி.என்.பாளையம் ரெயில் நிலைய தெரு, திருப்பாதிரிப்புலியூர் மூன் சேடவ் சேம்பர் வீதி, குறிஞ்சிப்பாடி காந்தி நகர் பெரியசாமி தெரு, காட்டுமன்னார்கோவில் வளையகார தெரு, சிதம்பரம் வாகீசன் நகர் 3-வது குறுக்கு தெரு, நெய்வேலி வட்டம் 8 மெழுகுவர்த்தி தெரு, வட்டம் 13 அளவுகோல் தெரு, வட்டம் 15-ல் உள்ள 3ஜி டைப்-1 ஆகிய இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாகும். இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் 18 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளது.






