என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை கொள்ளை
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகம் எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அ.தி.மு.க. பிரமுகர் அவரது மனைவி சரளா (வயது 44). இவர் அங்குள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுக்கு முன்பு சேகர் இறந்து போனார். எனவே சரளா தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல சரளா வேலைக்கு சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று மாலை வேலை முடிந்து சரளா வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து சரளா புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் சென்று கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள்.






