search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்றபோது எடுத்த படம்.

    கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது

    கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செய்முறை தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

    அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது. இந்த செய்முறை தேர்வை 236 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 27 ஆயிரத்து 76 மாணவ- மாணவிகள் எழுதினர்.

    இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 180 மையங்களில் செய்முறை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் செய்முறை தேர்வு மைய வளாகம், தேர்வு நடைபெற உள்ள மையத்தின் மேஜை, ஜன்னல் மற்றும் ஆய்வக அறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் முன்கூட்டியே கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நேற்று காலை செய்முறை தேர்வுகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்தபடி பள்ளிக்கு வரத்தொடங்கினர். அவர்களை பள்ளியின் நுழைவுவாயில் அருகிலேயே நிறுத்தி ஆசிரியர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். அதன் பிறகு முக கவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து மாணவர்களுக்கு சானிடைசர் திரவம், சோப்பு கொடுத்து அதை பயன்படுத்தி கைகளை கழுவிய பிறகே செய்முறை தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

    இந்த செய்முறை தேர்வானது ஒவ்வொரு குழுவிலும் 25 மாணவர்கள் வீதம் 3 குழுக்களாக மாணவ- மாணவிகளை பிரித்து நடத்தப்பட்டது. அதாவது காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் என 3 குழுக்களாக செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.

    இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியியல், கணினி அறிவியல், புவியியல், கணக்கு பதிவியலும் தணிக்கையியலும் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வை மாணவ- மாணவிகள் முக கவசம், கையுறை அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் செய்தனர்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த செய்முறை தேர்வு வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், செய்முறை தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலை வருகிற 24-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு செய்முறை தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் வருகிற 28-ந் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, செய்முறை தேர்வில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு, பின்னர் மாற்று தேதி அறிவிக்கப்பட்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் என்றார்.

    இதேபோல் விருத்தாசலம் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த தேர்வை விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது பள்ளி துணை ஆய்வாளர் தெய்வசிகாமணி, தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, உடனிருந்தனர்.
    Next Story
    ×