search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனைச்சாவடியில் வாகன ஓட்டி ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது எடுத்த படம்.
    X
    சோதனைச்சாவடியில் வாகன ஓட்டி ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது எடுத்த படம்.

    12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா பரிசோதனை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    கடலூர்:

    வெளி மாவட்ட, மாநிலம், நாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க கடலூர் மாவட்ட எல்லையில் 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமை, கொரோனா பாதித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கிடையில் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருவோரை கண்காணித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம். அதன்படி மாவட்ட எல்லை பகுதிகளில் 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து வருவோரை கண்காணித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    நாள் ஒன்றுக்கு 70, 80 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தி உள்ளோம். இதன் மூலம் 60 சதவீதம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா நோயாளிகளுக்காக மாவட்டத்தில் 4 ஆயிரத்து 185 படுக்கை வசதிகள் உள்ளது. இதை 8 ஆயிரமாக அதிகரித்து உள்ளோம்.

    45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டு வருகிறோம். தற்போது வரை 8 ஆயிரம் தடுப்பூசி இருப்பு உள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசி பெறப்பட்டு பொதுமக்களுக்கு போடப்படும்.

    முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களிடம் ரூ.200 அபராதம் விதித்து உள்ளோம். அதன்படி நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 800 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் இது வரை மொத்தம் ரூ.24 லட்சத்து 61 ஆயிரத்து 100 அபராதம் வசூலித்து உள்ளோம். ஆகவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதை போக்க ஆட்டோ மூலம், உள்ளூர் கேபிள் டி.வி. மூலமாகவும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

    இதையடுத்து மாவட்ட எல்லையில் 12 இடங்களில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி வழியாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்த வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பணியில் வருவாய்த்துறையினர், போலீசாரும் இணைந்து ஈடுபட்டனர்.
    Next Story
    ×