என் மலர்
செய்திகள்

சூறாவளியுடன் பலத்த மழை- கடலூர் பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர் சேதம்
கடலூர்:
வங்ககடலில் வருகிற 24-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுமையம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கடலூர், நெல்லிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார் கோவில் உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.
குறிப்பாக கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகரில் சூறாவளியின் கோர தாண்டவத்துக்கு மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மக்கள் இருளில் தவித்தனர். அதன்பின்னர் மின்துறையினர் விரைந்து செயல்பட்டு சீரமைத்தனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் குளிர்ச்சியான காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. அதன் பின்னர் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை நள்ளிரவுவரை நீடித்தது. சூறாவளி காற்றில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பம் சேதமானது.
கடலூர் அருகே வழிசோதனை பாளையம், அன்னவல்லி, ராமாபுரம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சம்பட்டிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் வாழை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வாழை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நேற்று வீசிய சூறாவளிகாற்றுக்கு 120 ஏக்கர் வாழை மரங்கள் நாசமானது.
இதுதவிர கடலூர் அருகே மேல் பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், பில்லாலி தொட்டி, வெள்ளப்பாக்கம், தூக்கனாம்பாக்கம், தென்னம்பாக்கம், திருப்பனம்பாக்கம், மேல்அழிஞ்சிப்பட்டு, கீழ்அழிஞ்சிப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் 1000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர் சூறாவளிகாற்றுக்கு சேதமானது.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாடுபட்ட விளைநிலத்தில் நெற்பயிர் இப்படி சாய்ந்து விட்டதே என கண்ணீருடன் தெரிவித்தனர்.






