என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 316 பேர் பலியான நிலையில், 27 ஆயிரத்து 284 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 316 பேர் பலியான நிலையில், 27 ஆயிரத்து 284 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    சிதம்பரத்தை சேர்ந்தவர் 79 வயது முதியவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 61 வயது பெண், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பண்ருட்டியை சேர்ந்த 81 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதற்கிடையே நேற்று 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, சென்னை, கோவை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் வந்த 19 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 74 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 99 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

    இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் நேற்று மட்டும் 310 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட 924 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 526 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    கடலூர்:

    நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதற்காக கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 750 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் மகப்பேறு, அறுவை சிகிச்சை, குழந்தை வார்டுகள் போக 250 படுக்கை வசதிகள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் வரை 250 படுக்கைகளிலும் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதை தாண்டியும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால், அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். சிலர் அங்கு பணியாற்றி வந்த செவிலியர்கள், ஊழியர்களிடம் தகராறு செய்து, தங்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

    இது பற்றி மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபுவிடம் கேட்ட போது, நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளின் தேவைக்கேற்ப சில வார்டுகளை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றி வருகிறோம்.

    தற்போது கூடுதலாக 100 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம். ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்ட பழைய மகப்பேறு பிரிவு கட்டிடம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதால், தற்போது தடுப்பூசி போடும் பணி காசநோய் பிரிவு வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.
    கொரோனா வைரஸ் அச்சத்தால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோன வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாநில அரசு வாரத்தில் 6 நாட்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட பொதுமக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும், தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா 2-வது அலை அச்சத்தாலும் கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை 8 மணிக்கு பொதுமக்கள் குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து செவிலியர்கள், பொதுமக்களிடம் ஆதார் அட்டை எண் பெற்றுக்கொண்டு அவர்களது விருப்பத்திற்கேற்ப கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை போட்டனர்.

    நேற்று மட்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 6 தனியார் மருத்துவமனைகள், 111 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் ஒரே நாளில் 3,055 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 96 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
    வேப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா, இறந்து விட்டார். இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகாலட்சுமி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரியில் கிசிச்சை பெற்று வந்த சிதம்பரம் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். (வயது 44). இவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார். அப்போது ராஜ்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    அதனை தொடர்ந்து ராஜ்குமார் சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் இன்று காலை இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் 1,800 சிறிய, பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இது தவிர புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இந்த புதிய கட்டுப்பாடுகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், இருப்பினும் கோவில் பணியாளர்கள் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விழாக்கள் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

    இந்நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கடலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில கோவில்களில் வெளிப்புற கதவுகள் மூடப்பட்டன. இருப்பினும் கோவில் பூசாரிகள், குருக்கள் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். இது பற்றி இந்து சமய அறிநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 1800 சிறிய மற்றும் பெரிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப் பட்டது. இருப்பினும் கோவில் பணியாளர்கள் மூலம் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவிலுக்குள் செல்லும் பணியாளர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கோவிலுக்குள் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கோவில்களில் திருமணம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சித்திரை பெருவிழா போன்ற விழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

    மேலும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு சன்னதி கோபுர வாசலில், தெற்கு, மேற்கு, வடக்கு கோபுர வாயில்கள் மூடப்பட்டது. கிழக்குவீதி கோபுர வாசல் மட்டும் திறந்துள்ளது. அதன் வழியாக குறைந்த அளவிலான தீட்சிதர்கள் மட்டும் சென்று 6 கால பூஜையை செய்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தீட்சிதர்கள் தரப்பில் கூறுகையில், நடராஜருக்கு தினசரி 6 கால பூஜை நடைபெறும், பொதுமக்கள், பக்தர்களுக்கு நடராஜரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில், நேற்று 2-வது நாளாக 20-க்கும் மேற்பட்ட மணமக்கள் கோவில் முன்பு வந்து நடுரோட்டில் நின்றபடி திருமணம் செய்துக்கொண்டு, கோபுர தரிசனம் செய்து சென்றனர்.

    கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற போதிலும், ஏராளமான பக்தர்கள் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனா பரவல் காரணமாக சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி ஆகிய 3 நுழைவு வாயில்களும் அடைக்கப்பட்டது. கீழ சன்னதி வாயில் மட்டும் மூடப்படாமல் உள்ளது.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்தும்பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் முதல் கட்டமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு சார்பில் மேலும் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அதில் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி ஆகிய 3 நுழைவு வாயில்களும் நேற்று இரவு முதல் அடைக்கப்பட்டது. கீழ சன்னதி வாயில் மட்டும் மூடப்படாமல் உள்ளது.

    பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டுள்ள நிலையில் தீட்சிதர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று வழக்கமான பூஜைகளை செய்ய அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.
    தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). தொழிலாளியான இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டத்தில் 35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
    கடலூர்:

    கொரோனா பரவலை தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் தடையை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து, அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளில் அபராதம் வசூலித்தனர். இது தவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்தியாவசிய தேவைக்காக வந்தவர்களை உரிய விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு சென்றவர்களை திருமண அழைப்பிதழை காண்பித்த பிறகே அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 25). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் சிவப்பிரகாஷ், முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் சிவப்பிரகாஷ், வீட்டில் இருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவப்பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சிவப்பிரகாசின் உடலை முழுமையாக பரிசோதனை செய்த பின், கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று உறவினர்கள் தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாளில் தனியார் நிறுவன ஊழியர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநில அரசுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,782 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநில அரசுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து போலீசார், வருவாய்த்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

    மேலும் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் 26 குழுக்களாக பிரிந்து கிராமம் கிராமமாக சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகளிலும், 103 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 9 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 635 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 97 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 23 ஆயிரத்து 538 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

    அதாவது வயது அடிப்படையில் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட 1,640 பேரும், 25 முதல் 40 வயது வரையுள்ள 10 ஆயிரத்து 215 பேரும், 40 வயது முதல் 60 வயது வரையுள்ள 57 ஆயிரத்து 378 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 36 ஆயிரத்து 662 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 2,782 போ் தடுப்பூசி போட்டுள்ளனா். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சத்திரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சிவகுருநாதன். இவர் சம்பவத்தன்று புதுச்சத்திரம் அருகே உள்ள சீனிவாசபுரம் குறுக்கு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த மோட்டார் சைக்கிளை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் வழிமறித்தார். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, ஆபாசமாக திட்டி, தாக்கி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சக போலீசார் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் அவர் ஆலப்பாக்கம் குறவன்மேடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் நிரபு (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கைதான நிரபு மீது, புதுச்சத்திரம், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், சீர்காழி, மாயவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15 வழக்குகள் உள்ளன. மேலும் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அவர் மீது ரவுடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, நிரபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, ரவுடியான நிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபுவிடம், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
    ×