என் மலர்tooltip icon

    கடலூர்

    குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண், மா்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அண்ணன் போலீசில் புகார் கொடுத்தார்.
    குறிஞ்சிப்பாடி:

    குறிஞ்சிப்பாடி அடுத்த மேலபுதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 29). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் வடலூர் ஆபத்தாரணபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த வைஜெயந்திமாலா (29) என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வைஜெயந்திமாலா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது அண்ணன் வாஞ்சிநாதனுக்கு தகவல் வந்துள்ளது.

    இதையடுத்து வாஞ்சிநாதன், குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், எனது தங்கை வைஜெயந்திமாலா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராஜதுரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக வரதட்சணை கேட்டும், குழந்தை இல்லை எனவும் கூறி கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந் நிலையில் எனது தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஜெயந்திமாலா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வைஜெயந்திமாலாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீசன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் திருவந்தபுரம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவில் முன்பு உள்ள சாலையில் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் திருமண மண்டபங்கள் இயங்கிவருகிறது.

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற்றால் கோவிலில் உள்ள கூடத்தில் திருமணம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக குறைந்த பட்சம் முகூர்த்த நாட்களில் 100 முதல் அதிகபட்சமாக 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வந்தன.

    தற்போது தொற்று நோய் நாளுக்கு நாள் கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவநாத சாமி கோவில் எதிர்புறத்தில் உள்ள மலையில் திருமண கூடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதி இல்லை என ஏற்கனவே கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் கோவில் சுற்றியுள்ள தனியார் மண்டபத்தில் பதிவுசெய்யப்பட்ட திருமணங்கள் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றது. இதற்கு உரிய ஆவணங்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் காண்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து திருமண மண்டபங்களில் அனைத்து சடங்குகளும் முடிக்கப்பட்டு மணமக்கள் ஊர்வலமாக வருகை தந்து கோவில் வெளியில் மூடப்பட்டதோடு, கோவில் வளாகத்திற்குள் வர முடியாத அளவிற்கு இரும்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    இந்த நிலையிலும் கோவில் வெளிப்புறத்தில் சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டனர். ஒரு சிலர் கோவில் முன்பு உள்ள சாலையில் அனைத்து சடங்குகளும் செய்து திருமணம் செய்து கொண்டு சென்றதையும் காணமுடிந்தது.

    இந்தநிலையில் அங்கு கூட்டம் கூடாத வகையில் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்ததை காணமுடிந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் திருவந்தபுரம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவில் முன்பு உள்ள சாலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    சிதம்பரத்தில் தனியார் நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    பெரம்பலூர் மாவட்டம் புதுப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மகன் ஆனந்தராஜ் (வயது 22). இவர் சிதம்பரத்தில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல் பொறியியல் துறையில் இறுதியாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று ஆனந்தராஜ் தனது நண்பர்களுடன் சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் நீச்சல் குளத்தில் குதித்தபோது, அவரது தலை நீச்சல்குளத்தின் சுவரில் மோதியது. 

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஆனந்தராஜ் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் பெண் தர மறுத்த மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மீனவர் மகளின் காதலன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் தாழங்குடா சுனாமிநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65). மீனவரான இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 2-வது மனைவிக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். மனைவிகள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தற்போது 2-வது மனைவியின் மகளுக்கு சுப்பிரமணியன் திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணியன், தேவனாம்பட்டினத்தில் வசிக்கும் தனது முதல் மனைவியின் மகள் வீட்டுக்கு சென்று நிச்சயதார்த்த செலவுக்கு ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு தாழங்குடா புறப்பட்டார்.

    ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர், வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் விடிய, விடிய அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

    இந்த நிலையில் நேற்று காலை தாழங்குடா அருகில் கண்டக்காடு- குண்டுஉப்பலவாடி சாலையோரம் சுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுப்பிரமணியன் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது 2 கால்களின் முட்டியிலும், பின் தலை மற்றும் மூக்கில் ரத்தக் காயங்கள் இருந்தன. மேலும் அவர் தனது மகளிடம் வாங்கிக்கொண்டு வந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக சுத்துக்குளத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவர், சுப்பிரமணியன் மகளை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது அவர் வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தம் வருகிற 26-ந்தேதி நடக்க இருந்ததும் தெரிந்தது.

    இதனால் அந்த வாலிபர், சுப்பிரமணியனிடம் அவரது மகளை தனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததும், அவரை காரில் ஏற்றி, அவரும் அவரது நண்பரும் சேர்ந்து துணியை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெண்ணாடம் அருகே தூக்கில் ரத்தக்காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கார்வண்ணன் மகன் சேரநாதன்(வயது 44) விவசாயி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சேரநாதன், பெண்ணாடம் அருகே பெ.பூவனூர் மணக்காடு பகுதியில் ஒரு கூரை வீட்டில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சேரநாதன், வீட்டில் ரத்தக்காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேரநாதனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சேரநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சேரநாதனின் தந்தை கார்வண்ணன் பெண்ணாடம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. மகனை யாரோ அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கி விட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேரநாதனை யாராவது அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே வீட்டின் தோட்டத்தில் இருந்த பிளஸ்-1 மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த சின்னபேட்டையை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ஆகாஷ்(வயது 19). இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியிடம் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்ததாக தொிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனது வீட்டின் தோட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு சென்ற ஆகாஷ் திடீரென அந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டோா். உடனே ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கேட்பதற்காக ஆகாஷ் வீட்டிற்கு சென்றனர். அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ் மாணவியின் பெற்றோரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் இதுபற்றி அந்த மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிந்து ஆகாசை கைது செய்தார்.
    மீன்பிடி தடைக்காலம் நடைபெற்று வருவதால், கடலூரில் படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    கடலூர்:

    கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் நடைபெறும். இந்த காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அந்த சமயங்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிபட்டு மீன்குஞ்சுகள் அழியும் நிலை ஏற்பட்டது.

