என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 765 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் கர்நாடகா, சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து பரங்கிப்பேட்டை, புவனகிரி, கடலூர், கீரப்பாளையம், குமராட்சி, மங்களூர், நல்லூர், அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் ஆகிய இடங்களுக்கு வந்த 20 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 161 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 583 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 890 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றிருந்தனர். நேற்று ஒரே நாளில் 563 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை 399 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். நேற்று மேலும் ஒருவர் பலியானார்.
அதன் விவரம் வருமாறு:-
நெய்வேலி என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 4036 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 941 வெளி மாவட்ட தனியார், அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 65 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்துவது, என்.எல்.சி. மருத்துவமனை செயல்பாடுகள் தொடர்பாக என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி தாங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, என்.எல்.சி. தலைவர் ராகேஷ் குமார், சுரங்கங்கள் இயக்குனர் பிரபாகர் சவுகி, நிர்வாக இயக்குனர் சுரேஷ்சந்திர சுமன், தலைமை பொது மேலாளர் லட்சுமி காந்தராவ் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தனது சமூக பொறுப்புணர்வு நிதியை கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.மேலும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது :-
என்.எல்.சி. தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. அதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று என்.எல்.சி. அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினோம். கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். அதிகமான உயிரிழப்பு அங்கு ஏற்படுகிறது. அதை தடுப்பதற்காக அரசு விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும்.
ஒரு தெருவில் 3 அல்லது 4 பேர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதியை தனிமைப்படுத்தும் பகுதியாக அறிவிக்க வேண்டும். இதை அங்குள்ள நில எடுப்பு தாசில்தார்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலாக 1000 படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள், செறிவூட்டிகள், சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள அனைத்து மருத்துவ உபகரணங்களும், மருந்துகள், டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் இயங்கக்கூடிய தற்காலிக மருத்துவமனையை துரிதமாக அமைத்து அப்பகுதியில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.
என்.எல்.சி.யில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். தற்போது 100 சதவீத பணியாளர்களுடன் நிர்வாகம் இயங்கி வருகிறது. இதை மாற்றி அரசு அறிவித்தபடி 50 சதவீத பணியாளர்களை சுழற்சி முறையில் பணி அமர்த்த வேண்டும்.
கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கூடுதல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது தொடர்பான குழுவை அரசு அமைத்துள்ளது. இதை மாவட்ட குழுவும் கண்காணிக்கும்.
கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 160 படுக்கை வசதிகள் தயாராகி வருகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கடலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனராக கடந்த 7-ந்தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற மறுநாளே அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று உறுதியானது.
இருப்பினும் அவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதிதாக 853 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 37 ஆயிரத்து 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் இதுவரை இல்லாத நிலையில் 853 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர்களில் கேரளா, சென்னை, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து கடலூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பண்ருட்டி, கம்மாபுரம் ஆகிய இடங்களுக்கு வந்த 10 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரைச் சேர்ந்த 2 நோயாளிகளுக்கும் நோய்த்தொற்று உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 198 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 643 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 618 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றிருந்தனர். நேற்று ஒரே நாளில் 272 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 389 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 10 பேர் பலியாகி உள்ளனர். இதன் விவரம் வருமாறு:-
குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 51 வயது பெண், நெய்வேலியை சேர்ந்த 65 வயது முதியவர், சிதம்பரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகிய 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 72 வயது முதியவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 52 வயது பெண் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 30 வயது ஆண், 68 வயது முதியவர், நெய்வேலியை சேர்ந்த 73 வயது முதியவர் ஆகிய 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 399 ஆக உயர்ந்தது.
இது தவிர கொரோனா பாதித்த 3,874 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 899 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 62 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேவேளையில் கொரோனாவை தடுக்கும் ஓர் ஆயுதமாக இருக்கும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது.
அந்த வகையில் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை 8 மணிக்கே பொதுமக்கள் குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து செவிலியர்கள், பொதுமக்களிடம் ஆதார் அட்டை எண் பெற்றுக்கொண்டு அவர்களது விருப்பத்திற்கேற்ப கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்து போட்டனர்.
இதில் கோவாக்சின் தடுப்பு மருந்து குறைந்தளவே இருந்ததால், இரண்டாவது தவணை செலுத்த வந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி போட வந்தவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நேற்று மதியம்வரை மட்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 6 தனியார் மருத்துவமனைகள், 80 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 17 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருசாலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் என்கிற அருண்குமார். இவர் வேப்பூர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த அருண்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனே வேப்பூர் போலீசார் விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் இருந்த அருண்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் சிறை கைதிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் சாம்பிராணி, ஊதுபத்தி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார்.
இந்த கம்பெனியில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் கம்பெனியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீப்பற்றி எரிந்த சாம்பிராணி, ஊதுபத்தி கம்பெனியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் அந்த கம்பெனியில் இருந்த ஊதுபத்தி தயாரிக்க தேவையான பொருட்கள், சிறு எந்திரங்கள் உள்பட அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து கடைகளும் மதியம் 12 மணிவரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணி செய்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை உள்ளது. அங்கு சிறைக்கைதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே விருத்தாசலம் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது தற்போது விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மூலம் தாலுகா அலுவலகத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி நகராட்சி ஊழியர்கள் மூலம் நடைபெற்றது.






