என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் ஆய்வு செய்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே பகுதியில் 3 அல்லது 4 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியை தனிமைப்படுத்தும் பகுதிகளாக அறிவித்து, தடுப்பு கட்டைகள் வைத்து தெருவை அடைத்து, அந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் நேற்று கடலூர் வந்தார்.

    பின்னர் அவர் கடலூர் கோண்டூர் ஊராட்சிக்குட்பட்ட ரட்சகர் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு எத்தனை பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறதா? சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா? என்று நேரில் பார்வையிட்டார். முன்னதாக பி. முட்லூர், தில்லைவிடங்கன் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் ஊராட்சிகள் கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் மகேந்திரன், செயற்பொறியாளர் பிரபாகர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறியாளர்கள் சீனிவாசன், ரவீன் குமாரி, ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, ஊராட்சி செயலாளர் வேலு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக 60 டாக்டர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பணி நியமன ஆணை வழங்கினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 ஆயிரம் பேரில் சுமார் ஆயிரம் பேர் கடலூர் நகர பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில் கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நேற்று, கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக, மருத்துவ பயிற்சி முடித்த 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் கடலூர் முதுநகரில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்தாலோசித்தார்.

    பின்னர் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.31 லட்சத்தை கலெக்டரிடம் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், தாசில்தார் பலராமன், வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே கூட்டம் முடிந்ததும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்காக 45 வார்டுகளைக் கொண்ட கடலூர் நகராட்சியை 5 மண்டலங்களாக பிரித்து, மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்து கணக்கு எடுப்பு, மருத்துவ முகாம் நடத்துதல் போன்றவை மூலமாக கொரோனா தொற்று இல்லாத நகராட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் முதல் அலைக்கும், 2-வது அலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. தற்போது பரவும் கொரோனா வைரஸ் நுரையீரலை அதிகமாக தாக்குவதால் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால், கடந்த முறை 5 நாட்களில் வீடு திரும்பிய நோயாளிகள், தற்போது 20 நாட்கள் வரையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தற்போது ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை 4 பிரிவுகளாக பிரித்து ஆக்சிஜன் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகரில் சூறாவளியின் கோர தாண்டவத்துக்கு மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மக்கள் இருளில் தவித்தனர்.

    கடலூர்:

    வங்ககடலில் வருகிற 24-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுமையம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கடலூர், நெல்லிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார் கோவில் உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    குறிப்பாக கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகரில் சூறாவளியின் கோர தாண்டவத்துக்கு மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மக்கள் இருளில் தவித்தனர். அதன்பின்னர் மின்துறையினர் விரைந்து செயல்பட்டு சீரமைத்தனர்.

    நேற்று மாலை 6 மணி அளவில் குளிர்ச்சியான காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. அதன் பின்னர் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை நள்ளிரவுவரை நீடித்தது. சூறாவளி காற்றில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பம் சேதமானது.

    கடலூர் அருகே வழிசோதனை பாளையம், அன்னவல்லி, ராமாபுரம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சம்பட்டிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் வாழை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வாழை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நேற்று வீசிய சூறாவளிகாற்றுக்கு 120 ஏக்கர் வாழை மரங்கள் நாசமானது.

    இதுதவிர கடலூர் அருகே மேல் பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், பில்லாலி தொட்டி, வெள்ளப்பாக்கம், தூக்கனாம்பாக்கம், தென்னம்பாக்கம், திருப்பனம்பாக்கம், மேல்அழிஞ்சிப்பட்டு, கீழ்அழிஞ்சிப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் 1000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர் சூறாவளிகாற்றுக்கு சேதமானது.

    இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாடுபட்ட விளைநிலத்தில் நெற்பயிர் இப்படி சாய்ந்து விட்டதே என கண்ணீருடன் தெரிவித்தனர். 

    கடலூர் மாவட்டம் வடலூரில் செல்போன் பேசிய வியாபாரி இடி தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 32). இவர் வடலூரில் பாத்திர கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு ராமலிங்கம் வடலூர் சத்திய ஞானசபை அருகில் உள்ள திறந்த வெளியில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. இதில் மின்னல் தாக்கியதில் உடல் கருகி ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமலிங்கம் உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் வனவிலங்கு நல ஆர்வலர் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரை பள்ளி மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்(வயது 34). கொத்தனரான இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த நாய்க்கு தலையில் புண் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த நாயை ராஜேஷ் கண்ணன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதை கயிற்றால் கட்டி ராஜேஷ் கண்ணன் மற்றும் அவருடைய நண்பர் செல்வராஜ் மகன் முத்துவேல்(36) தெருவில் இழுத்து சென்று சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதனை முத்துவேல் செல்போனில் படமெடுத்து முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கடலூர் வனவிலங்கு நல ஆர்வலர் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிருகவதை தடை சட்டத்தின் கீழ் முத்துவேல், ராஜேஷ்கண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    பெண்ணாடத்தில் காரணமின்றி வெளியே சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக திட்டக்குடி தாலுகா பகுதியில் தொற்று பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஊரடங்கு நேரத்தில் பலர் காரணமின்றி வெளியே சுற்றி திரிந்து வருகிறார்கள். இதுவும் தொற்று அதிகரிப்புக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

    இவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டும், கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து காரணமின்றி வெளியே சுற்றி திரிபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களது முகவரி முழுமையாக பெற்றுக்கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதன் மூலம் அவர்களது உமீழ் நீர் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டு பலர் அலறி அடித்து ஓடுகின்றனர்கள். போலீசாரின் இத்தகையை முயற்சியின் மூலமாக காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் தடுக்கப்படுவதுடன், தொற்று பரவலும் சற்று குறைவதற்கான வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிவருபவர்களிடம் போலீசார் கண்ணியத்தோடு பல்வேறு வகையில் எடுத்துரைத்து வந்தனர். இருப்பினும் இதை பலரும் பின்பற்றவில்லை. இதையடுத்து போலீசார் இத்தகையை முயற்சியை கையில் எடுத்து இருப்பது வரவேற்பே பெற்றுள்ளது. இதே நிலையை மாவட்டம் முழுவதும் செயல்படுத்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 591 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 591 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

    இவர்களில் பெங்களூரு, கேரளா, ஒடிசா, சென்னை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து குமராட்சி, மங்களூர், கடலூர், அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நல்லூர் ஆகிய இடங்களுக்கு வந்த 13 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள காட்டுமன்னார்கோவில், நல்லூர், குமராட்சி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய இடங்களை சேர்ந்த 6 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

    இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 124 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 448 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 453 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றிருந்தனர்.நேற்று 97 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 400 பேர் பலியாகியிருந்தனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

    இதன் விவரம் வருமாறு:-

    விருத்தாசலத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த 70 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் அங்குள்ள அரசு மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    அவர்களுக்கு உமிழ்நீர் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 403 ஆக உயர்ந்தது. கொரோனோ பாதித்த 4,528 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 953 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி 69 ஆக உயர்ந்தது.
    காட்டுமன்னார்கோவிலில் கஞ்சா கடத்திய 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், தமிழ்செல்வன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் லால்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுஅந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிற்குமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 150 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மொத்த எடை 2 கிலோ ஆகும். மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதையடுத்து இவருரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த ஆகாஷ்(வயது 21) என்பதும், இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் மின் நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன்(19) என்பதும், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருவதும், நண்பா்களான இவர்கள் தஞ்சாவூரில் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பண்ருட்டி அருகே அலோபதி முறையில் மருத்துவம் பயின்றதற்கான எந்தவித சான்றும் இல்லாமல் ஆங்கில மருத்துவ முறையில் மருத்துவம் பார்த்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் மருந்தகம் நடத்தி வந்தார்.

    இந்த மருந்தகத்தில் பழனி ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே ஊசி போட்டு மருந்து, மாத்திரை வழங்குவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு புகார் வந்தது.

    இதுகுறித்து பண்ருட்டி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டாக்டர் மாலினி தலைமையிலான மருந்துவ குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது அலோபதி முறையில் மருத்துவம் பயின்றதற்கான எந்தவித சான்றும் இல்லாமல் ஆங்கில மருத்துவ முறையில் அவர் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மருத்துவ குழு மருத்துவர் மாலினி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிந்து தலைமறைவான போலி மருத்துவரை கைது செய்தார். அதோடு மருந்தகத்தை பூட்டிசீல் வைக்க உத்தரவிட்டார். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    கொரோனா ஊரடங்கு காரணமாக பலாப்பழம் விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்தது

    பண்ருட்டி:

    பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலா பழம்தான். எனவேதான் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாப்பழம் சாகுபடி உள்ளது.

    ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும். பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பலாப்பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத்தொடங்கியது. வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக பலாப்பழம் விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்தது

    இதனால் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் வருகை பெரிதும் குறைந்துள்ளது

    கடந்த ஓராண்டாக அமலில் இருக்கும் ஊரடங்கால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பலா வியாபரிகள் இதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    சென்னை, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பலா பழங்கள் விற்க முடியாமல் மண்டியிலே அழுகும் நிலை உள்ளது.

    இதனால் மரத்திலேயே பழுத்து தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பலா விற்பனை நம்பி உள்ள பலா விவசாயிகள், பலா வியாபாரிகள் நிலை கேள்வி குறியாகி உள்ளது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதுபோதையில் மனைவியை குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). சிற்பியாக உள்ளார். இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஆறுமுகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவும் ஆறுமுகம் மது போதையில் வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது மகளிடம் தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்த லட்சுமி, தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டார்.

    இதில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து லட்சுமியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

    இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகத்தின் மகள் கதறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.

    அவர்களை கண்டதும் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லட்சுமியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு லட்சுமி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத், இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 38 ஆயிரத்து 830 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு முன்கள பணியாளர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்கள பணியாளர்கள் பலரும் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் 2 போலீசாருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

    இதையடுத்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 38 ஆயிரத்து 830 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 453 பேர் குணமடைந்துள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 400 பேர் பலியாகி உள்ளனர்.

    ×