    அதனால் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு 61 நாட்களாக உயர்த்தி அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகளை மீனவர்கள் ஆழ்கடலுக்கு எடுத்துச்சென்று மீன்பிடிக்க கூடாது. ஆனால் சிறிய படகுகளில் கடற்கரையோரத்திலும், 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும் மீன்பிடிக்கலாம்.

    மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் கடலூர் தாழங்குடா பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்திலும், கடலோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி, தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள பழுதினை வெல்டிங் செய்து சரிசெய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி புதிய வலை பின்னும் பணியும் நடைபெறுகிறது. பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒருவார காலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள்.

    அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். ஆனால் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால், தற்போது ஐஸ் கட்டி தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ் கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். தற்போது ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லவில்லை. அதனால் பழுதடைந்த படகுகளை சீரமைத்து வருகிறோம். ஒரு படகை சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. ஒரு வலையை 8 பேர் சேர்ந்து பின்னினால் ஒரு நாளில் முடித்து விடலாம் என்றார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திமுக கொடி கம்பம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது43). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (36).

    இவர்கள் நேற்று இரவு அளவுக்கு அதிகமான குடிபோதையில் அந்த பகுதியில் இருந்த தி.மு.க. கொடி கம்பத்தை கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தினர். அதோடு அங்கு பெயிண்டால் வரையப்பட்டிருந்த தி. மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் படத்தையும் சேதப்படுத்தினர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த தி.மு.க. கிளை செயலாளர் கோதண்டராமன் அங்கு சென்று 2 பேரையும் இதுபற்றி தட்டிக்கேட்டார்.

    ஆத்திரம் அடைந்த சிவகுமார், செல்வம் ஆகிய 2 பேரும் கடப்பாரையால் தி.மு.க. செயலாளர் கோதண்டராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பாக கோதண்டராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து சிவக்குமாரை கைது செய்தார். தப்பி ஓடிய செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்தது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அதாவது கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியிலும், நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கொளஞ்சியப்பர் கல்லூரியிலும், புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான சி.முட்லூர் அரசு கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த 4 மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுவதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள போலீசார், அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

    ஆய்வின்போது கடலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான ஜெகதீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கடலூர் தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    விருத்தாசலம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நின்ற கன்டெய்னர் லாரியை சோதனை செய்யக்கோரி அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இங்கு வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரி ஒன்று, விருத்தாசலம் ஜங்சன் சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் வந்து நின்றது. இதில் சந்தேகமடைந்த தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. கட்சியினர் அங்கு ஒன்று திரண்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கன்டெய்னர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் டிரைவரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து கன்டெய்னர் லாரியை எடுத்துச்செல்லுமாறு கூறினர். அதனை தொடர்ந்து டிரைவர் கன்டெய்னர் லாரியை அங்கிருந்து எடுத்துச்சென்று புதுக்குப்பம் வயலூர் மேம்பாலம் அருகே நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணேசன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் புதுக்குப்பம் வயலூர் மேம்பாலம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு நின்றிருந்த கன்டெய்னர் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், வாக்கு எண்ணும் மையம் அருகே கன்டெய்னர் லாரி நின்றதன் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. எனவே இதை தவிர்க்க கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

    இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கன்டெய்னர் லாரி டிரைவருடன் சப்-கலெக்டர் பிரவீன்குமார் விசாரணை நடத்தினார். அப்போது அவர், வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக திருப்பூரில் இருந்து தேங்காய்நார் ஏற்றி சீல் வைத்து சென்னைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

    இது குறித்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சப்-கலெக்டர் பிரவீன்குமார்,

    இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து கன்டெய்னர் லாரியை சோதனை செய்வதாக உறுதியளித்தார். அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சப்-கலெக்டர் பிரவீன்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், வேட்பாளர்கள் கணேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் தேங்காய் நார் இருந்தது தெரிந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திட்டக்குடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.’
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 60). வீட்டில் இருந்த இவர், திடீரென விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாத 11,881 பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமை போன்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இதை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் குழுவாகவும், போலீசார் தனியாகவும் அபராதம் வசூல் செய்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் 7 உட்கோட்டங்களிலும் முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

    கடந்த 9-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை முக கவசம் அணியாமல் சென்ற 11 ஆயிரத்து 881 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்துள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத 209 பேரிடமும் அபராதம் விதித்துள்ளனர். மொத்தம் ரூ.23 லட்சத்து 83 ஆயிரத்து 650 அபராதமாக வசூலித்து உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×