என் மலர்
செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேட்டி அளித்த போது எடுத்த படம்
உளுந்தூர்பேட்டை அருகே நர்சு கொலை: 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - வேல்முருகன்
உளுந்தூர்பேட்டை அருகே நர்சு கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தி.மு.க.வை சேர்ந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வேல்முருகன் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் பகுதியை சேர்ந்த வீரமணி மகள் நர்சான சரஸ்வதியை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அவரது உடலை கழிவறையில் வீசி சென்றுள்ளனர். இது காட்டுமிராண்டிதனமான செயல். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேவேளை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய் துள்ளதை பாராட்டுகிறோம். அதேநேரம் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட நர்சு சரஸ்வதி கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றினார். அவரது தாயும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார்.
இந்த கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து, குற்றவாளிகள் 3 பேருக்கும் அதிக பட்ச தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்க வேண்டும்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக உண்மை நிலை தெரியாமல் சிலர் சமூக வலை தளங்களில் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கட்சி தலைவர்களையும் அவதூறாக பதிவிட்டு வருகிறார்கள். இது பற்றி அறிக்கை விடுகிறவர்கள் இறந்த குடும்பத்திற்கு உதவி செய்தால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கூறுகையில், இந்த கொலையை நாங்கள் அரசியல், சமூகம், சாதி சார்ந்து பார்க்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். சமூக வலைதளங்களில் இவ்வாறாக கருத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து வேல்முருகன், சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்தை பாதிக்கப்பட்ட தந்தை வீரமணி, தாய் ஜெயகாந்தியிடம் வழங்கினர்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் சுரேந்தர், வக்கீல் அணி சுந்தர், மாணவரணி அருள், இளைஞரணி செந்தில், நகர செயலாளர் கமலநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story