என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் குடிகாடு பகுதியில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் 50 சதவீத தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இன்று காலை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    கண் இமைக்கும் நேரத்தில் அங்கு பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதனை கண்டு அங்கு வேலைபார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருசில தொழிலாளர்கள் நெருப்பில் சிக்கி கொண்டனர். இதனால் அவர்கள் உயிர் பிழைக்க கூச்சல்போட்டனர்.

    இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். என்றாலும் இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களது பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கடலூர் முதுநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீ விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.

    இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கொரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சாகமூரி செயல்பட்டு வருகிறார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நேற்று அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி முதல் தவணையை அவர் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    பெண்ணாடம் அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் பாலகுமார் (வயது 21). கூலி தொழிலாளியான இவர் கிளிமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

    பாலகுமார் நேற்று அதிகாலை அதேஊரில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பாலகுமாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைகேட்டு பதறிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பாலகுமாரின் உடலை பார்வையிட்டு கதறி அழுததோடு, அவருடைய உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது பாலகுமாரின் கால்களில் ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுபற்றி கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி. மோகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பாலகுமாரின் உடலையும், அவர் பிணமாக கிடந்த இடத்தை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், பாலகுமார் நேற்று அதிகாலை அருகே உள்ள வயலுக்கு சென்று இயற்கை உபாதை கழித்து விட்டு கை, கால்களை கழுவுவதற்காக அதேபகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான பம்பு செட்டுக்கு சென்றபோது, வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தது. மேலும் விளைநிலத்தில் மின்வேலி அமைத்த நபர்கள் அதிகாலையிலேயே, அந்த மின்வேலியை அகற்றிச் சென்றிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து பாலகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சாவுக்கு காரணமான மின்வேலியை அமைத்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கம்மாபுரம் அருகே மதுபோதையில் பெட்டிக்கடைக்காரரை தாக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
    கம்மாபுரம்:

    கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 55). பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். (55) சம்பவத்தன்று இவர் மதுபோதையில் ராஜாராமின் கடை முன்பு நின்று கொண்டு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. 

    இதை ராஜாராம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஞானப்பிரகாசம் ராஜாராமை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஞானப்பிரகாசத்தின் மகன் துரைராஜ் (19) என்பவர் ராஜாராமை தாக்கியதோடு, அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜ், ஞானப்பிரகாசம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    சிதம்பரத்தில் பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆன்லைனில் பங்கு சந்தையில் ஈடுபட்டு வந்தார். 

    இதில் அவருக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் பாரதிசாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வாடகை பாத்திரக்கடை முன்பு வண்டிப்பாளையத்தை சேர்ந்த கணேசன் (வயது 78) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், ரூ.120 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் வாய்க்கால் சந்து பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, அங்கு கண்ணகிநகரை சேர்ந்த ஜோதி (51) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம் அருகே சிறுமியை கடத்தி சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர் பட்டுசாமி மகன் ஜோதிவேல் (வயது 30). இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதிவேலை போலீசார் கைது செய்தனர்.
    அண்ணியை கேலி செய்தவர்களை கண்டித்த கொழுந்தனை கொலை செய்த 6 போ் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அடுத்த ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா (வயது 24). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் நின்று கொண்டிருந்த 6 பேர், பிரியாவை ஆபாச வார்த்தையால் திட்டி கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது.

    பின்னர் வீட்டுக்கு வந்த பிரியா இதுபற்றி தனது கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தார். இதையடுத்து ரவிச்சந்திரன், தனது மனைவியை கிண்டல் செய்தவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ரவிச்சந்திரனை அவர்கள் தாக்கினர். இதுபற்றி அறிந்ததும் ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரியும்(36) அங்கு சென்று, அவர்களை கண்டித்தார்.

    இதில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து அவரை கல்லால் தாக்கி விட்டு தப்பி ஓடினர். பலத்த காயமடைந்த வையாபுரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வையாபுரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வையாபுரியை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் ராமலிங்கம்(27), தன்வேல் மகன்கள் இளவரசன் (38), ரமேஷ்(35), வையாபுரி மகன் செந்தாமரை(25), சங்கர் மகன் ராகுல்(20), அண்ணாமலை மகன் அஜித்குமார்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமலிங்கம் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனாவுக்கு பலியான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலையில் வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் 67 வயது முதியவர். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் மற்றும் அவருடைய மனைவி, மகன், மருமகள், மருமகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், மனைவி, மகன், மருமகன் ஆகியோர் பெரம்பலூர் தனியார் ஆஸ்பத்திரியிலும், மருமகள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

    இதுபற்றி அறிந்த கிராம மக்கள் கொரோனாவால் இறந்தவர்களை இங்கு கொண்டு வந்து அடக்கம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இடுகாட்டுக்கு செல்லும் வழியான அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே சாலையை வேலியால் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனாவால் இறந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் உடலை இந்த வழியாக கொண்டு வரக்கூடாது என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அதற்கு போலீசார் இறந்தவர் உடலை மாற்று வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதையடுத்து காந்தி நகர் பின்புறம் வழியாக ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் உடல், இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத செம்மண்டலத்தில் உள்ள ஒரு பேக்கரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது காய்கறி, மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், டீக்கடைகளை மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும், ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளித்தும் அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இதர அனைத்து வகை கடைகளையும் வருகிற 20-ந் தேதி வரை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, பிற கடைகள் தடையை மீறி திறந்துள்ளதா என போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் கடலூர் நகராட்சி வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கர், அசோகன், சக்திவேல் ஆகியோர் கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் யாரேனும் அரசின் புதிய கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து வைத்துள்ளார்களா? என வீதி வீதியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது செம்மண்டலத்தில் உள்ள ஒரு செல்போன் கடை தடையை மீறி திறக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளரை எச்சரித்தனர். பின்னர் கடையில் இருந்து ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.

    இதேபோல் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த கோண்டூரில் உள்ள ஒரு கடைக்கும், கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்த ஒரு கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத செம்மண்டலத்தில் உள்ள ஒரு பேக்கரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைகளின் போது புதுநகர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், மணிகண்டன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோல் சிதம்பரம் பகுதியில் தாசில்தார் ஆனந்த், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி மேற்பார்வையாளர்கள் ராஜாராம், தில்லைநாயகம், சுதாகர், காமராஜ் ஆகியோர் சிதம்பரம் பகுதியில் யாரேனும் அரசின் புதிய கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து வைத்துள்ளார்களா? என வீதி வீதியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    உமையாள் சந்து, மேலவீதியில் 2 கடைகள் அரசின் விதிகளை மீறி திறந்திருந்தன. இதையடுத்து அந்த கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள மீனாட்சிபேட்டை பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் மாணவி அதே பகுதியில் உள்ள தனது பாட்டியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியின் பாட்டி வேலைக்கு சென்றதை அறிந்த மாதேஸ்வரன், மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதுபற்றி அறிந்த மாதேஸ்வரன், மாணவியை மீனாட்சி பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாணவியிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து மாணவியின் தந்தை,கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.
    இன்வெர்ட்டர் பேட்டரி ஒயரை சரி செய்து கொண்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள பழைய வண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 56). இவர் பெத்தாங்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் விவாகரத்து ஆன நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று முருகன், வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் பேட்டரி ஒயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தங்கை சாந்தி கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×